பள்ளி அல்லது கல்லூரி படிப்பை முடித்து விட்டு வாழ்வில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களில் நீங்களும் ஒருவரா?
பிடித்ததை படிக்காமல் கிடைத்ததைப் படித்துவிட்டு எதோ ஒரு நிறுவனத்தில் பிடிக்காமல் எதோ ஒரு வேலை செய்பவரா நீங்கள்?
வெற்றி பெற ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கும் மாணவர்களில் நானும் ஒருவன், மேலே கூறியவை உங்கள் வாழ்விற்கும் ஒற்று போனால் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நான், வெறும் ஒரு வருடத்தில் எந்த ஒரு கணினி தொடர்பும் இல்லாத நான் முழு அடுக்கு வலை மேம்பாட்டை கற்று கொண்டேன். என்னால் இது முடிந்தால் உங்களாலும் இதை செய்ய முடியும்.
நான் தீபக். டிசிகாப் பள்ளியில் ஒரு வருட பயிற்சி வகுப்புகள் முடித்து இப்பொழுது வேலை பயிற்சியில் உள்ளேன். கடந்த ஒரு வருடம் நான் டிசிகாப் பள்ளியில் கற்று கொண்டதை பற்றி இங்கு கூற போகிறேன். வாழ்வில் முன்னேற வேண்டும் என்று விரும்பும் அனைவரும் என் அனுபவத்திலிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை:
முதலில் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி பயணத்தைப் பற்றிக் காண்போம், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கணினி அறிவியல் பிரிவில் சேர வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் எனக்கு உயிரியல் பிரிவு தான் கிடைத்தது.
ஒரு வழியாக பள்ளியை முடித்துவிட்டு வெளியே வந்த போது மற்றொரு சவால் எனக்காகக் காத்திருந்தது, எந்த கல்லூரியில் சேர வேண்டும், என்ன படிப்பைப் படிக்க வேண்டும் என்று எனக்கு யாரும் வழிகாட்டவில்லை, கலைக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதா என்று எனக்கு குழப்பமாக இருந்தது.கடைசியாக எனக்கு மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மின் தொடர்பு பொறியியல் பிரிவில் டிப்ளோமா படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது.
கணினியில் ஆர்வம் இருந்தும் என்னால் அதற்கேற்ற படிப்பை படிக்க முடியவில்லை. கல்லூரியை முடிக்கும் தறுவாயில் கல்லூரி வேலை வாய்ப்பில், டிசிகாப் என்ற நிறுவனம் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்தது, அவர்களின் வேலை கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
எப்படியாவது அந்த நிறுவனத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இந்த முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சரி இங்கு தான் கிடைக்கவில்லை இதைப் போன்ற ஒரு நிறுவனத்தில் சேர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வாழ்வை மாற்றிய தருணம்:
எங்களுடைய கல்லூரி வேலை வாய்ப்பு குழுவிலிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது, டிசிகாப் நிறுவனம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது என்று.
ஒரு வருடத்திற்கு மென்பொருளில் பயிற்சி தருவதோடு உதவித்தொகையும் தருகிறார்கள் என்று அறிந்து கொண்டேன். அதிர்ஷ்டம் வாழ்வில் ஒரு முறை தான் கதவைத் தட்டும் என்று சொல்வார்கள், எனக்கு மட்டும் இரண்டாவது முறையாக அதிர்ஷ்டம் அடித்தது, இந்த முறை வாய்ப்பை தவற விடக் கூடாது என்று தீர்மானமாக இருந்தேன்
எப்படியாவது இந்த பயிற்சி நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு நேர்காணலில் கலந்து கொண்டேன். பல போராட்டங்களுக்குப் பின்னர் அதில் வெற்றி கண்டு இந்த பயிற்சியில் நுழைந்தேன்.
பள்ளி நாட்கள்:
செப்டம்பர் 12 அன்று பள்ளியில் என்னுடைய முதல் நாளை தொடங்கினேன், ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், டிசிகாப் பள்ளியில் உள்ள அனைவரும் என்னை ஒரு சக தோழனைப் போல் நடத்தினார்கள்.உயிர் காப்பான் தோழன் என்று சொல்வார்கள், வாழ்வில் இக்கட்டான நிலையில் நம்முடன் ஒரு நண்பன் இருந்தால் அதை எளிதாக வென்று விடலாம், பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்தது 23 புதிய நண்பர்களைப் பெற்றது தான்.
இந்த பயிற்சி திட்டத்தில் இருந்த அனைவரும் வெவ்வேறு துறையில் வெவ்வேறு இடத்திலிருந்து வந்தவர்கள், ஆனால் எப்பொழுதும் வேறு துறையைச் சேர்ந்தவன், வேறு இடத்திலிருந்து வந்தவன் என்று வேறுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்.
முதலில் ஹைப்பர்டெக்ஸ்ட் மார்க்அப் மொழி(HTML) மற்றும் அடுக்கு நடை தாள்களை(CSS) கற்றுக் கொடுத்தார்கள் அது சுவாரசியமாக இருந்தது. இது வரை என்னுள் இருந்த கணினி நிபுணர் துள்ளிக் குதித்து வெளியே வந்தான். முதலில் எனக்கு ஜாவாஸ்கிரிப்ட்டை(JavaScript) பார்க்கும் போது பயமாக இருந்தது, ஜாவாஸ்கிரிப்ட் சிக்கல்களைத் தீர்ப்பது எனக்குக் கடினமாக இருந்தது.நான் சிரமப்படுவதைப் பார்த்த எங்கள் பள்ளி குரு எளிதாகப் புரியும் படி கற்றுக் கொடுத்தார். அது எனக்கு ஊக்கமாக இருந்தது, நானும் கொஞ்சம் கொஞ்சமாக அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் மற்றும் மாதாந்திர மதிப்பீட்டில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன்
டோஸ்ட்மாஸ்டர் அனுபவங்கள்:
நான் ஆங்கில வழிக் கல்வியில் தான் படித்தேன் ஆனால் எனக்கு ஆங்கிலத்தில் பேசுவது மற்றும் எழுதுவது சற்று கடினமாக இருந்தது. பயிற்சியாளர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவது மற்றும் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்புவதற்குச் சற்று தயக்கமாக இருந்தது. டிசிகாப் பள்ளியில் சேருவதற்கு முன்பு நான் மேடையில் பேசியது கிடையாது, மேடையில் பேசுவது என்றால் எனக்கு மிகவும் பயம். பள்ளியில் எங்களுக்கு மென்திறன் பயிற்சியை அளித்தார்கள், சக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, பேச்சு பயத்தை போக்குவது, மின்னஞ்சலைச் சரியாக அனுப்புவது, வேலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், இவ்வாறு இணைய மேம்பாட்டை மற்றும் கற்றுக் கொடுக்காமல் வேலையில் வெற்றி பெறத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். மென்திறன் தேர்வில் நான் முதல் மதிப்பெண் எடுத்தேன், அது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது
டிசிகாப் பள்ளியில் சிறந்த பகுதி:
முன் முனையை முடித்துவிட்டு பின் முனையை கற்றுக் கொடுத்தனர், இதைக் கற்பித்த ஆசிரியர் எனக்கு ஒரு முன்மாதிரி, அவருடைய பின் முனை அறிவு மற்றும் அனுபவத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன்.அவரை போன்று நானும் ஒரு சிறந்த பின் முனை உருவாக்குநராக வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள், இதனால் பின் முனையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன், முதலில் தரவுத்தள மேலாண்மை அமைப்பை(DBMS) நன்றாக கற்று அதில் நடத்திய தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தேன், அடுத்த முறை முதல் இடம் பிடிக்க வேண்டும் என்று என் குரு எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் என் ஆர்வம் இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதே உத்வேகத்துடன் ஹைபர்டெக்ஸ்ட் முன்செயலியை(PHP) படிக்க ஆரம்பித்தேன். ஹேக்கர்ரேங்க்(HackerRank), கோட்வார்ஸ்(codewars) போன்ற இணைய தளங்களைப் பயன்படுத்தி எனது சிக்கல் தீர்க்கும் திறனை மேம்படுத்திக் கொண்டேன். எனது தருக்கச் சிந்தனையை மேம்படுத்த ஆரம்பித்துவிட்டேன். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடிந்தது.
என் வாழ்க்கையின் அடுத்தகட்டமாக இப்போது டிசிகாப்பில் பணியாளராகப் பயிற்சியைத் தொடங்கிவிட்டேன். டிசிகாப்பில் க்யு ஏ டச் (QA Touch) பிரிவில் பின்முனை மேம்பாட்டாலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது என் வாழ்நாளின் சிறந்த சாதனையாகக் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்த டிசிகேப் பள்ளிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னால் முடிந்தால் சிறந்த முயற்சியை அளித்து டிசிகாப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பேன் என்று உறுதியாக இருக்கிறேன்.
என்னைப் போன்று வாழ்வில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு என் கதை ஒரு வழிகாட்டாக அமையும் என்று நம்புகிறேன். விடாமுயற்சியோடு வாழ்வில் வரும் அனைத்து சாவல்களையும் எதிர்கொண்டால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம், நன்றி வணக்கம்.