Skip to main content

என் பெயர் பிரகாஷ் ராமச்சந்திரன். இங்கு நான் எனது டிசிகாப் பள்ளி பயணத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் தமிழ்நாட்டின்  சுத்தமல்லி என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்திலேயே எனது பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் என் டிப்ளோமா படிப்பை முடித்தேன். பட்டப் படிப்பை முடித்ததும், உயர் கல்வி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எனினும், என் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, என்னால் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போதுதான், எனது நண்பர் அருணாச்சலம் டிசிகாப் பள்ளியை எனக்கு அறிமுகப்படுத்தினார். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் உணர்ந்தேன்.

உண்மையா இல்லை கனவா?

டிசிகாப் பள்ளியின் நேர்முக தேர்வுக்காக, முதன் முதலில் நான் சென்னைக்கு வந்தேன். நேர்காணலில் கலந்துகொள்ளும் போது எனக்கு பதற்றமும் பயமும் அதிகரித்தது. என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற எண்ணம் மனதை வருடிக் கொண்டிருந்தது. அன்று மாலையில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயரை அறிவித்தார். அதில் என் பெயரும் இருந்தது. இது உண்மையா இல்லை கனவா என்று ஒரு நிமிடம் சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் என் நண்பர்கள் எனக்கு வாழ்த்துக் கூறிய போது தான் உண்மை என்று உணர்ந்தேன். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அளவில்லா ஆனந்தத்துடன் இந்த செய்தியை என் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை வாழ்த்தினர்.

வாழ்கையின் சிறந்த தருணம்

என் வாழ்கையில் நான் எடுத்த முடிவுகளில் சிறந்த முடிவு என்றால் அது டிசிகாப் பள்ளியில் சேர்ந்தது தான். இங்கு நான் வலை மேம்பாட்டை பற்றிய பல கருத்துகளையும் திறன்களையும் கற்றுக்கொண்டேன். மக்கள் தொடர்பின் இன்றியமையாமையை எனக்கு இவர்கள் உணர்த்தினார்கள். அடிப்படை கருத்துகளை முதலில் கற்று, அதன் பின்னர் நிரலாக்க மொழிகளைக் கற்க ஆரம்பித்தோம். 

முதலில் முன்இறுதி மொழிகளான எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மொழியைப் பற்றித் தெரிந்துகொண்டோம். இதனுடன் தர்க்கரீதியாக எவ்வாறு ஒரு சவாலை எதிர்கொள்வது போன்றவற்றை கற்றுக் கொண்டோம். இதைப் பயன்படுத்தி ஒரு செயல் திட்டத்தை மேற்கொண்டோம். இதுவரை நாங்கள் கற்றதைச் செயல்படுத்திப் பார்க்க இந்த செயல்திட்டம் உதவியது. 

பின்இறுதி மற்றும் முழுஅடுக்கு செயல்திட்டம்

முன்இறுதியில் நிபுணத்துவத்தைப் பெற்ற பின்னர் பின் இறுதி கருத்துகளைக் கற்க ஆரம்பித்தோம். தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS), பி.எச்.பி (PHP), மை.எஸ்.க்யூ.எல் (MySQL) ஆகிய பின்இறுதி நிரலாக்க மொழிகளைக் நான் கற்றுக்கொண்டேன். முன்இறுதி மற்றும் பின்இறுதி இரண்டிலும் தெளிவான புரிதல் கிடைத்ததால், எந்த துறையிலும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. 

பின்னர் முன்இறுதி மற்றும் பின் இறுதி இரண்டையும் பயன்படுத்தி ஒரு முழு அடுக்கு செயல்திட்டத்தில் நாங்கள் பணிபுரிந்தோம். இதற்கு டிசிகாப் நிறுவனத்திலிருந்த ஒருவர் எங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார். அவரின் வழிகாட்டுதல் மற்றும் பள்ளி குருக்களின் ஆதரவோடு அந்த செயல்திட்டத்தை நானும் என் குழுவினரும் வெற்றிகரமாக முடித்தோம். ஒரு குழுவாகச் செயல்படும் போது அனைவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும், அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அவர்களுக்கு பணியை வழங்க வேண்டும், சிக்கல்கள் ஏற்பட்டால் அதைச் சுமூகமாகச் சமாளிக்க வேண்டும், இது அனைத்தையும் இங்குக் குழுவாக வேலை செய்யும் போது நான் கற்றுக்கொண்டேன். 

மென்திறனும் முக்கியம்

தனிநபராக நாம் செயல்படுவதை விட ஒரு குழுவாகச் செயல்படும் போது பலவற்றை நாம் வெற்றி கொள்ளலாம் என்பதை நான் உணர்ந்தேன். என் குழுவினருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

தொழில்நுட்பத்துடன் இங்கு மென்திறனின் முக்கியத்துவத்தையும் நான் அறிந்துகொண்டேன். ஒரு பணியிடத்தில் சாதிக்க வேண்டும் என்றால் தொழில்நுட்ப திறன் மற்றும் போதாது, அதனுடன் தலைமைப்பண்பு, பேச்சுத் திறன், மக்கள் பண்பு, குழுவாக பணிபுரிதல் ஆகியவையும் முக்கியம் என்று தெரிந்துகொண்டேன். இதனுடன் சுய கற்றலின் முக்கியத்துவத்தையும் நான் தெரிந்துகொண்டேன். புத்தகம் வாசிப்பது, வெளி நிகழ்வுகளுக்குச் செல்வது, இணையதள படிப்புகள் என்று எவ்வாறு நம்மை மேம்படுத்துவது என்று நான் தெரிந்துகொண்டேன். இது அனைத்திற்கும் டிசிகாப் பள்ளிக்கு நான் நன்றிகளைத் தெரிவிக்கவேண்டும். 

நான் மேலும் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். டிசிகாப் பள்ளியில் நான் பெற்ற மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, எனது குழுவினர் மற்றும் வழிகாட்டிகளின் நட்பும் ஆதரவும் ஆகும். அவர்கள் எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பதோடு, கடினமான காலங்களின் போது எனக்குப் பக்கபலமாக இருந்ததோடு, நான் எதிர்கொண்ட சவால்களைத் திறம்படக் கடக்க உதவினர். இந்த ஒரு வருடத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நான் கற்றுக்கொண்டேன். நாங்கள் தொழில்நுட்பம் மென்திறன் என எல்லாவற்றிலும் சிறந்துவிளங்கப் பல முயற்சிகளை டிசிகாப் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டனர், அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இவர்கள் அனைவரின் உதவியோடு எனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, தற்போது வேலை பயிற்சியில் இணைந்துள்ளேன். மேலும் பலவற்றை கற்று இந்த துறையில் நிபுணத்துவத்தைப் பெற நான் ஆவலாக இருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த டிசிகாப் பள்ளிக்கு மனமார்ந்த நன்றிகள். 

Prakash Ramachandran

Author Prakash Ramachandran

More posts by Prakash Ramachandran

Join the discussion One Comment

Leave a Reply