மாணவர் தேடல்:
டிசிகாப் பள்ளியில் இரண்டாவது ஆண்டு பயிற்சி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்றது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் கலந்துக் கொண்டனர். டிசிகாப் பள்ளிக் குழு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் டிப்ளமோ அல்லது 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரை தேடும் முனைப்பில் நேர்காணல்களைத் தொடர்ந்தது. மொத்தம் விண்ணப்பித்த 500 மாணவர்களில் சிறந்த 23 மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டார்கள். மேலும் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை நிறைய மாணவிகள் டிசிகாப் பள்ளியில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்கள்.
தொடக்க விழா:
புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கானத் தொடக்க விழா ஜூலை 17, 2023 அன்று அண்ணா நகரில் (சென்னை) அமைந்துள்ள டிசிகாப் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்றது. டிசிகாப் சமூகத்தில் (DCKAP Community) உள்ள பலர், மாணவ மாணவியர்களை வரவேற்பதற்காக தொடக்க விழாவில் பங்கேற்றனர். தொடக்க விழாவின் போது மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அனைவரின் முன்பாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பிறகு டிசிகாப் சமூகத்தில் இருந்து வந்த அனைவரும், டிசிகாப் பள்ளியைப் பற்றியத் தகவல்களையும், தங்களின் அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்துக் கொண்டனர். மேலும் டிசிகாப் பள்ளி மாணவர்களது வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும், டிசிகாப் பள்ளியின் இலக்கு குறித்தும், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விளக்கினார்கள்.
பரிசுகள் என்பது அன்பின் வெளிப்பாடு. மேலும் அது ஊக்கத்தின் குறியீடு. தலைமைச் செயல் அதிகாரி டிசிகாப்பின் சின்னமான காண்டாமிருக பொம்மையுடன் சேர்த்து, மாணவ மாணவிகளுக்கு வரவேற்புப் பரிசை வழங்கினார். மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதில் மிக முக்கிய அங்கம் வகிப்பது புத்தகங்கள். அப்புத்தகங்களில் சிறந்த ஒன்றான ஜேம்ஸ் க்ளியர் எழுதிய “சின்னஞ்சிறு பழக்கங்கள்” (Atomic Habits by James Clear) என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பு மாணவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு:
டிசிகாப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டயப்படிப்பு (Diploma) முடித்திருக்கும் மாணவர்களே தேர்வு செய்யப்படுவார்கள். பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து சிறந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தகுதித் தேர்வு மற்றும் நேர்காணலுக்காக அழைப்பு கொடுக்கப்படும். பிறகு தகுதித் தேர்விலும், நேர்காணலிலும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் டிசிகாப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதாவது கடந்த வருடம்தான் டிசிகாப் பள்ளியின் முதல் குழுவிற்கான (First Batch) பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. முதல் குழு பயிற்சி வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த மாணவர்கள் இருபத்து நான்கு பேர். அதில் ஒரே ஒரு மாணவி மட்டும் தான் இடம்பெற்றிருந்தார். முதல் குழுவில் பட்டயப்படிப்பு முடித்த இருபத்தியொரு மாணவர்களும், பள்ளி முடித்த மூன்று மாணவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். 2022 ஆம் ஆண்டில் பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் சென்னையில் படித்தவர்களாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களாகவும் மட்டுமே இருந்தார்கள். முதல் குழுவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் நேரடி நேர்காணல் (Walk in interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த ஆண்டு:
2023 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மூன்று மாணவர்களும், பட்டயப்படிப்பு முடித்த இருபது மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அளவில் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் விதமாக இந்த ஆண்டு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்கள் மட்டுமே சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள மாணவர்கள் டிசிகாப் பள்ளி பயிற்சி வகுப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது சிறப்புக்குரிய விஷயமாகும். சென்ற வருடம் கல்லூரிகளில் நேர்காணல் (Campus Interview) நடத்தப்படவில்லை. ஆனால் இந்த வருடம் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நேர்காணல் நடத்தப்பட்டு மாணவர்கள் டிசிகாப் பள்ளிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். பதினொரு மாணவர்கள் மட்டுமே நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசிகாப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் அரசுப் பள்ளியிலோ அல்லது அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியிலோ படித்தவர்கள். மேலும், பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை மென்பொருள் தொழில்நுட்ப பணியாளர்களாக ஆகப் போகிறவர்கள் என்பதில் டிசிகாப் பள்ளி பெருமையடைகிறது.
மாணவிகள்:
வெற்றி பெறுகின்ற குழுக்கள் எப்போதும் பெண்களைக் கொண்டிருக்கும் என்பது டிசிகாப்பின் நம்பிக்கை. டிசிகாப் பள்ளியை வெற்றி பெறும் குழுவாக மாற்றுவதற்கு, அதிக பெண்களைச் சேர்க்க டிசிகாப் ஒரு பயணத்தை மேற்கொண்டது. அந்தப் பயணம் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. 2023 ஆம் ஆண்டு டிசிகாப் பள்ளியின் இரண்டாவது குழுவின் (Second batch) பயிற்சி வகுப்பிற்கு மொத்தமாக இருபத்து மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசிகாப் பள்ளியின் முதல் குழுவில் ஒரே ஒரு மாணவி மட்டும் இடம் பெற்றிருந்த குறையை இந்த பயணம் மாற்றி அமைத்தது. மாணவிகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து பத்து என்றானது. இது மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஏறத்தாழ நாற்பத்து ஐந்து சதவீதம் ஆகும்.
மாணவர்களின் அனுபவம்:
மாணவர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட துறையில் இருந்தும், வெவ்வேறு பகுதியிலிருந்தும் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மாற்றுவதற்காக டிசிகாப் பள்ளி வந்துள்ளார்கள் என்பது அவர்களின் அறிமுக உரையில் இருந்தே புலப்பட்டது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தாங்கள் டிசிகாப் பள்ளியில் சேர்ந்த அனுபவத்தைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினர். மாணவர்களின் அறிமுகமே அவர்களின் ஆர்வத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்தது. பயிற்சியாளர்கள் பேசியபொழுது ஆர்வத்தோடு கவனித்தது மட்டுமல்லாமல் முதல் அறிமுகத்திலேயே தங்களுக்கு இருந்த அனைத்துச் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யுமளவிற்கு தொடர்ந்து வினாக்களைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். வினாக்கள் இந்த நிகழ்வை மிகவும் சிறப்பானதாக மாற்றியது. மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய இருப்பதை இது வெளிக்காட்டுகிறது. மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தின் மீதும் கற்றலின் மீதும் அதிகபட்ச ஆர்வம் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தில் இருந்தே வெளிப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்தவர்களாக வருவார்கள் என்பது திண்ணம். மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.