
நான் நவீன்குமார் கன்னியப்பன். பள்ளிகவுண்டணுர் கிராமத்தில் இருந்து வருகிறேன். என் தந்தை, கன்னியப்பன் அவர்கள் எனக்கு ஒரு ஹீரோவாக இருந்தார். அவர்தான் என் வாழ்க்கையை செதுக்கியவர். துரதிர்ஷ்டவசமாக, என் தந்தை 2012 இல் காலமானார். அது என் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இதனால் என் வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்திக்க நேரிட்டது. இங்கு என் வாழ்க்கை கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆரம்ப கல்வி: என் பயணத்தின் அடித்தளம்
நான் வடக்குகல்லுப்பட்டி உள்ள நடுநிலைப்பள்ளியில் என் ஆரம்பக் கல்வியை தொடங்கினேன். எங்கள் குடும்பம் பல சிரமங்களை எதிர் கொண்ட போதிலும், என் தாயார் கல்வியின் முக்கியத்துவத்தை எங்களுக்கு வலியுறுத்தினார். பள்ளி வாழ்க்கையில் நான் பல தடைகளை எதிர்கொண்டேன். இருந்தாலும் என் தாயின் வலிமையும் ஆதரவுமே என்னைத் தொடர்ந்து முயற்சிக்க ஊக்குவித்தது.
பத்தாம் வகுப்புக்கு பின்னர், நான் குளித்தலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நான் விரும்பிய கணினி துறை எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. பள்ளி மேலாளரிடம் என் விருப்பத்தை தெரிவித்து கணினி துறைக்கு மாறினேன்.
வகுப்பறைக்கு அப்பால் கற்றல்
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என் இரண்டு ஆண்டுகளில், நான் வெறும் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. ஜூடோ, சதுரங்கம் உட்பட கூடுதல் செயல்பாடுகளிலும் பங்கேற்றேன். இது எனக்கு உடல் மற்றும் மன வலிமையை வளர்க்க உதவியது. மேலும், நான் பள்ளிக்கு அருகில் பகுதி நேர வேளையில் ஈடுபட்டேன். மேசைகள் மற்றும் நாற்காலிகளை பராமரித்தல், கணினி சேவைகளை வழங்குதல், கேமரா மற்றும் தரவு இணைப்பு பகுதிகளை நிர்வகித்தல் போன்ற பணிகளில் உதவினேன். இந்த அனுபவங்கள் எனக்கு பல திறன்களைக் கற்றுக் கொடுத்தது. வகுப்பறைக்கு அப்பால் இந்த செயல்பாடுகள் எனக்கு அதிகம் கற்றுத் தந்தன.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் என் கனவுகளைத் தொடருதல்
என் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சொந்த கிராமத்திற்கு திரும்பி, கணியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் டிப்ளமோ படிப்பை தொடங்கினேன். கல்லூரி வாழ்க்கை பல வாய்ப்புகளை திறந்துவிட்ட ஒரு புதிய அத்தியாயமாக இருந்தது. நான் சிறந்த நண்பர்களைப் பெற்றேன். மதிப்புமிக்க தொழில்நுட்ப திறன்களைக் கற்றுக் கொண்டேன்.
வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், கல்வியும் விடாமுயற்சியும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்கும் என்பதை நான் இங்கு கற்றுக் கொண்டேன். என் வழிகாட்டிகளின் ஆதரவு, என் பெற்றோரின் தியாகங்கள், மற்றும் விடாமுயற்சி ஆகியவை என்னை தொடர்ந்து முன்னேற உதவியது. டிப்ளமோ படிப்பை முடித்த பிறகு, பலர் மேல்நிலை கல்வியை தொடர்ந்தார்கள், ஒரு சிலர் மென்பொருள் துறையில் வேலைக்கு சென்றார்கள். ஆனால், என் குடும்ப சூழ்நிலை காரணமாக, என்னால் அந்த பாதையை எடுத்துக்கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கையின் பிரதான குறிக்கோள் வேலை, சம்பளம், குடும்ப பொறுப்புகள், அதற்கு என்னால் முடிந்ததைச் செய்ய முடிவு செய்தேன்.
டிசிகாப் பள்ளியில் வேலை வாய்ப்பு கிடைத்த மறக்க முடியாத தருணம்
எனது கல்லூரி நாட்கள் முடிந்த பிறகு, வாழ்க்கையின் கட்டாயம் காரணமாக பல்வேறு வேலைகளில் சேர்ந்தேன். கோயம்புத்தூரில் உள்ள ஒரு சி.என்.சி நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஒரு நாள், எனது கல்லூரி குழுவில் ஒரு குறுஞ்செய்தி பார்த்தேன். அதில், “டிசிகாப் பள்ளி என்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனது கல்லூரியில் பணிபுரியும் எனது ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு, “இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. நீ கண்டிப்பாக இதில் கலந்து கொள்” என்று கூறினார். அடுத்த நாள் கல்லூரிக்கு சென்று டிசிகாப் பள்ளி நடத்திய நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். ஆனால் என்னால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. கவலையோடு வீடு திரும்பினேன்.

இருந்தாலும் என் மனம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது இதில் சேர வேண்டும் என்று மீண்டும் விண்ணப்பித்தேன். நேர்காணலில் மீண்டும் கலந்துகொண்டேன். என் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினேன். இறுதியாக எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுவே என் வாழ்க்கையை மாற்றிய தருணமாக அமைந்தது.
டிசிகாப் பள்ளியில் ஒரு வருட அனுபவம்
டிசிகாப் பள்ளியில் சேர்ந்த முதல் நாள் என்னை மிகவும் பதட்டமடைய செய்தது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள், கணினியில் திறமையாக செயல்பட்டனர். ஆனால் எனக்கு இது எல்லாம் கடினமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து நின்றேன்.
முதல் மாதம் முழுவதும் என் மனதில் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. யாரிடம் பேசுவது, எதைக் கேட்பது, எப்படி கலந்து கொள்வது என்று புரியாமல் இருந்தேன். ஆனால், என் சகாக்கள், பள்ளி பயிற்சியாளர்கள் என அனைவரும் என்னை புரிந்து கொண்டு, மெல்ல மெல்ல என் பயத்தை போக்க உதவினார்கள்.
தொழில்நுட்ப திறன்களை வளர்த்தல்
டிசிகாப் பள்ளியில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் நான் பல்வேறு தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்டதில் சிலவற்றை பின்வருவனவற்றில் விளக்கியுள்ளேன்.
ஒரு வலைப்பக்கத்தின் அடிப்படை கட்டமைப்பு எச்.டி.எம்.எல் (HTML) மூலம் உருவாக்கப்படுவதை முதலில் கற்றுக் கொண்டேன். இது தலைப்புகள், பத்திகள், படங்கள் போன்ற உள்ளடக்கங்களை எங்கு, எப்படி அமைக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. ஒரு வீட்டின் வரைபடம் போல, இது வலைப்பக்கத்தின் எலும்புக்கூடாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்ததாக, சி.எஸ்.எஸ் (CSS) பற்றி கற்றேன். எச்.டி.எம்.எல் (HTML) உருவாக்கிய கட்டமைப்பிற்கு வண்ணம், எழுத்துரு வடிவமைப்பு மற்றும் தளவமைப்பு போன்ற காட்சி அம்சங்களைச் சேர்ப்பது சி.எஸ்.எஸ் (CSS) மொழியின் வேலை. நான் உருவாக்கிய பக்கங்களை பார்வைக்கு அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுவதற்கு இது எப்படி உதவுகிறது என்பதை தெரிந்துகொண்டேன். இது வலைப்பக்கத்திற்கு ஒரு ஆடை அலங்கார நிபுணர் போன்றது.

பின்னர் ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்றுக் கொண்டேன். ஜாவாஸ்கிரிப்ட் ஒரு வலைப்பக்கத்தை எப்படி பயனர் நட்பாக மாற்றுகிறது என்பதை கற்றுக் கொண்டேன். மாறும் மதிப்புகள் (variables), தரவு வகைகள் (data types), வரிசைகள் (arrays), மற்றும் பொருட்கள் (objects) போன்ற கருத்துக்களைப் புரிந்து கொண்டேன். இறுதியாக, எஸ்.கியூ.எல் (SQL) பற்றி கற்றுக் கொண்டேன். வலைத்தளங்களுக்கு தேவையான தரவுகளை, தரவுத்தளங்களில் (databases) சேமிக்கவும், நிர்வகிக்கவும், மீட்டெடுக்கவும் எஸ்.கியூ.எல் (SQL) பயன்படுகிறது. இதன் மூலம், பயனர்களின் தகவல்களை கையாள்வது அல்லது ஒரு தயாரிப்பு பட்டியலை நிர்வகிப்பது போன்ற செயல்களை எப்படி செய்வது எனத் தெரிந்தது. இது தரவுகளுடன் பேசும் ஒரு மொழி.
தொடர்ந்து நடந்த பயிற்சிகள், குழு பணிகள், பேசும் திறன்கள், எல்லாம் ஒரு புதிய உலகத்தை எனக்குத் திறந்து வைத்தது. நான் முதலில் யாரிடமும் பேச முடியாத ஒரு நிலைமையில் இருந்தேன். ஆனால், இன்று நம்பிக்கையுடன் குழுவோடு உரையாடவும் பணிபுரியவும் என்னால் முடிகிறது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகள் தான். மேடையில் பேசுவது எனக்கு ஒருபோதும் இயலாத ஒன்று போல் தோன்றியது. ஆனால், வாரம் தோறும் பேசும் வாய்ப்பு, சிறு சிறு முன்னேற்றங்கள், ஊக்கமளிக்கும் பாராட்டுகள் என அனைத்தும் என்னை மேம்படுத்த உதவியது. ஒரு காலத்தில் நடுங்கி கொண்டு பேசிய நான் இப்போது தைரியமாக நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்துகிறேன்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு
பள்ளியில் நான் சேர்ந்த போது ஒரு வலைத்தளத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் தற்போது நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுவதும் பள்ளி தான் காரணம். இங்கு எனக்கு கிடைத்த நண்பர்கள், பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சந்தேகம் என்று நான் எப்போது கேட்டாலும் பகல் இரவு பார்க்காமல் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் அளித்த ஆதரவு மற்றும் ஊக்கமே என்னை இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.

இறுதி எண்ணங்கள்
என் கதை இதே போன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கை கடினமாக இருக்கலாம், ஆனால் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பது முக்கியம். கல்வி உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கான திறவுகோலாகும். மேலும் நீங்கள் என்ன தடைகளை எதிர்கொண்டாலும், விடாமுயற்சியும் கடின உழைப்பும் எப்போதும் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.