
வணக்கம்! என் பெயர் மைதிலி அசோக்குமார். தற்போது டிசிகாப் பள்ளியில் மென்பொருள் பயிற்சி பெற்று வருகிறேன். இந்தப் பயணம் எப்படித் தொடங்கியது, பள்ளியில் நான் எப்படி சேர்ந்தேன். என் வாழ்க்கைப் பயணம் எப்படி ஒரு எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பொதுவாக, குழந்தைகள் மழலையர் பள்ளிக்கு அழுது கொண்டு செல்வார்கள். நான் ஒருபோதும் அழுதது இல்லை. ஆனால், அதற்காக எனக்கு பள்ளிக்கு செல்வது பிடித்திருக்கிறது என்று அர்த்தமில்லை. பள்ளிக்குச் செல்வேன், ஆனால் படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கை கழிப்பதற்கு மட்டுமே நான் பள்ளிக்கு செல்ல விரும்பினேன். தேர்விலும் நான் பெரிதாக ஜொலித்ததில்லை. எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே எடுப்பேன். இருந்தாலும் அக்கம்பக்கத்தினரிடம் முதல் மதிப்பெண் பெறுவேன் என்று சாமாளித்து வந்தேன். ஆனால் எல்லாம் ஆறாம் வகுப்பில் மாறியது. என் பள்ளி ஆசிரியர் என் வீட்டுக்கு பக்கத்தில் குடிபெயர்ந்தார். எங்கே அவர்கள் என்னை பற்றி அனைவரிடமும் கூறி விடுவாரோ என்று பயந்து, அவர்களது பாடத்தில் மட்டும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை பெற முயற்சி செய்தேன். அதுவே நாளடைவில் எனக்கு கல்வியின் மீது சற்று ஆர்வத்தை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை பெற ஆரம்பித்தேன். ஒருவகையில் பார்த்தால் இந்த மாற்றத்திற்கு அந்த ஆசிரியர்தான் பெரிய காரணம்.
புதிய பள்ளி மற்றும் புதிய அனுபவங்கள்
பத்தாம் வகுப்பில் நான் அரசு பெண்கள் பள்ளியில் சேர்ந்தேன். முதலில் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், என் பெற்றோர் சமாதானப்படுத்தியதால் சேர்ந்தேன். ஒரு சில மாதங்கள் சென்ற நிலையில் கோவிட் தொற்று தொடங்கியது. ஊரடங்கு வந்தது. பள்ளிகள் மூடப்பட்டன. நாங்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டோம். அரையாண்டு தேர்வுகளில் நான் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, இறுதித் தேர்வுகளிலும் அதே மதிப்பெண்களை எனக்கு வழங்கினார்கள்.
பதினோராம் வகுப்பில் நான் கணினி அறிவியல் துறையை தேர்ந்தெடுத்தேன். இந்த நேரத்தில் தான் நான் ஒன்றை உணர்ந்தேன். மற்ற பாடங்களை விட கணினி பாடத்தில் நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன், பின்னாளில் கணினி துறையில் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று. பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்தது. நானும் எவ்வாறோ தேர்ச்சி பெற்றுவிட்டேன்.
பொறியியல் கனவு மற்றும் டிப்ளமோ படிப்பு
பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு, நான் பொறியியல் படிக்க விரும்பினேன். ஆனால், போதுமான பண வசதி இல்லாததால் என்னை டிப்ளமோ பயில இல்லத்தில் கூறினார்கள். எனக்கு அதில் சற்றும் விருப்பமில்லை. இருந்தாலும் வேறு வழியின்றி கணினி துறையில் டிப்ளமோ படித்தேன். இங்கும் மற்ற பாடங்களை விட நிரலாக்கம் தொடர்பான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
இரண்டு ஆண்டுகள் மின்னல் வேகத்தில் நகர தொடங்கியது. கடைசி ஆண்டின் போது எனக்கு ஒரு சில நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு வேலை ஒப்பந்தம் இருந்ததால் அதை என் பெற்றோர் நிராகரித்து விட்டனர். கணினித் துறை தவிர மற்ற எல்லா துறைகளுக்கும் வேலை கிடைத்தது. ஆனால் எங்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. நான் இணையத்தில் விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். ஆனால் கணினி தொடர்பாக எந்த வேலையும் கிடைக்கவில்லை.
பல நிறுவனங்கள் பட்டப்படிப்பை விரும்பின. அது என்னிடம் இல்லை. உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாமா அல்லது வேலைக்காக காத்திருக்கலாமா என்று என் மனம் தள்ளாடியது. இதற்கு மத்தியில் எனக்கு வேறொரு எண்ணம் தோன்றியது. நான் இரண்டு வருடங்கள் டிப்ளமோ படித்தேன், இருந்தாலும் பெரிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை. கல்லூரியிலும் பொதுவாக கோட்பாட்டு ரீதியாக மட்டுமே கற்பிப்பதால் அது நேர விரயம் என்று எனக்குத் தோன்றியது. அதனால், கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்குப் பதிலாக நிரலாக்கம் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனங்களை இணையத்தில் தேடினேன்.
எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு
பல்வேறு நிறுவனங்களை தேடிக் கொண்டிருந்த தருணம் அது. அலைந்து திரிந்து கொண்டிருந்த என் கண்களுக்கு எதிர்பாராதவிதமாக, ‘டிசிகாப் பள்ளி’ என்ற பெயர் கண்ணில் பட்டது. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு நிறுவனம் என்பதால், அதன் மீது ஒருவித ஆர்வம் ஏற்பட்டது. உடனே என் ஆசிரியரிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அவர், “எனக்கு அந்த நிறுவனத்தை பற்றி தெரியும். நீ கண்டிப்பாக சேர வேண்டும்” என்றார். அவரது வார்த்தைகள் எனக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. உடனே விண்ணப்பித்தேன்.

இருந்தாலும் என் மனம் அமைதியாக இல்லை. ‘ஒருவேளை நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது? என் எதிர்காலம் என்னவாகும்?’ என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. மறுபுறம், கல்லூரி கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்திருந்தேன். ஏப்ரல் மாதத்தில் என் கல்லூரி படிப்புகள் முடிவடைந்தன. டிசிகாப் பள்ளியின் நேர்காணல் ஜூன் மாதத்தில் வரவிருந்தது. இந்த மூன்று மாத இடைவெளியை வீணாக்க விரும்பவில்லை. எனவே, கிடைத்த இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து, சென்னையில் உள்ள மெட்கோ (Metco) நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பயிற்சி பணியாளராக சேர்ந்தேன். இது எனக்குப் பணி அனுபவத்தையும், சந்தைப்படுத்துதல் குறித்து அடிப்படை அறிவையும் கொடுத்தது.
ஜூன் மாதம் பிறந்தது. டிசிகாப் பள்ளியின் நேர்காணல் நெருங்க நெருங்க என் பதட்டம் அதிகரித்தது. இது என் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு என்பதால், ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உணர்ந்தேன். முதல் சுற்றாகத் தகுதிச் சுற்று (Aptitude Test) நடைபெற்றது. அதில் நான் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது எனக்குச் சற்று தைரியத்தை கொடுத்தது. அடுத்ததாக, மிகவும் சவாலான தொழில்நுட்பச் சுற்று (Technical Round) காத்திருந்தது. அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும், துணிச்சலுடன் எல்லா கேள்விகளுக்கும், எனக்குத் தெரிந்த அளவில் சரியாகவோ தவறாகவோ, பதிலளிக்க முயன்றேன். நான் தேர்ந்தெடுக்கப்பட கடவுளை வேண்டினேன்.
கடைசி மற்றும் முக்கியமான சுற்று, மனிதவள சுற்று (HR Round). இந்தச் சுற்றில் என்னுடைய தன்னம்பிக்கை வெளிப்பட்டது. அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பதிலளித்தேன். இறுதியாக, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அந்த இனிமையான செய்தி வந்தது – “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டீர்கள்!” நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. உடனடியாக மெட்கோ நிறுவனத்தில் நான் செய்து கொண்டிருந்த சந்தைப்படுத்தல் வேலையை விட்டுவிட்டு, முழு மனதுடன் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன். இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம்!
டிசிகாப் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடங்கள்
டிசிகாப் பள்ளியில் அடிப்படை திறன்களைக் கற்றுக் கொள்வதில் இருந்து என் பயணம் தொடங்கியது. மின்னஞ்சல் அனுப்புவது, நாட்குறிப்பு எழுதுவது, புத்தகம் வாசிப்பது போன்றவற்றில் தொடங்கி எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), ஜவாஸ்கிரிப்ட் மற்றும் பலவற்றை நான் கற்க தொடங்கினேன். டிப்ளமோ பயிலும் போது கணினி பற்றி கற்றாலும் அது முற்றிலும் கோட்பாடு அடிப்படையிலேயே இருந்தது. இங்கு எல்லாவற்றையும் செயல்முறையில் கற்றோம்.

ஆரம்பத்தில் எல்லாம் எளிதாக இருப்பது போல் தான் தோன்றியது. பிறகு தான் நிரலாக்க மொழியை கற்பது எளிது ஆனால் தர்க்கரீதியாக அதை செயல்படுத்துவது கடினம் என்று புரிந்துகொண்டேன். அதில் என்னை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டேன். எனது சிந்தனைத் திறனை மேம்படுத்த தர்க்கரீதியான சிக்கல்களைத் தொடர்ந்து தீர்த்து வந்தேன். இது எல்லாவற்றையும் அடிப்படையாக கொண்டு மதிப்பீடு நடந்தது.
இதனை தொடர்ந்து நாங்கள் ஒரு செயல்திட்டத்தில் குழுவாக பணிபுரிந்தோம். இந்த திட்டத்தில் நாங்கள் ஒரு மின்னஞ்சல் வடிவமைப்பு தளத்தை (Email Template Builder) உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நான் ரியாக்ட். ஜே.எஸ் கட்டமைப்பை தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். வெறும் ஜவாஸ்கிரிப்ட் மொழியை பயன்படுத்துவதை விட ரியாக்ட். ஜே.எஸ் உடன் அதை பயன்படுத்துவது சற்று எளிதாக உள்ளது.

வெறும் தொழில்நுட்ப திறனோடு நின்றுவிடாமல் எங்களை அனைத்து விதத்திலும் செம்மைப்படுத்த முயற்சிகளை பள்ளியில் மேற்கொள்கிறார்கள். பணியிட பண்புகள், டோஸ்ட்மாஸ்டர் மன்றங்கள், வெளிநிகழ்வுகளுக்கு செல்வது, நாட்குறிப்பு எழுதுவது என பல புதியவற்றை இங்கு நான் தெரிந்துகொண்டேன். இது தொழில்நுட்ப ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் என்னை வளர்ச்சி அடைய உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் எங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது. ஒரு விளையாட்டை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி அதை உருவாக்குவது வரை பலவற்றை நான் கற்றுக்கொண்டேன். நிரலாக்க மேம்பாடு அல்லது விளையாட்டு மேம்பாடு ஏதாவது ஒன்றில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனக்கு நிரலாக்க மேம்பாட்டில் தான் அதிக ஈர்ப்பு இருந்தது. ஆகையால், அதில் கவனம் செலுத்த நான் முடிவெடுத்துள்ளேன்.
டிசிகாப் பள்ளியில் பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர்களின் கலாச்சாரம், வாழ்நாள் கற்றலுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம், செயல்முறை கல்வி, நிகழ் நேர திட்டங்கள் என எல்லாவற்றையும் நான் மிகவும் ரசிக்கிறேன். இளம் வயதில் தேர்ச்சி பெறுவதற்கே போராடிக்கொண்டிருந்த நான், தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை கண்டால் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம்தான் தொழில்நுட்ப உலகில் நான் கற்க வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது. அவற்றை கற்றுக்கொள்ள நான் ஆவலாக உள்ளேன். நான் அடைந்த வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்த பள்ளி பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பயணம் எனக்கு என்ன சவால்களை அளிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை எதிர்கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். என்னை போன்றே லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறும் அறிவுரை ஒன்று தான், “உங்களுக்கு பிடித்ததை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றை தேடுவது தான் சிரமம். கண்டுபிடித்துவிட்டால் வாழ்வில் வெற்றி அடையலாம்”. நன்றி.