என்னைப் பற்றி சில வரிகள்:
எனது பெயர் ஆகாஷ். நான் டிப்ளமோ பிரிவில் இயந்திரவியல் துறையில் படித்தேன். இந்த படிப்பை முடித்தவுடன் கணினி சார்ந்த மேற்படிப்பைப் படிக்க விரும்பினேன். ஏனென்றால் நான் டிப்ளமோவில் இயந்திரவியல் துறையைத் தேர்வு செய்வதற்கு முன்பே நான் கணினி சார்ந்த படிப்பைப் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் படித்த கல்லூரியில் கணினி சார்ந்த படிப்பைப் பயிலக் கல்விக்கட்டணம் அதிகம். ஆனால் எனக்கு அதில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு என்னிடம் வசதியில்லை. அதனால் இயந்திரவியல் துறையைத் தேர்வு செய்தேன். அதன் பிறகு என் மேற்படிப்பை மாற்றிக்கொள்ளலாம் என நினைத்தேன் ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் மேலும் படிக்க இயலவில்லை. எனவே வேலை தேடுவதில் கவனம் செலுத்தினேன்.
வேலை சார்ந்த முதல் அனுபவம்:
அப்போது நான் டிப்ளமோ பயின்ற கல்லூரியிலிருந்து எனக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் சிலர் அக்கல்லூரியில் டீசல் ஜெனரேட்டர் பற்றி பயிற்சி தரவுள்ளதாகவும் பயிற்சி முடிந்த பின் பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை அமைத்துத் தருவதாகவும் கூறினர். அதை ஏற்று நான் வேறு எந்த வேலையையும் தேடாமல் எனது தந்தையிடம் தெரிவித்து விட்டு நான் அதில் சேர்ந்தேன். பயிற்சி காலம் முடியும் நேரத்தில் தான் தெரிந்தது அவர்கள் அந்த நிறுவனத்தில் அல்லாமல் அந்த நிறுவனத்தின் டீலர்களிடம் வேலையை அமைத்துத் தந்தனர் என்பது.
அந்த நிறுவனத்தில் வேலையைத் தொடர என்னிடம் அவர்கள் வாகனத்தை எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் அது கள சேவை பொறியாளர் (field service engineer) பணி. அந்த வேலைக்குக் கண்டிப்பாக வாகனம் தேவை. வாகனம் இல்லை என்றால் சரியான சமயத்திற்குச் சென்று வேலை செய்ய முடியாது. இருந்தாலும் நான் என் முயற்சியைக் கைவிடாமல் பேருந்தில் சென்று பணிபுரியத் தொடங்கினேன். ஆனால் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாத காரணத்தினால் உடல் நிலை சரியில்லாமல் போனது அதனால் வீட்டில் கூறிவிட்டு அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டேன்.
டிசிகாப் பற்றி அறிந்த தருணம்:
வேலையிலிருந்து விலகிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் எனது கல்லூரியின் வாட்சப் குழுவின் மூலம் டிசிகாப்-ன் மென்பொருள் பொறியாளர் ஆக ஒரு வாய்ப்பை வழங்கும் டிசிகாப் பள்ளி பற்றித் தெரிய வந்தது. டிசிகாப் பள்ளி பற்றியும் அங்கே நடக்க இருக்கும் நேர்காணல் பற்றியும் என் அப்பாவிடம் கூறினேன். அவர் அதற்குச் சம்மதித்தார். அதன் பின் நான் என் நண்பனிடமும் இந்த தகவலைக் கூறினேன். என் நண்பனும் என்னுடன் இணைந்து நேர்காணலில் கலந்து கொள்ள வந்திருந்தான்.
ஆச்சரியம் நிறைந்த முதல் அனுபவம்:
நானும் எனது நண்பனும் டிசிகாப் இன் வெளியில் நின்று இங்கு வேலை கிடைப்பது கடினம் என்று எண்ணினோம். ஆனாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு டிசிகாப் இல் பணிபுரியும் அனைவரும் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதை நான் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஏனென்றால், இதற்கு முன்பு நான் வேறு எந்த நிறுவனத்திலும் இதைப்போன்று நடந்ததாகக் கேள்விப்படவில்லை.
அதன் பின் டிசிகாப் பற்றி அனைத்து தகவல்களையும் கூறினர். அதன் பின்பு டிசிகாப் இன் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் எங்களிடம் பேசினார். எங்கள் தயக்கங்களை மறந்து எங்களையும் பேசச் செய்தார். அது எனக்கு மேலும் ஆச்சரியமூட்டியது. பிறகு நேர்காணலுக்கு வந்த அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நேர்காணல் செயல்முறை தொடங்கியது. நேர்காணல் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட்டன.
நானும் எனது நண்பனும் அதில் தேர்வானோம். அந்த மகிழ்ச்சியான தருணத்தை என் தந்தையிடம் கூறினேன். அதற்கு அவர் என்னிடம் நான் பயின்றது இயந்திரவியல் சார்ந்த துறை, தற்போது தேர்வு செய்திருக்கும் பாதையோ முற்றிலும் வேறு உன்னால் முடியுமா என்று கேட்டார். நான் அதற்கு நேர்காணலின் போது டிசிகாப் ஊழியர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பேசியதைக் கூறி, என்னால் முடியும் எனப் பதிலளித்தேன். அதைக் கேட்டு எனது தந்தையும் நன்றாக படி என்று கூறினார். இவ்வாறாக எனது வாழ்கை பயணத்தை டிசிகாப் பள்ளியில் தொடங்கினேன்.
டிசிகாப் பள்ளியுடன் மூன்று மாத அனுபவம்:
எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு:
நான் டிசிகாப் பள்ளியில் இணைந்த நாள் முதல் இன்று வரை புதிது புதிதாகப் பலவற்றை மென்பொருள் துறை சார்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறேன். இந்த டிசிகாப் பள்ளியில் சேர்வதற்கு முன்பு எனக்குச் சிறிது பயமாகவும் மற்றும் பதட்டமாகவும் இருந்தது. புதிதாக ஒன்றை கற்கும் போது பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உருவாகும். அப்படி உருவாகும் சந்தேகங்களைப் பற்றி எல்லார் முன்னிலையிலும் கேட்டால் எங்கே என்னை முட்டாள் என்று எண்ணி விடுவார்களோ என்றும் ஆசிரியர்கள் சலித்துக் கொள்வார்களோ என்றும் எண்ணியது தான்.
இதற்கு முன்னர் நான் பயின்ற இடங்களில் எல்லாம் அப்படியொரு சூழ்நிலைதான் இருந்தது. அவ்வாறே இங்கேயும் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் இங்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆரம்பத்தில் சனிக்கிழமை விடுமுறை விட்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், இப்போதெல்லாம் விடுமுறை நாள்கள் வந்து விட்டால் மிகவும் சோர்வாகத் தோன்றுகிறது. புதிது புதிதாகப் பல விஷயங்களை நான் இங்கு கற்றுக்கொள்வதன் மூலமாக அதைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் விடுமுறை நாள்களில் கூட பயில வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. டிசிகாப் பள்ளி எனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். என் நண்பனும் நானும் தினமும் இங்கே வந்து பயில ஆர்வமாக உள்ளோம்.
தயக்கமும் பயமும் தகர்ந்து ஆர்வம் அதிகமானது:
டிசிகாப்-ல் உள்ள ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கு ஏற்றாற்போல பயிற்சி அளிக்கின்றார்கள். புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் சொல்லித் தர ஆர்வமாக உள்ளார்கள். கற்பித்த பாடம் புரியவில்லை என்றால் அதே பாடத்தை முழுமையாக மீண்டும் சொல்லித் தரத் தயாராக உள்ளார்கள். ஆரம்பத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், இப்போது பாடங்கள் நன்றாகப் புரியத் தொடங்கிவிட்டன. இந்த மூன்று மாதத்தில் நான் பல மென்பொருள் தொழில்நுட்பம் சார்ந்தவை பற்றி நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.
மேலும் புதிதாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டும் வகையில் டிசிகாப் ஊழியர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளார்கள். இங்கு மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கிறார்கள். இப்பயிற்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிக்கிறார்கள். இதற்கு முன்பு சிலர் முன் நின்று பேசவே பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் இப்போது டிசிகாப் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் முன்பே நின்று பேசும் அளவிற்குப் பயிற்சி அளித்துள்ளார்கள். தலைமை நிர்வாக அதிகாரி எங்களுடன் பேச மிக ஆர்வமாக உள்ளது மிகவும் பிடித்துள்ளது.
கற்றல் முடிவில்லாதது:
என்னுடைய பயிற்சியாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் கூட தினமும் கற்றுக் கொண்டே உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்த மூன்று மாதத்தில் “நான் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பதை நன்கு அறிந்து கொண்டேன். எங்களையும் கற்றுக் கொள்ள அவர்கள் ஊக்கப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எதாவது தவறுதலாகச் செய்துவிட்டால் எங்களைத் தனியாக அழைத்து பிழையைத் திருத்திக் கொள்ளவும் நன்றாக அறிவுரை வழங்குகிறார்கள். இந்த மூன்று மாதத்திற்கான ஒரு மதிப்பீட்டுத் தேர்வு நடந்தது. அதன் மூலம் நான் எதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நன்கு தெரிந்து கொண்டேன். தலைமை நிர்வாக அதிகாரி அவர்களுடனான சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் மிகவும் உதவியாக உள்ளது. இந்த கலாச்சாரத்திற்கு நான் பழகிவிட்டேன்.
தன்னம்பிக்கை கூடியுள்ளது:
வந்த புதிதில் அனைவரையும் sir அல்லது mam என்று அழைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கத் தொடங்கி விட்டேன். இந்த மூன்று மாதங்களில் எனது கற்றலும் அனுபவமும் எனது தன்னம்பிக்கைக்கு புத்துணர்ச்சியூட்டி உள்ளது. அடுத்த மதிப்பீட்டுத் தேர்வில் நன்றாகப் பயிற்சி செய்து எனது சிறப்பை காண்பிக்க முயற்சி செய்கிறேன். இந்த வாய்ப்பை அளித்த டிசிகாப்பிற்கு நன்றிகள். நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு நன்றி!