கற்றல் என்பது வெறும் புத்தகத்தோடு நின்று விடுவது அல்ல, கற்றல் என்பது நம்மை ஒரு சிறந்த நபராக மாற்றும் ஒரு கருவி, கல்வியில் மட்டும் புத்திசாலியாக இருப்பது பயனில்லை வாழ்வில் உள்ள அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவது தான் கற்றலின் நோக்கம்.
ஒரு சிறந்த பயிற்சி திட்டம் இது அனைத்தையும் கருத்தில் கொண்டு பாடமுறையை வடிவமைக்க வேண்டும், அந்த வகையில் டிசிகாப் பள்ளியின் பயிற்சி திட்டம் ஒரு சிறந்த வழிகாட்டி என்றே சொல்லலாம்.
அப்படி நான் அங்கு கற்று கொண்ட ஒரு திறனை பற்றி தான் இங்கு கூற உள்ளேன், வாருங்கள் பார்ப்போம்.
என்னை பற்றி சில வார்த்தைகள் :
அனைவருக்கும் வணக்கம். நான் வினித் கிருஷ்ணன் டிசிகாப் பள்ளி மாணவன். நான் 12 ஆம் வகுப்பு முடித்து பின்னர் டிசிகாப் பள்ளியில் இணைந்தேன். பள்ளியில் தற்போது நான் 1 வருடம் வெற்றிகரமாக கடந்துவிட்டேன். நான் டிசிகாப் பள்ளியில் இணையும் போது எந்தவித தொழில்நுட்ப அறிவும் இன்றி இணைந்தேன். டிசிகாப் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பதால் பள்ளியில் எங்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மட்டுமே இருக்கும் என்று இணைவதற்கு முன்பு நினைத்தேன். ஆனால், என்னுடைய அந்த எண்ணங்களை மாற்றும் விதமாக பள்ளியில் பல்வேறு கற்றல் செயல்பாடுகள் இருந்தது. அதில் ஒன்றை பற்றி தான் இப்பதிவில் கூறவிருக்கிறேன். பள்ளியில் நாங்கள் இணைந்த எட்டாவது மாதத்தில் டோஸ்ட்மாஸ்டர் (toastmaster) சங்கத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்த டோஸ்ட்மாஸ்டர் (toastmaster) மூலமாக நான் என்னுடைய மேடைப்பேச்சு, தலைமை பண்பு போன்றவற்றை வளர்த்துக் கொண்டு வருகிறேன். மேலும், நான் இப்பதிவில் டோஸ்ட்மாஸ்டர் பற்றிய என்னுடைய அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
பள்ளி பருவத்தில் என்னுடைய பேச்சுத்திறன் :
நான் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தேன். என்னுடைய பள்ளி ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்க கூடிய பள்ளி. பள்ளி வளாகத்திற்கு உள்ளே அனைவரும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேச வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அபராதத் தொகை கட்ட வேண்டும் என்பது பள்ளி விதிமுறை. பள்ளி பருவத்தில் எனக்கு ஆங்கிலத்தில் எழுதுவது, படிப்பது மற்றும் பேசுவதில் எந்தவித சிரமத்தையும் உணர்ந்ததில்லை. ஆனால், என்னை சுற்றியிருந்த மக்களிடம் நான் ஒரு நாளும் பேச முயற்சித்தது இல்லை. தேவை இருக்கும் போது மட்டுமே உரையாடினேன்.
ஒருமுறை என்னுடைய வகுப்பில் ஆசிரியர் என்னை ஒரு தலைப்பின் கீழ் பேசும் படி கூறினார், ஆனால் நான் அதை ஏற்காமல் மறுத்துவிட்டேன். மேலும், ஒரு நாள் என்னுடைய ஆங்கில ஆசிரியை புத்தகத்தில் ஒரு பத்தியை கொடுத்து அதை மாணவர்கள் முன்னிலையில் நின்று படிக்குமாறு கூறினார். அந்த வாய்ப்பினையும் தட்டிக்கழித்து விட்டேன். அப்போது என்னுடைய ஆசிரியர் என்னிடம் ஒன்றை கூறினார் `நான் இன்று படிக்க அழைத்ததன் அருமை இன்று உனக்கு புரியவில்லை ஆனால், ஒரு நாள் அது உனக்கு புரிய வரும்` என்றார். அன்று அவர் என்னிடம் அவ்வாறு கூறியதற்கு, நான் எனக்கு ஆங்கிலம் தெரியும், தேவையான நேரத்தில் நான் பேசிக்கொள்வேன் என்று அலட்சியப்படுத்தும் விதமாக என் மனதில் எண்ணிக்கொண்டேன்.
என்னுடைய கண்ணோட்டத்தில் டிசிகாப் பள்ளி :
பள்ளி படிப்பை முடித்து டிசிகாப் பள்ளியில் தேர்வு செய்யப்பட்டேன். டிசிகாப் பள்ளி நேர்காணலின் போது ஆங்கிலத்தில் பேச மிகவும் கடினமாக உணர்ந்தேன், ஆனால் எப்படியோ சமாளித்து விட்டேன். டிசிகாப் பள்ளி பயிற்சி காலத்தில் எங்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகள் மட்டுமே மேற்கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் எங்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்லாமல் மென்திறன்(பேச்சுத்திறன், நடத்தை, ஒழுக்கம், நேரமேலாண்மை, தலைமைத்துவம்) பயிற்சிகளையும் கற்றுக் கொடுக்கும் விதமாக பள்ளியின் செயல்முறையை வடிவமைத்தனர். மென்திறன் பயிற்சி மூலம் நான் என்னுடைய நடத்தை சார்ந்த பழக்க வழக்கங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்ப காலகட்டத்தில் டோஸ்ட்மாஸ்டர் உடனான என்னுடைய அனுபவம் :
பள்ளியில் இணைந்த ஒரு சில மாதங்கள் கழித்து டோஸ்ட்மாஸ்டர் சங்கத்தை பற்றி பள்ளி குழுவினர் அறிமுகப்படுத்தினார். முதலில் பள்ளியில் இருந்து அனைவரும் சற்று குழப்பத்துடன் இருந்தோம். டோஸ்ட்மாஸ்டர் என்றால் என்ன, எதற்காக உள்ளது என்று எங்களுக்கு புரியவில்லை. ஆரம்பத்தில் அதை பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கூகுள் செய்து படித்து பார்த்தேன். அதற்கு மறுநாள் சென்னை டோஸ்ட்மாஸ்டர் சங்கத்திலிருந்து இரண்டு நபர்கள் பள்ளிக்கு வந்து டோஸ்ட்மாஸ்டர் பற்றி கூறினார்கள். அன்றே அவர்கள் ஒரு வகுப்பினை நடத்தினர். அப்போது எங்களை ஒவ்வொருவராக அழைத்து எங்களுக்கு பிடித்த தலைப்பின் கீழ் பேசும்படி கூறினார்கள். அப்போது முதலாவதாக நான் சென்று எனக்கு பிடித்த மட்டைப்பந்து விளையாட்டை பற்றி மூன்று நிமிடம் பேசினேன். முதலில் அனைவருக்கும் முன்பாக நின்று பேசுவதை நினைத்து சற்று அச்சமுடன் இருந்தேன். நான் பேசி முடித்தவுடன் அனைவரும் என்னை பாராட்டினார்கள். இதேபோன்று தொடர்ச்சியாக கிளப்பில் இணைந்து பேசுவதன் மூலமாக பேச்சு பயத்தை குறைக்க முடியும் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும் என்று கூறினார்கள்.
டிசிகாப் பள்ளியில், முதல் டோஸ்ட்மாஸ்டர் கலந்துரையாடல் :
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து டோஸ்ட்மாஸ்டர் பற்றிய வழிகாட்டுதலை அளிப்பதற்காக டிசிகாப் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய ஒருவர் எங்களுடன் இணைந்தார். டிசிகாப் பள்ளியின் முதல் டோஸ்ட்மாஸ்டர் கலந்துரையாடல் அவரின் தலைமையில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. அந்த கூட்டத்தில் இலக்கண பிழை கண்காணிப்பாளராக பங்கேற்றேன். முதல் கலந்துரையாடலில் நாங்கள் ஓரளவிற்கு மட்டுமே பேசினோம். ஏனென்றால், அதுவே எங்களுடைய முதல் கலந்துரையாடல். இதன் தொடர்ச்சியாக டோஸ்ட்மாஸ்டர் கிளப்பினை வாரம் ஒருமுறை நிகழ்த்த முடிவு செய்தோம். முதல் கூட்டத்தில் நாங்கள் அனைவரும் எங்களுக்கான துருப்புசீட்டினை பார்த்து படித்தோம். இரண்டாவது கூட்டத்திலிருந்து அனைவரும் தாமாகவே பேசினோம். மேலும், நான் அந்த கூட்டத்திலும் இலக்கண பிழை கண்காணிப்பாளராக பங்கேற்று அந்த கூட்டத்தின் சிறந்த ரோல் பிளேயர் விருது பெற்றேன்.
அடுத்த சில டோஸ்ட்மாஸ்டர் சந்திப்புகளுக்கு பிறகு :
அடுத்த ஒரு சில சந்திப்புகளுக்கு பின் அனைவரின் முன்னின்று பேசினேன் அதன் பிறகு என்னுடைய தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்க தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. மேலும், எனக்குள் ஏற்பட்ட அந்த நம்பிக்கை என்னுடைய நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் கிளப்பில் இணைந்து ஏதாவது ஒரு ரோல் எடுத்து பேசுமாறு கூறினேன். ஒருவரை ஊக்கப்படுத்துவது மற்றும் பாராட்டுவதன் மூலம் அவரது திறனை வெளிக்கொண்டுவர முடியும் என்று நான் உணர்ந்து கொண்டேன். இந்த இரண்டுமே எனக்கும் அனைவரின் முன்னின்று பேச பெரிதும் உதவிகரமாக இருந்தது. வாரங்கள் செல்ல செல்ல என்னுடைய பேச்சுத்திறன் மற்றும் தலைமைப்பண்பு திறனை வளர்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு சில கூட்டத்தில் எங்களால் சரியாக செயலாற்ற முடியவில்லை. அப்படி இருந்த போதிலும் நாங்கள் பின்வாங்கவில்லை. மீண்டும் எங்களை மேம்படுத்திக்கொண்டு அடுத்த கூட்டத்தில் எவ்வாறு சிறப்பாக செயலாற்றுவது என்று யோசித்தோம். மேலும் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அன்றைய கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இணைத்தவர்களிடமிருந்து பின்னூட்டங்களை பெற்று அடுத்தடுத்த கூட்டங்களில் எங்களை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டோம்.
டோஸ்ட்மாஸ்டர் வழியாக நான் கற்றுக்கொண்டவை :
மேடை பேச்சு:
டோஸ்ட்மாஸ்டரில் இணைவதற்கு முன்பு வரை அனைவரது முன் நின்று பேசுவதில் தயக்கம் எனக்குள் இருந்து கொண்டுதான் இருந்தது. மேலும், இவ்வாறு பேசும் போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது என்னிடம் மேடையில் ஏறி பேசும்படி கூறினால் நான் சந்தோஷமாக அனைவரது முன் நின்று பேசுவேன். அந்த அளவிற்கு மனதைரியத்தை உயர்த்தியுள்ளது டோஸ்ட்மாஸ்டர் கிளப்.
தவறுகளின் வழி கற்றல்:
இவ்வாறு அனைவரது முன்னின்று பேசக்கூடிய திறனை வளர்த்துக்கொள்வது மனதிற்கு தைரியத்தையும் சிறப்பான மனநிலையையும் அளிக்கும். நான் பல தவறுகளை செய்து அதிலிருந்து என்னை சரி செய்து கொண்டேன். மேலும் கிளப்பில் இருப்பதால் மற்றவரின் தவறுகளின் மூலமாகவும் நம்மை நாம் சரி செய்து கொள்ள முடியும்.
குழுவாக இணைந்து செயல்படுதல்:
டோஸ்ட்மாஸ்டர் சங்கம் என்பது ஒருவர் மட்டும் பேசி கேட்பது இல்லை. கிளப்பில் 15 க்கும் மேற்பட்ட பாத்திரம் இருக்கிறது. எனவே, ஒவ்வொரு கிளப் சந்திப்பின் போதும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டு அதற்கான உரையினை பேசுவோம். இதன் மூலம் அனைவரும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி அந்த சந்திப்பை சிறப்பாக எடுத்த செல்ல வேலை செய்தோம். இதன் மூலம் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் மற்றவர்களிடம் இருந்து நமக்கும் அறிவு பரிமாற்றம் நடைபெறும், மேலும் குழுவாக இணைந்து வேலை செய்யும் திறமை வளர ஆரம்பிக்கும்.
இதனுடன் தலைமைப் பண்பைப் பற்றியும் இந்த செயல்பாடு மூலமாக நான் கற்றுக் கொண்டேன், ஒரு குழுவை எவ்வாறு வழிநடத்த வேண்டும் அவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் அளிக்க வேண்டும் போன்ற வற்றை நான் கற்றுக் கொண்டேன்.
முடிவுரை :
பொது மன்றத்தில் பேச சிரமப்படுபவர்களுக்கு டோஸ்ட்மாஸ்டர் சூழலில் மென்மையான திறன்களை வளர்க்க உதவும் ஒரு சிறந்த கருவி. ஆரம்ப கட்டத்தில், கூட்டத்தின் முன் பேசுவது கடினமாக இருக்கும், ஆனால் நீங்கள் ஒருமுறை பயிற்சி செய்து, இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்த்தினால், சரளமாக பேச உங்களால் முடியும். இறுதியாக, பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு மற்றும் நடத்தை திறன்களை வளர்ப்பதற்கான சிறந்த இடம் டோஸ்ட்மாஸ்டர்.