பள்ளி படிப்பை முடிக்கும் அனைவரிடமும் இருக்கும் ஒரு கேள்வி, அடுத்தது என்ன? இந்த கேள்வி எனக்கும் தோன்றியது, அதற்கான விடை தான் இந்த பதிவு.
என் பெயர் விக்னேஷ் சந்திரன். எனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியில். 12ம் வகுப்பை வரை எனது பள்ளி நாட்கள் பல மகிழ்ச்சியான நினைவுகளால் நிறைந்து இருந்தது. எனக்கு ஆதரவாக இருக்கும் அற்புதமான நண்பர்களை நான் பெற்றதால், பள்ளியில் என் நேரம் உண்மையிலேயே சிறப்பானதாக இருந்தது. இருப்பினும், நான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியை எதிர்கொண்டபோது, தொலைந்து போனது போன்று உணர்ந்தேன். எனது மேற்படிப்புக்கு எந்தப் பாதையில் செல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
புதியதோர் பாதை
பலரிடம் இதற்காக ஆலோசனை கேட்டேன். அவர்கள் பொறியியல், அறிவியல், கணிதம் பல்வேறு படிப்புகளை பற்றி கூறினார். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. கடைசியாக என் சகோதரரிடம் கேட்டேன். அவர் டிசிகாப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் டிசிகாப் பள்ளியை பற்றி என்னிடம் கூறினார். அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், அது ஒரு சிறந்த வாய்ப்பாக எனக்கு தோன்றியது. எனது குடும்பத்தினரும் என்னைச் சேர ஊக்கப்படுத்தினர். இருந்தாலும் எனக்கு தயக்கமாக இருந்தது. என் சகோதரர் டிப்ளோமா படிப்பை முடித்த பின்னர் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அதை போல முறையான தகுதிகள் எதுவும் என்னிடம் இல்லை, அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தாலும் என்னால் அங்கு நிலைத்திருக்க முடியுமா? தேர்ந்தெடுப்பார்ககளா? நிரலாக்கம் என்பது கடினமான ஒன்று அதில் நம்மால் சாதிக்க முடியுமா? என்ற பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு விதமான அச்சம் என்னிடம் இருந்தது.
“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்று கூறுவார்கள், சரி முயற்சி செய்துதான் பார்ப்போமே, என்று எனக்கு நானே நம்பிக்கை கூறி டிசிகாப் பள்ளி நேர்காணலில் கலந்து கொண்டேன். இருந்தாலும் எனக்கு சற்று பதட்டமாகவே இருந்தது. இதற்கு முன்னர் நான் யாரிடமும் சரியாக பேசி பழகியது கிடையாது, நேர்காணலில் அறிமுகமில்லாதவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் பயத்தை ஏற்படுத்தியது.
நேர்காணல் தர்க்கரீதியான சிந்தனையை மையமாகக் கொண்ட திறனாய்வுத் தேர்வில் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக, நான் அந்த பிரிவில் நன்றாக செயல்பட்டேன். தனிப்பட்ட நேர்காணல் சுற்று எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நான் மனித வள மேலாளரிடம் பேச வேண்டும், அவர் எனது திறமைகளை மதிப்பிடுவார், நான் பதற்றமடைந்தேன். அவர்கள் என்னை தேர்வு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியமாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்! அப்போது தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு வழியாக பள்ளியில் இணைந்து விட்டோம் என்ற அளவில்லா மகிழ்ச்சி என் மனதில் பெருகியது.
டிசிகாப் பள்ளி பயணம்
டிசிகாப் பள்ளியில் சேர்ந்தது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது போல் இருந்தது. நான் பல புதிய நபர்களைச் சந்தித்தேன். புதிதாக என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என்ற ஆவல் எனக்கு உண்டாகியது. ஒரு குழுவாக முதல் முறையாக நான் பள்ளியில் செயல்பட்டேன். நான் இதுவரை ஒரு குழுவாக வேலை செய்ததில்லை, இது எனக்கு ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. முதலில், அனைவருடனும் ஒன்றாக இணைந்து பணிசெய்வது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் பழக பழக அது இயல்பாகிவிட்டது, அனைவரும் ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். குழுப்பணி, தகவல் தொடர்பு, ஒரு அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும் நான் கற்றுக்கொண்டேன்.
டிசிகாப் பள்ளியில் எனக்கு பெரிதும் உதவிய ஒன்று என்றால் அது டோஸ்ட்மாஸ்டர்களில் பங்கேற்றது தான். தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தவும், சிறந்த பேச்சாளர்களாக மாறவும் இந்த டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எனது நம்பிக்கையையும் மேம்படுத்தியது, என்னுடைய பேச்சு பயத்தையும் போக்கியது. ஆரம்பத்தில், அனைவரின் முன்நின்று பேசுவது என்பது எனக்கு கடினமாக இருந்தது. நான் பேச நினைப்பதை தெளிவாக வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களை திறம்பட வழிநடத்தவும் டோஸ்ட்மாஸ்டர் எனக்கு உதவியது.
நடைமுறை செயல்பாடு
மென் திறன்களை வளர்ப்பதுடன், தொழில்நுட்ப அறிவையும் நிபுணத்துவத்தையும் நான் பள்ளியில் பெற்றேன். வெறும் கோட்பாடு அடிப்படையில் இல்லாமல் நடைமுறைக்கு ஏற்றவாறு பள்ளியின் கல்விமுறை இருந்தது. நாங்கள் கற்றுக்கொண்டதை செயல்படுத்தி பார்க்க முன்இறுதி வளர்ச்சியில் ஒரு செயல் திட்டத்தில் நாங்கள் பணியாற்றினோம். இந்த செயல்திட்டம் ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது மற்றும் எனது குறியீட்டு திறன்களை மேம்படுத்த உதவியது. பின்னர், முழு அடுக்கு வளர்ச்சியில் ஒரு ஆராய்ச்சி திட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்த திட்டம் சற்று கடினமாக தான் இருந்தது, ஆனால் இது எனது அறிவையும் திறன்களையும் விரிவுபடுத்த என்னை ஊக்கப்படுத்தியது.
பள்ளியில் எங்களை பலவகையில் மதிப்பீடு செய்தனர். நிரலாக்க சவால்கள், வாய்மொழித் தேர்வு, வழிகாட்டிகளுடன் தனிப்பட்ட தேர்வு, என எங்களை ஒரு சிறந்த உருவாக்குனராக மாற்ற பல வழிகளை கையாண்டனர். இந்த அனுபவங்கள் சில நேரங்களில் கடினமாக இருந்தன, ஆனால் தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியிலும் என்னை நிபுணத்துவத்தை வளர்ப்பதில் இவை முக்கிய பங்கு வகித்தது. நான் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலும் எனக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுத்ததுடன், என் திறமையில் எனக்கு அதிக நம்பிக்கையூட்டியது.
நான் பயணித்த இந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது, எவ்வளவு வளர்ந்திருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது, இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நிச்சயமற்ற மற்றும் பயம் நிறைந்த இடத்திலிருந்து தொடங்கி, அதிக நம்பிக்கையும் திறமையும் கொண்ட ஒருவனாக வளர்ந்துள்ளேன். டிசிகாப் பள்ளியில் எனக்கு கிடைத்த அனுபவம் இந்த பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். புதிய சவால்களை எதிர்கொள்ளவும், தொடர்ந்து கற்கவும் தயாராக உள்ள மனிதனாக என்னை வடிவமைத்ததற்கு பள்ளிக்கும் பள்ளியின் பிரதிநிதிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!