துன்பத்தின் வலியறியா பள்ளிக் காலம்:
அனைவருக்கும் வணக்கம், நான் கோகுலப்பிரியன். மென்பொருள் பொறியாளராக வேண்டும் என்பது என் பல ஆண்டுக்கால கனவு. சிறிய வயதிலிருந்தே பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெறுவேன். என் வாழ்க்கை பதினைந்து ஆண்டுகள் எந்தவித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கழிந்தது. பள்ளிப்பருவம் தான் என் பொன்னான நாட்கள். நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்தேன். கொரோனா வைரஸ், எங்களை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிடாமலேயே தேர்ச்சி பெறச் செய்தது. சொந்த உழைப்பில்லாமல் கிடைத்த வெற்றி, படிப்பிற்கும் எனக்கும் இருந்த நெருக்கத்தில் இடைவெளி உண்டாக்கியது.
ஏழ்மை – துன்பத்திற்குத் திறவுகோல்:
மேல்நிலை படிப்பைத் தனியார்ப் பள்ளியில் தொடரப் போதிய வசதி இல்லாத காரணத்தினால் நான் அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். தனியார்ப் பள்ளியிலிருந்த சூழ்நிலை எனக்கு அரசுப் பள்ளியில் வாய்க்கவில்லை. தனியார்ப் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கவனிக்கும் விதம் மிகவும் வேறுபட்டிருந்தது. சரியான கவனிப்பு இல்லாத காரணத்தினாலும், மீண்டும் கொரோனா வைரஸ் பரவிய காரணத்தினாலும் நான் சரியாகப் பள்ளிக்குப் போகவில்லை. இவையனைத்தும் நான் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெறக் காரணமாக அமைந்தன. இதனால் நான் கல்லூரியில் சேர மிகவும் சிரமப்பட்டேன். சிறுவயதிலே நான் என் தந்தையை இழந்துவிட்டேன். என் தந்தையை இழந்த வருத்தம் இதுவரை என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. கல்லூரி சேரும் பொழுதுதான் முதன் முதலில் நான் குடும்ப கஷ்டத்தை உணர்ந்தேன். அதற்கு முன்பு வரை எனக்கு குடும்ப கஷ்டம் மற்றும் அப்பா இல்லை என்று எந்த ஒரு கவலையும் கிடையாது. எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் என் அம்மா என்னை மிகவும் ஆறுதலாக வளர்த்தார். மேல்நிலை படிப்பிற்குச் சேரும்பொழுதும், கல்லூரி சேர கஷ்டப்பட்டபொழுதும் நிறையச் சிந்தனைகள் எனக்குள் வந்தது. என்னுடன் படித்த என் நண்பர்கள் என்னைவிட மிகவும் குறைவான மதிப்பெண் வாங்கினார்கள். ஆனால், அவர்கள் தற்பொழுது நல்ல தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். அதைப் பார்க்கும்பொழுது எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டானது. எனக்கும் அப்பா இருந்திருந்தால், நானும் அவர்களைப் போல நல்ல கல்லூரியில் சிரமப்படாமல் சேர்ந்து படித்திருந்திருப்பேனே! எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கவேண்டும்? என்ற சிந்தனைகள் எனக்குள் கேள்விக்குறியாய் நின்றது. ஆனால் இதனை யாரிடம் சென்று கேட்பது? வேறு வழி இல்லாமல் எனக்குள்ளேயே இந்தக் கேள்விகளை அமைதியாகப் புதைத்துக் கொண்டேன்.
எதிர்காலத்தை நினைத்து அமைதியானது மனம்:
மேற்கண்ட அனுபவம் எனக்கு வாழ்க்கையின் மீதும் மற்ற எல்லாவற்றின் மீதும் பயம் உண்டாகச் செய்தது. வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறேன்? என்ற பயம் மேலோங்கி இருந்தது. இவையெல்லாம் என் மேலேயே எனக்குக் கோபம் உண்டாக வழி செய்தன. உண்மையிலேயே எனக்குத் திறமை இருக்கிறதா? இல்லை திறமை இருக்கிறது என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேனா? போன்ற விடை தெரியா வினாக்கள் என்னுள் உருவாகிக் கொண்டே இருந்தன. தாழ்வு மனப்பான்மை என்னைத் தலைகுனிய வைத்தது. இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களும், அதிகப்படியான யோசனையும், என்னை மிகவும் மனச்சோர்வடைய செய்தன. இந்த காலத்தில் என்னால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை, சரியாகத் தூங்க முடியவில்லை. அப்பொழுது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. இவ்வாறான விஷயங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், அதிகம் பேசக்கூடியவனாகவும் இருந்த என்னை அமைதியானவனாக மாற்றியது.
எவ்வாறு எனக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் வந்தது?
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நான் பள்ளியில் பயிலும்பொழுதே எனக்குக் கணினி அறிவியல் ஒரு பாடமாக இருந்தது. அப்பொழுது நான் கணினி பாடத்தில் HTML போன்றவற்றைப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதைப் படிக்கும்பொழுது என்னவோ தெரியவில்லை எனக்கு அதைப் பற்றி மேலும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நாட்டம் வந்தது. இது கணினி மீது எனக்கு இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது. நான் என் அக்காவின் மடிக்கணினியை ஆறாம் வகுப்பிலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அப்பொழுதெல்லாம் ஏதாவது தவறு செய்துவிடுவேன். நான் செய்த தவறு என் அக்காவிற்குத் தெரிந்தால் மீண்டும் மடிக்கணினி தரமாட்டார் என்பதனால் நானே தவறுகளை எல்லாம் சரி செய்ய முயற்சி செய்வேன்.
ஊக்குவிக்க ஆளிருந்தால்..
எனக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் வர வேறு முக்கியமான காரணம் ஒரு நபர். அவர் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர். அவர் மிகவும் நன்றாகப் படிக்கக்கூடியவர். அவர்தான் அவர் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். அவர் கல்லூரியிலும் மென்பொருள் பொறியியல் சேர்ந்து நன்றாகப் படித்து முடித்தார். தற்பொழுது அவர் டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊரடங்கு காலத்தில் நான் வீட்டில் இருக்கமுடியாமல் வேலைக்குச் செல்லப்போகிறேன் என்று என் அம்மாவிடம் கூறினேன். ஆனால் என் அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை. நான் கட்டாயம் போவேன் என்று என் அம்மாவிற்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் அம்மா அந்த அண்ணாவிடம் நான் வேலைக்குப் போக அடம் பிடிப்பது பற்றிக் கூறினார்கள். அதனைக் கேட்ட அவர் என்னிடம் கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை உரையாடினார். அந்த உரையாடலில் அவர் அவருடைய நேரடியான அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். வேலைக்குச் செல்வது வீண் என்றும் அது தற்காலிகமாக மட்டும் தான் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பிறகு கணினி நிரல் மொழியைக் (computer program language) கற்றுக்கொள் என்றார். இதைக் கற்றுக்கொண்டு நீயாகவே இணையத்தில் சுயமாகச் சம்பாதிக்கலாம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவரின் பணியைத் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே வந்து எனக்கு அவரின் பொன்னான நேரத்தைச் செலவிட்டு python என்ற நிரல் மொழியைக் கற்றுக் கொடுத்தார். நான் அவரைப் போலவே சிறந்த மென்பொருள் பொறியாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக எனக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் ஏற்பட்டது. ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்குவிப்பவன் கூட தேக்கு விற்பான் என்று சொல்வது சரியாகத்தான் உள்ளது.
டிசிகாப் பள்ளிக்கு எவ்வாறு வந்தேன்?
நான் கல்லூரியில் சேர்வதற்கு இரண்டு தடைகள் இருந்தது. ஒன்று மதிப்பெண் மற்றொன்று வசதி. இந்த இரண்டும் குறைவாக இருந்ததால் தான் நான் கல்லூரியில் சேர முடியாமல் சிரமப்பட்டேன். குறைகளை நிவர்த்தி செய்யும் பக்கத்துவீட்டு அண்ணனிடம் இந்த குறைகளைக் கூறினேன். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் புதிதாக டிசிகாப் பள்ளி என்ற பயிற்சி வகுப்பைத் துவக்கப்போகிறார்கள் என்றும் அப்பயிற்சி வகுப்பின் பயன் என்னவென்றும் முழுமையாகக் கூறினார். டிசிகாப் பள்ளி பயிற்சி வகுப்பின் நோக்கம் என்னவென்றால் விலையுயர்ந்த கல்லூரிக் கல்வியை பயில முடியாத மற்றும் கார்ப்பரேட் உலகில் நுழைய மாற்றுக் கல்வியைத் தேடும் தாழ்த்தப்பட்ட அல்லது குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களை நன்கு வளர்த்து தொழில் வல்லுநர்களாக உருவாக்குவதும் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, வேலைக்குத் தயார்ப்படுத்தப்பட்ட பிறகு டிசிகாப் சமூகத்தில் மென்பொருள் வேலைகளில் பணியமர்த்துவதும் ஆகும். டிசிகாப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களின் முழு குடும்பத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழு கற்றல் காலத்திற்கும் உதவித்தொகை வழங்குகிறார்கள். இதில் சேர்வதற்கு சில நிபந்தனைகள் மட்டும் உள்ளது. அவை என்னவென்றால் 12வது/டிப்ளமோ/பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் மட்டுமே இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். கணிதம் / வணிக கணிதம் பாடங்களைப் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களே இதில் சேர முடியும். மென்பொருள் நிரலாக்கத் திறன்களில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இவையெல்லாம் டிசிகாப் பள்ளி பற்றி அவர் கூறிய தகவல்கள். இதைக் கேட்டதும் மிகவும் வியப்படைந்தேன். அவர் எனக்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார். அதன் பிறகு நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. நேர்காணலுக்குச் செல்லும்பொழுது தேர்ந்தெடுக்கப்படுவேனா? இல்லையா? என்று பயந்து கொண்டேயிருந்தேன். மாலையில் முடிவுகள் அறிவிக்கும் போதும் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் முதலில் என் பெயரை அழைத்தனர். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். முதலில் பக்கத்துவீட்டு அண்ணாவை தொலைப்பேசியில் அழைத்து தகவல் தெரிவித்தேன். அவர் பாராட்டினார். அது பிரத்தியேகமானது. ஏனென்றால் அவர் அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டமாட்டார். அதனால்தான் அது எனக்கு மிகவும் விசேஷமானது. இவ்வாறே நான் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன்.
கடினமான முதல் கட்டம்:
வீட்டையும் குடும்பத்தையும் பிரிந்து இருந்தது இதுதான் முதல் முறை. எனக்கு முதலில் சென்னையைப் பிடிக்கவில்லை. எப்பொழுது வீட்டிற்குச் செல்லுவோம் என்றே இருப்பேன். டிசிகாப் பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தில் நான் சரியாகச் சாப்பிடவும், தூங்கவும் இல்லை. என்னுடைய எண்ணத்தில் ஒன்று மட்டும் தான் இருந்தது அது எப்பொழுது வீட்டிற்குச் செல்லுவேன் என்பதுதான். சரியாகத் தூங்காத காரணத்தினால் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக என்னால் இருக்க முடியவில்லை. நான் நன்றாகச் செயல்படவில்லை என்று நினைத்து எப்பொழுதும் பயம் என்னுள் இருந்தது. நான் பக்கத்துவீட்டு அண்ணாவிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு “நான் தகவல் தொழில்நுட்பத்திற்குச் சரியானவன் இல்லை” என்று கூறினேன். அதற்கு அவர் உனக்கு இதற்குத் தகுதி இல்லாமல் இருந்திருந்தால் நான் உனக்கு முதலிலேயே அறிவுறுத்தியிருக்கமாட்டான் என்று கூறினார். இதை விட்டால் இப்போது வேறு வழியும் இல்லை, கல்லூரியும் செல்லமுடியாது என்றும் கூறினார். இந்த வாய்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், வேலை கிடைப்பது இந்த போட்டி நிறைந்த உலகில் மிகவும் கடினம் என்பது பற்றியும் அவர் கூறிய பிறகுதான் நான் தெளிவடைந்தேன். ஆரம்ப நிலையில் நான் சிரமப்பட்டதற்கு காரணம் அலுவலகத்தில் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்ததுதான் என்று பின்னர்தான் புரிய வந்தது.
அனுபவங்களின் ஊடே ஒரு கற்றல்:
நான் அனைவரிடமும் நன்றாகப் பேசிக் கொண்டிருப்பது நாட்கள் போகப் போகத் தான் தெரிந்தது. நான் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அலுவலகத்திற்கு வருவது மட்டுமல்ல அனைத்துமே எனக்கு ஒரு புதிய அனுபவம். ஏனென்றால் வீட்டில் நான் எந்த வேலையையும் செய்யமாட்டேன். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. துணி துவைத்தல், நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் போன்ற அனைத்தையும் நான் தான் செய்யவேண்டும். நம் வேலையை நாம்தான் செய்யவேண்டும் என்றும் நம்மை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் புரிந்து கொண்டேன். எவ்வாறு இருக்க வேண்டும்? எப்படி ஒருவருடன் பேச வேண்டும்? மற்றும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றும் நான் கற்றுக்கொண்டேன்.
தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்:
நான் இங்கு வந்த பிறகு நிறைய நல்ல மனிதர்களைச் சந்தித்தேன். இங்கு வரும் பயிற்சியாளர்கள் மிகவும் கனிவாகவும் பணிவாகவும் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் அனைவரும் என்னை மிகவும் வசதியாகக் கவனித்துக்கொள்கிறார்கள். சிறந்த நண்பர்கள் எனக்கு இங்குக் கிடைத்தார்கள். நேர்மையான நபர்களை பார்க்கும்பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இங்கு வந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே புதியவை மற்றும் வாழ்க்கைக்குத் தேவையானவை. நாட்கள் போகப் போக எனக்கு என் வீட்டிற்குப் போகவே தோன்றவில்லை. இந்த புதிய இடம் புதிய மனிதர்கள் தினமும் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்க்கை எனக்குப் பிடிக்கத் தொடங்கியது. இங்கு வந்து நிறைய புதிய பழக்கங்களைக் கற்றுக்கொண்டேன். புத்தகம் வாசிப்பது, துணி துவைத்தல், நேரத்திற்குச் சாப்பிடுவது, நேரத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொண்டேன். அதுமட்டுமன்றி தொழில்நுட்பத்திறனையும், தகவல் தொடர்புத் திறனையும் வளர்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் தொழில்நுட்பத்தில் புதிய இணைப்புகளை உருவாக்கினேன். தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும் (survival of the fittest) என்பது எந்த அளவிற்கு உண்மை பொதிந்துள்ள கருத்து என்பதைப் புரிந்து கொண்டேன்.
கற்றல் மேல் உண்டான காதல்:
நான் ஒரு நேர்மறையான அணுகுமுறையை உருவாக்கினேன். முன்பு இருந்த கோகுலப்பிரியனுக்கும் இப்போது இருக்கும் கோகுலப்பிரியனுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன. நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எல்லா இடங்களிலும் முதிர்ச்சியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்றவர்களுடன் எப்படிப் பேச வேண்டும்? மக்களுடன் ஆரோக்கியமான உறவை எவ்வாறு உருவாக்குவது? மக்களிடம் பணிவாகவும் நேர்மையாகவும் எப்படி இருப்பது? போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். டிசிகாப் பள்ளி பயணத்தின் முன்பு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை நான் புறக்கணித்தேன். அப்பிரச்சனைக்கு தீர்வை யோசிக்காமல் அதிலிருந்து எப்படி விலகுவது என்பதையே ஆராய்ந்தேன். ஆனால் இப்பொழுது எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் யாருடைய உதவி இல்லாமல் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நன்றாக வளர்ந்துவிட்டதை உணர்கிறேன்.
தொழில்நுட்பங்களுடன் ஒரு வாழ்க்கை:
ஐ.டி உலகைப் பொறுத்தவரை நிறையப் புதுப்புது மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதில் தேக்கநிலை ஏற்படும் பட்சத்தில் ஒருவரின் வளர்ச்சி தடைபடுகிறது. டிசிகாப் பள்ளியில் இணைவதற்கு முன்பே நான் python பற்றி படித்திருந்தேன். ஆனாலும் இங்கு தான் நான் நிரலாக்க மொழிகளைப் (Programming language) பற்றித் தெளிவாகத் தெரிந்துக் கொண்டேன். வலைதள பக்கங்களை உருவாக்க உதவும் HTML, வலைதள பக்கங்களை மெருகூட்டவும் அதற்கான தளவமைப்பை (layout) உருவாக்கவும் பயன்படும் CSS, வலைதள பக்கங்களை மேம்படுத்த உதவும் JAVASCRIPT, தகவல்களை சேகரிக்கவும் மீட்டெடுக்கவும் பயன்படும் DBMS போன்ற மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றி அறிந்துகொண்டேன். ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ளும்போதும் உள்ளுற ஒரு உணர்வு என்னை உந்திக்கொண்டே இருந்தது. நம்முடன் படித்த நண்பர்கள் கல்லூரியில் சேர்ந்து கற்றுக்கொண்டு சாதிக்க முடியாத வெற்றியை (வேலைவாய்ப்பு) டிசிகாப் பள்ளி எனக்குச் சாதிக்க வழியமைத்துக் கொடுத்ததுள்ளதை எண்ணி என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. கஷ்டங்கள் துன்பங்கள் அல்ல, அவை இன்பம் எனும் வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். புது மழையில் முளைத்த காளான்கள் போல சந்தேகங்கள் (doubts) நிறைய முளைத்துக் கொண்டே இருந்தன. கேள்வி கேட்பவன் சில நிமிடங்களே முட்டாள். அதைக் கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முழுக்க முட்டாள் என கன்பூசியஸ் சொன்னது நினைவுக்கு வரும். இதையே பின்பற்றி பயிற்சி வகுப்புகளில் நிறைய கேள்விக் கணைகளைத் தொடுப்பேன். எல்லாமே சிறிது நேரத்திற்குள்ளாகவே தீர்க்கப்படும். அத்தகைய பயிற்றுவிப்பாளர்கள் தான் என் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் என்று சொன்னாலும் தகும்.
புத்தகங்களுடன் ஒரு வாழ்க்கை:
கற்றல் தான் ஒரு மனிதனை உயர்த்துகிறது. ஒருவன் எவ்வளவு அறிவாளி என்பது அவன் எவ்வளவு ஆழமாக ஒரு விஷயத்தை கற்றுள்ளான் என்பதைவிட அவன் அதை எப்படி மற்றவர்க்ளுக்கு விளக்குகிறான் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனக்கும் புத்தகங்களுக்கும் நீண்ட இடைவெளியை இருந்து வந்தது. டிசிகாப் பள்ளி புத்தகங்களை எனது நண்பனாக்கியது. வாசிப்பு என்னை சமூக அக்கறை உள்ள ஒரு நபராக மாற்றியது. என்னையே நான் புரிந்து கொள்ள வாசிப்பு உதவியது. ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம்தான் உள்ளது. அந்த 24 மணி நேரத்தை ஒருவர் எவ்வளவு கச்சிதமாக பயன்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு அவரின் அறிவின் நிலை உயர்ந்திருக்கும். சாதாரண வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அசாதாரணமான வாழ்க்கையை வாழ வாசிப்பு அவசியம் என்ற ஜான் ரான் கூற்றுக்கிணங்க நான் வாசிக்கிறேன், சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்காக.
இலட்சியப் பயிரின் விளைச்சல் காலம்:
ஒரு பயிர் வளர்ப்பில் முக்கியமான காலம் நாத்தை வேறு இடத்திற்கு மாற்றிப் பயிர் நன்றாக வளரும் காலம். இது விளைச்சல் காலம் என அழைக்கப்படும். நான் வளர்ச்சியடைந்த காலம் டிசிகாப்பில் கல்வி கற்கும் காலம். இதுவே என் விளைச்சல் காலம் என்று நினைக்கையில் நான் மகிழ்வுறுகிறேன். நாம் என்னவாக நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகுவோம். நமக்கானது நமக்கு மட்டும்தான் என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வலைப்பதிவினை வாசித்தமைக்கு நன்றி, வணக்கம்.
great writing @gokulapriyan
nice its very motivational to us thanks for share this post
It’s my pleasure. Thanks for reading.