எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல் – திருக்குறள் 489
ஒரு செயலை செய்வதற்கு நாம் உரிய காலத்திற்காக காத்திருக்க வேண்டும். அந்த காலம் வரும்போது, நம்மால் இயன்றதை செய்து முடிக்க வேண்டும், காலதாமதம் செய்ய கூடாது என்று திருவள்ளுவர் கூறுகிறார். இதை என் வாழ்க்கை கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
என் பெயர் ஹரி ஸ்ரீதர். சென்னையில் பிறந்த நான் 10ம் வகுப்பை வரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தேன். பின்னர் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் கணினி பொறியியல் டிப்ளோமா படிப்பை படித்தேன். டிப்ளோமா படிப்பை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தேடிக்கொண்டிருந்தேன். பல வேலைகள் கிடைத்தாலும் அதில் சேர எனக்கு விருப்பம் இல்லை. அப்போது தான் என் நண்பர் எனக்கு டிசிகாப் பள்ளியை பற்றி கூறினார்.
அவரின் பரிந்துரையில் நான் பள்ளி நேர்காணலில் கலந்து கொண்டேன். நேர்காணலில் கலந்து கொள்வது உற்சாகமாக இருந்தாலும் சற்று பதற்றம் எனக்குள் இருந்தது. எங்கள் முழு திறனையும் சோதிக்கும் விதமாக நேர்காணல் அமைந்திருந்தது. நம்மை தேர்ந்தெடுப்பார்களா மாட்டார்களா என்பதை பற்றி நினைக்காமல், என்னால் இயன்றதை நான் செய்தேன். முடிவில் நான் பள்ளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த சமயம் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. பள்ளியுடனான எனது பயணம் தொடங்கியது. எனக்காக காத்திருக்கும் சவாலை எதிர்கொள்ள நான் ஆவலாக இருந்தேன்.
பள்ளி பயணம்
முதலில் பள்ளி பயிற்சியை பற்றி பார்க்கலாம். இது பதினெட்டு மாதங்கள் கொண்ட பயிற்சி திட்டம், ஒரு வருடம் நிரலாக்க மொழிகள் மற்றும் தொழில்முறை பயிற்சி பின்னர் ஆறு மாதம் வேலை பயிற்சி. வலை மேம்பாட்டு துறையில் எங்களை ஒரு நிபுணராக மாற்றவது தான் பள்ளியின் நோக்கம். பயிற்சி திட்டமும் அந்த வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
நான் கணினி துறையில் டிப்ளோமா முடித்துள்ளதால் எளிதாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன் என்று நினைத்தேன். ஆனால் கற்க தொடங்கிய போது தான் நாம் கற்க வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது என்பதை உணர்ந்தேன். வலைத்தளத்தை கட்டமைப்பது என்பது ஒரு சாவலான காரியம் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும் கற்க கற்க இந்த அனுபவம் மகிழ்ச்சியான ஒன்றாக மாறியது. என்னுடைய தொழில்நுட்ப அறிவு வளர வளர எனது நம்பிக்கையும் பெருகியது.
ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதன் அடித்தளம் மிகுந்த வலிமையோடு இருக்க வேண்டும். முதலில் முன்இறுதி நிரலாக்க மொழிகளை நன்றாக கற்க தொடங்கினோம். பின்னர் பின்இறுதி மொழிகளை கற்க ஆரம்பித்தோம். முதலில் பி.எச்.பி (PHP) கற்பதில் இருந்து ஆரம்பித்தோம். விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து, பின்இறுதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொண்டேன். மேலும் எனக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதை உடனே பள்ளி பயிற்சியாளர்களிடம் கேட்பேன், அவர்களும் என் சந்தேகங்களை எளிதாக புரியும்படி விளக்குவார்கள். இந்த ஆழ்ந்த கற்றல் அனுபவம் முன்இறுதி மற்றும் பின்இறுதி இரண்டிலும் எனது புரிதலை மேம்படுத்தியது.
நிரலாக்கத்திற்கு அப்பால்
தொழில்நுட்ப திறன்களுக்கு அப்பால், தனிப்பட்ட முறையில் நான் வளரக்கூடிய சூழலை டிசிகாப் பள்ளி உருவாக்கியது. டோஸ்ட்மாஸ்டர்கள் மற்றும் வெளிநிகழ்வுகளுக்கு செல்வதன் மூலம் எனது தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தொழில்நுட்ப திறனோடு தகவல் தொடர்பு திறனையும் வளர்த்து கொண்டால் மட்டுமே வேலை மற்றும் வாழ்க்கை இரண்டிலும் சிறந்து விளங்க முடியும் என்று இந்த அனுபவங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது. இனையதள வடிவமைப்பாளரின் பணி குறியீட்டை எழுதுவது மட்டுமல்ல, கருத்துக்களை திறம்பட தெரிவிப்பதும் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு செயலை செய்வதும் தான் என்பதை நான் தெரிந்துகொண்டேன். குழுவாக பணிபுரியும் போது தான் தகவல் தொடர்பு திறனின் தேவையை நான் அறிந்துகொண்டேன்.
இதை தவிர தலைமைத்துவ திறனை வளர்த்துக் கொள்ளவும் பள்ளி எனக்கு உதவியது. நான் டிசிகாப் பள்ளியில் தலைமைத்துவம் மற்றும் சுய முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட பல புத்தகங்களைப் படித்தேன். இந்த புத்தகங்களிலிருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன், என் மனநிலையை எவ்வாறு மேம்படுத்துவது, சவால்களை உறுதியுடன் எவ்வாறு அணுகுவது, ஒரு சிறந்த தலைவரின் பண்புகள் என்னென்ன, மற்றவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது போன்றவற்றை நான் கற்றுக்கொண்டேன்.
பள்ளி கலாச்சாரம்
பள்ளியில் நான் சந்தித்த நபர்கள், குறிப்பாக பள்ளி பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தனர். எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர்கள் இருந்தனர். இதன் காரணத்தால் நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை. தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி கலாச்சாரத்திற்கு ஏற்ப நடந்துகொள்வதில் சாவால்கள் இருந்தாலும் சரி, எல்லா நேரங்களிலும் எங்களுக்கு உதவிகரமாகவும் இருந்தனர்.
பயிற்சி என்பது தொழில்நுட்ப திறன்களைப் பெறுவது மட்டுமல்ல, அது ஒரு தனிநபராக முன்னேறுவது தான் என்பதை பள்ளி எனக்கு புரியவைத்து. ஒரு காலத்தில் எனது திறன்கள் மீது எனக்கே நம்பிக்கை இருந்தது கிடையாது, தற்போது எந்தச் சவாலையும் சமாளிக்கும் அறிவும் நம்பிக்கையும் கொண்ட நபராக நான் வளர்ந்து இருக்கிறேன். விடாமுயற்சி, சுய கற்றல் மற்றும் தலைமைத்துவத்தின் மதிப்பையும் நான் கற்றுக்கொண்டேன்.
குழு பணி அனுபவம்
கல்வி என்பது நாம் கற்றுக்கொள்வதைப் பயன்படுத்துவதாகும், அது வெறும் கோட்பாடு சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பது பள்ளியின் நோக்கம், ஆகவே நாங்கள் கற்பதை செயல்படுத்தி பார்க்க எங்களுக்கு திட்ட செயல்பாடு வழங்கப்படுகிறது. முதலாவதாக கற்றல் மேலாண்மை அமைப்பை (LMS), எனது குழுவுடன் நான் உருவாக்கினேன். இந்தத் செயல்பாடு எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) போன்ற முன்இறுதி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இது ஒரு அற்புதமான கற்றல் அனுபவமாக இருந்தது, ஒரு குழுவுடன் சேர்ந்து எவ்வாறு பணிபுரிவது என்பதை நான் இந்த செயல்பாட்டின் மூலம் தெரிந்துகொண்டேன்.
இரண்டாவதாக அறை பகிர்வு செயலியை நாங்கள் உருவாக்கினோம். இந்த திட்டத்திற்காக, நாங்கள் ஒரு புதிய கட்டமைப்பை பயன்படுத்தினோம் முன்இறுதிக்கு – ரியாக்ட்.ஜே.எஸ் (React.js) மற்றும் பின்இறுதிக்கு லாரவெல் (Laravel) அமைப்பு. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் வேலை செய்ய இந்த செயல்பாடு எனக்கு கற்றுக்கொடுத்தது. முழு அடுக்கு மேம்பாடு பற்றிய முழுமையான புரிதலை எனக்கு இந்த செயல்பாடு கற்றுக்கொடுத்தது.
ஒரு வருட பயிற்சிக்கு பிறகு தற்போது நான் டிசிகாப் இன்டக்ரேட்டரில் வலை மேம்பாலராக எனது வேலை பயிற்சியை தொடங்க உள்ளேன். இன்டக்ரேட்டர் குழுவின் ஒரு பகுதியாக பணியாற்றவும் வளரவும் நான் ஆர்வமாக உள்ளேன். எனது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கும், பல்வேறு திட்டங்களுக்கு பங்களிப்பதற்கும் நான் காத்திருக்கிறேன். டிசிகாப் பள்ளியில் சேர்ந்தது தான் என் வாழ்கையை மாற்றும் தருணமாக அமைந்தது என்று நம்புகிறேன். மேலும் இந்த அற்புதமான பயணம் முழுவதும், நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் எனக்கு ஆதரவளித்த நபர்களையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நன்றி!