எந்த ஒரு பெரிய காரியத்தையும் ஆர்வம் இல்லாமல் சாதிக்க முடியாது என்று, எமர்சன் கூறுகிறார். இதற்கு என் வாழ்க்கை பயணமே ஒரு சாட்சியாகும். ஆர்வம் இருந்தால் எல்லா தடைகளையும் தாண்டி வாழ்வில் வெற்றி பெறலாம் என்று நான் நம்புகிறேன். ஒரு சிறிய ஆர்வம் என் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை இன்று நான் உங்களிடம் கூற போகிறேன். வாருங்கள் என் கதையைக் கேட்போம்.
நான் சஞ்சய். டிசிகாப் பள்ளியில் ஒரு வருடப் பயிற்சி வகுப்புகள் முடித்து இப்பொழுது வேலை பயிற்சியில் உள்ளேன். ஆனால் என் கதை இங்கு ஆரம்பிக்கவில்லை, சிறு வயதிலேயே இதற்கான விதையை நான் விதைத்து விட்டேன்.
வாழ்க்கையின் ஆரம்ப நிலை
எனக்கு சிறுவயதிலிருந்து மடிக்கணினி, தொலைப்பேசி, தொலைக்காட்சி போன்றவை எப்படி வேலை செய்கிறது, அதில் என்ன பொருள்கள் உபயோகிக்கப்படுகின்றன போன்றவை பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் அதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தேன். கணினி பற்றித் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் இருந்தும் அதனைப் பற்றி எந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தேன்.
நான் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு கணினி சார்ந்த படிப்பைப் படிக்க விரும்பினேன். ஆனால் என்னை உயிரியல் படிப்பினை படிக்கவைத்தார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. 12 ஆம் வகுப்பில் என் படிப்பினை நான் நிறுத்திவிட்டேன். எனது அண்ணனின் மடிக்கணினி எனக்குக் கிடைத்தது. அதை வைத்து மென்பொருளில்(software) செயலிகளை மாற்றியமைக்கச் செய்வது, கோப்புகளை மாற்றியமைப்பது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். பிறகு நான் டிப்ளமோ கல்வியினை பயின்றேன்.
டிப்ளமோ படிப்பினை முடித்த பிறகு என்ன வேலை செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பெற்றோருக்காகக் கிடைத்த வேலையைச் செய்து வந்தேன். ஆனால் அது எனக்கு திருப்திகரமாக இல்லை. வேறு எதாவது வேலை கிடைக்குமா, வாழ்வில் சாதிக்க ஒரு பாதை கிடைக்குமா என்று தேடி கொண்டிருந்தேன். எப்படியாவது கணினித் துறையில் இணைய வேண்டும் என்ற என் ஆசை தாகம் மட்டும் குறையவே இல்லை. எதாவது வழி கிடைக்காமலா போகும் என்று நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டேன்.
வாழ்க்கையின் திருப்புமுனை
வேலை இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். கிடைத்த வேலையும் பிடிக்கவில்லை, பிடித்த வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான் டிசிகாப் பள்ளியில் பயிலும் மாணவி மற்றும் என் தோழி சந்தியா அவர்கள் டிசிகாப் பள்ளி பற்றிக் கூறினார்கள். டிசிகாப் பள்ளியில் தொழிநுட்ப கல்வியினை கற்று தருவதாகவும் அதே நேரத்தில் உதவித்தொகை தருவதாகவும் கூறினார்கள்.
பிறகு நான் டிசிகாப் நிறுவனத்திற்குச் சென்று நேர்காணலை முடித்தேன்.பிறகு அதில் நான் தேர்வாகினேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிடித்தமான வேலையும் கற்றுத்தந்து ஊக்கத்தொகையினையும் தருவது எனது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலிருந்தது. இது மற்றுமின்றி மடிக்கணினி, காலை மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. வாழ்வை மாற்றும் பாதை கிடைத்துவிட்டது இதை விடக்கூடாது என்று இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். எனது திறமையினை மேம்படுத்தி வாழ்வில் அடுத்தகட்ட நிலையை அடைய முடிவு செய்து விட்டேன்.
டிசிகாப் பள்ளியும் கற்றல் அனுபவங்களும்
செப்டம்பர் 12 என் வாழ்க்கையின் முக்கிய நாளாக நான் உணர்கிறேன். டிசிகாப் பள்ளியில் எனது முதல் நாளை தொடங்கினேன். அது ஒரு கனவு போல் இருந்தது. இங்கு சேர்ந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். எனது திறமையை வளர்த்துக்கொண்டு, கணினியைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாகியது. முதல் நாள் அன்று அனைவரும் அவர்களை அறிமுகப்படுத்தினர். புதிய நண்பர்களைப் பெறப் போகிறோம் என்று ஆனந்தம் அடைந்தேன்.
டிசிகாப் பள்ளியின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆண் பெண் என்று வேறுபாடு காட்டாமல், அனைவரும் சமம் அனைவருக்கும் சம உரிமை என்பதை இவர்கள் ஆதரித்தனர். ஆரம்பத்தில் பயிற்சியாளர்களை சந்திக்கும்போது பதட்டமாகவே இருந்தது. ஏனென்றால் இவர்கள் நடத்தும் விதம் எவ்வாறு இருக்கும், அது நமக்குப் புரியுமா, இது நம்மால் முடியுமா போன்ற பல கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என் எண்ண ஓட்டங்களைத் தகர்க்கும் விதமாக அங்கு நடந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பயிற்சியாளர்கள் போல் இல்லாமல் ஒரு சக நண்பனைப் போல், ஒரு சக தொழிலாளி போல் அவர்கள் எங்களை நடத்தினர். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களிடம் பேசுவதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் எளிதாக அமைந்தது.
என்னுடைய தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்தார்கள்.எல்லோருக்கும் புரியும் விதமாகப் பாடங்களை நடத்தி அதில் இருக்கும் சந்தேகங்களைத் தெளிவு படுத்தி, எங்களை ஒரு சிறந்த மேம்பாலராக ஆக்க பாடுபட்டனர். எங்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வையும் கொடுத்தனர்.
ஒரு முழு அடுக்கு வலை மேம்பாலருக்கு தேவையான அனைத்து திறன்களையும் கற்பித்து, அதில் எங்களை முழுவதுமாக தயார்ப்படுத்தினர். HTML, CSS, DBMS, JavaScript மற்றும் PHP போன்ற நிரலாக்க மொழிகளைக் கற்றுக்கொண்டது மட்டும் இல்லாமல் பேச்சுத் திறன் போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் என்னுடைய ஆங்கிலத்தில் பேசும் பயத்தை நீக்கி, சரளமாகப் பேச உதவினர்.
எங்கள் தலைமை அதிகாரி அவர்கள், எங்களிடம் இருக்கின்ற திறமைகளைப் பார்க்க மிகவும் ஆர்வம் கொண்டவர். அவருக்கு அதிக வேலை இருந்தாலும் எங்களுக்கென நேரத்தை ஒதுக்கி எங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை அளிப்பார். அப்போது தொழில்நுட்பத்தில் எங்களுக்குத் தெரிந்தவற்றைப் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம்.அவருடைய அனுபவங்களையும் எங்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவரும் அதிகம் தெரிந்து கொண்டதாகக் கூறினார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
தமிழ் விசைப்பலகை பற்றி தலைமை அதிகாரி அவர்கள் எங்களிடம் பேசினார். அவருக்குத் தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் இதனை ஏன் ஒரு திட்டமாகச் செய்யக்கூடாது? என்று கேட்டார். அதற்கு நாங்கள் செய்கிறோம் என்று கூறினோம். எங்கள் திட்டக் குழுவில் உள்ள அனைவருக்கும் இதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து. நாங்கள் எங்கள் திட்டத்தைத் தொடங்கினோம். அதை வெற்றிகரமாகச் செய்யக் கடுமையாக உழைத்தோம், தலைமை அதிகாரி அவர்களும் முடிந்த போதெல்லாம் எங்களுக்கு உதவினார். இந்த திட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய ஒரு வருடப் பயிற்சி காலம் முடிந்தது.அடுத்த கட்டமாக டிசிகாப் நிறுவனத்தில் வேலை பயிற்சியைத் தொடங்கி உள்ளேன். இந்த ஒரு வருடத்தில் பல்வேறு திறன்களை நான் இங்குக் கற்றுக்கொண்டேன். அது மட்டும் இல்லாமல் பல புதுமையான திட்டங்களில் ஒரு பகுதியாக இருந்தேன். இவை எனக்கு நிறைய அனுபவத்தை அளித்தன. நான் இப்போது கிளைசர்(Klizer) குழுவில் மெஜென்டோ (Magento) வில் பின் முனையில் வேலைப்பயிற்சியில் இருக்கிறேன். இது நான் ஒரு வருடமாகக் கற்றுக்கொண்டதற்க்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது!
நன்றி!