Skip to main content

சவால்கள் இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. அந்த சவால்களை எதிர்கொள்வதில் தான் வாழ்கையின் மகத்துவம் அடங்கியுள்ளது! 

என் பெயர் தீட்சிதா லட்சுமணன். நான் திருச்சியில் இருந்து வருகிறேன். நான் சேஷசாயி தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளேன. சிறு வயது முதலே நான் யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன். அதே போல் மற்றவர்களும் என்னிடம் சரியாக பேசி பழகியது இல்லை. இதனால், என் வாழ்கையில் தனிமை ஒரு நீங்காத இடத்தை பிடித்திருந்தது. ஆனால், எப்போதும் என் பெற்றோர்களும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

சவால்களும் கல்லூரி வாழ்க்கையும்

பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேரலாம் என்று முடிவு செய்து, திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) துறையில் சேர்ந்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலையால் மற்றும் தந்தையின் உடல்நிலை சரயில்லாமல் போனதால் என் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது எங்கள் வாழ்கையை தலைகீழாய் மாற்றியது. நானும் என் தம்பியும் படிப்பை நிறுத்தினோம். ஒரு புத்தக கடையில் வேலைக்கு சேர நான் முடிவுசெய்தேன். ஆனால், அதற்காக நான் தினமும் தனியாக பேருந்தில் செல்ல வேண்டும். கேட்பதற்கு சிறிய விஷயமாக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அது பெரிய சவாலாக இருந்தது. நான் வேலை செய்வதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், என் குடும்பத்திற்காக அதை நான் செய்தேன். 

இந்த சமயத்தில் தந்தையின் உடன்பிறந்தவர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தார்கள். அவர்களின் ஆதரவோடு, என் கல்லூரி பயணத்தை மீண்டும் நான் தொடர்ந்தேன். மீண்டும் கல்லூரிக்கு செல்வது எனக்கு ஒரு கனவு போல இருந்தது. நண்பர்கள் சிலர் கிடைத்த போதும் நான் பெரும்பாலும் தனிமையிலயே இருந்தேன். முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிட்டேன். இதனால் நல்ல மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது. இந்த சமயத்தில் தான் அடுத்த சவால் எனக்காக காத்திருந்தது. கல்லூரி கடைசி ஆண்டின் போது என் தந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் என்னால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய மதிப்பெண்களும் குறைய ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் நான் கலந்து கொண்ட பல்வேறு நேர்காணல்களிலும் நிராகரிக்கப்பட்டேன். இது என் எதிர்காலத்தை குறித்து எனக்கு கவலையை ஏற்படுத்தியது.

என் வாழ்கையை மாற்றிய தருணம்

இந்த நேரத்தில் தான் நேர்காணலுக்காக டிசிகாப் பள்ளியில் இருந்து எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார்கள். மீண்டும் ஒரு நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டுமா என்று நான் நினைத்தேன். இருந்தாலும், முயற்சி செய்வதில் தவறில்லை என்பதால் அந்த நேர்காணலில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு தெரியவில்லை அது தான் என் வாழ்கையை மாற்ற போகிறது என்று. ஒரு புறம் நம்மை தேர்ந்தெடுப்பார்களா என்ற அச்சம் இருந்தாலும் நம்பிக்கையோடு செயல்பட்டேன். முதல் இரண்டு சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சுற்றிற்கு சென்றேன். மூன்றாவது சுற்றில் மனிதவள மேலாளர் என்னிடம் பல கேள்விகளை கேட்டார். என் குடும்ப சூழ்நிலை, கணினி துறையில் எனக்கு இருக்கும் ஆர்வம் இவ்வாறு அனைத்தையும் நான் கூறினேன். கடைசியில் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று கேள்விபட்டவுடன் எனக்கு ஆகாயத்தில் பறப்பது போன்று இருந்தது.

என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், முதலில் பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டும். நான் சென்னைக்கு செல்வதில் என் தந்தைக்கு பெரிதும் விருப்பம் இல்லை. இதில் நான் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் எடுத்துக்கூறி ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, சென்னையை நோக்கி புறப்பட்டேன். எனது குடும்பத்தையும் சொந்த ஊரையும் விட்டு வருவது கடினமான அனுபவமாக இருந்தது. இருந்தாலும் என் எதிர்காலத்தை நோக்கி நான் செல்வதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். ஜூலை 17, 2023 அன்று நான் டிசிகாப் பள்ளியில் அடியெடுத்து வைத்தேன். அங்கு இருந்த சூழ்நிலையை பார்த்து எனக்குள் இருந்த பயம் எல்லாம் பறந்துவிட்டது. அங்கு இருந்த அனைவரும் என்னிடம் நட்பாக பழகினார்கள்.

வாய்ப்புகளை கைப்பற்றுங்கள்

தனிப்பட்ட ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் என்னை வளர்ச்சியடைய டிசிகாப் பள்ளி பல வாய்ப்புகளை அளித்துள்ளது. முதலில் எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துகளைக் கற்று ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினோம். சுய-கற்றல், புத்தகம் படித்தல், நாட்குறிப்பு எழுதுதல், டோஸ்ட்மாஸ்டர்கள் மற்றும் வலையொலிகள் (Podcasts) மூலம் தகவல் தொடர்பு திறன், தலைமைப் பண்பு, படைப்பாற்றல் திறன்களை நான் பெற்றேன். முதலில், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால் என்ன பயன் கிடைக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, அவை என் மீது ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நான் காண ஆரம்பித்தேன்.

கனிதமிழ் மாநாடு, புத்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இது எனது அறிவை மேலும் விரிவுபடுத்தவும், புது மனிதர்களை சந்திக்கவும் உதவியது. நான் கற்றுக் கொண்டதை செயல்படுத்தி பார்க்க பல செயல் திட்டங்களை நானும் என் நண்பர்களும் மேற்கொண்டோம்.  விவசாயப் பொருட்களுக்கான மின் வணிக தளமான அக்ரிகார்ட் (AgriKart) மற்றும் நிகழ்வு-ஒழுங்கு தளமான EventSpot போன்ற செயல் திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.

மறக்க முடியாத தருணங்கள்

கடினமாக காலங்களிலும் பள்ளி குழுவினர் எங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை உறுதிசெய்து, இந்த கடின சூழ்நிலையிலும் எங்களுக்கு உணவுகளை கொண்டு வந்து கொடுத்தனர். இந்த கருணை செயல்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். எங்கள் பெற்றோர் போன்று எங்கள் நலனில் முழு அக்கறை காட்டினார்கள். பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று முதல் முறையாக பிறந்தநாள் கேக்கை நான் இங்கு வெட்டியது தான். இதற்கு முன்னர் எங்கள் குடும்பத்தில் இதை செய்ததில்லை, நமக்கு யாருவது இதை செய்வார்களா என்று நினைத்திருந்தேன். இங்கு அது நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அது இருந்தது.

தற்போது நான் எனது பயிற்சியை முடித்து வேலை பயிற்சியில் இணைத்துள்ளேன். இந்த ஓராண்டு பயணத்தில், வெறும் பணியிடமாக இல்லாமல் – ஒரு குடும்பமாக பள்ளி இருந்தது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் டிசிகாப் பள்ளிதான். எனது கடந்தகால போராட்டங்களை முறியடித்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க எனக்கு உதவிய நண்பர்கள், வழிகாட்டிகள், பள்ளி குருக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பலவற்றை கற்று என் வாழ்கையை மேம்படுத்த நான் காத்திருக்கிறேன்.  நன்றி!

Theetshitha Lakshmanan

Author Theetshitha Lakshmanan

More posts by Theetshitha Lakshmanan

Leave a Reply