என்னை பற்றி ஒரு சில வரிகள்:
என்னுடைய பெயர் யுவராஜ் சந்திரசேகரன். கணினி சார்ந்த படிப்பைப் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. குடும்பச் சூழல் காரணத்தினால் என்னால் அந்த படிப்பை எடுத்துப் படிக்க முடியவில்லை. அதனால், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளோமா பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை எடுத்துப் படித்தேன். கல்லூரியின் இறுதி ஆண்டில் வளாக நேர்காணலில் ஒரு நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டேன். அந்த நிறுவனத்தில் இணைந்து 2 வாரங்கள் வரை வேலை செய்தேன். அந்த இயந்திர வாழ்க்கை எனக்கு மிகவும் வெறுப்பினை உண்டாக்கவே அங்கிருந்து நின்று வேறு வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது டிசிகாப் பள்ளியைப் பற்றி அறிந்தேன். அவர்கள் தகவல் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து அவர்களது நிறுவனத்திலேயே பணிபுரிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதைப் பற்றியும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வாகி தற்போது ஆறு மாத பயணத்தைச் சிறப்பாக முடித்துவிட்டேன். இந்த பதிவில் டிசிகாப் பள்ளியில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் என்னுடைய இந்த அருமையான கற்றல் பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன்.
டிசிகாப் கலாச்சாரம் :
நான் டிசிகாப் கலாச்சாரத்தின் தீவிர ரசிகன். டிசிகாப் கலாச்சாரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் மற்றும் மதிக்கின்றேன். ஏனென்றால், அந்த கலாச்சாரம் நமது சமுதாயத்தில் உள்ள மற்ற நிறுவனங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது. அப்படியென்ன கலாச்சாரம் என்று கேட்டீர்களானால் ஒவ்வொன்றாகக் கூறுகிறேன்.
- அனைவரும் சமம்
- தொடர்ச்சியான கற்றலை ஊக்குவித்தல்
- வாசிப்பவர்கள் தலைவர்கள்
- தங்களை ஒரு நிறுவனமாகக் கருதாமல் சமூகமாகக் கருதுகின்றனர்
- வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை
- பெண்களுக்குச் சம உரிமை அளித்தல்
- வேலையின் போது அணியாகச் செயல்படுதல்
மேலும் கூறிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. டிசிகாப் கலாச்சாரத்தைப் பற்றி முழுவதும் அறிய டிசிகாப் கலாச்சாரத்தின் இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்.
எனது பயணம் :
என்னுடடைய அனுபவங்களை எப்படிச் சுருக்கி எழுதுவது என்று தெரியவில்லை. ஏனென்றால், ஓரிரு அனுபவம் என்றால் எளிதாகக் கூறிவிடலாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம். முடிந்த வரை அனைத்தையும் இந்த ஒரு பதிவில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். டிசிகாப் பள்ளியின் முதல் நாள், மாணவர்களாகிய எங்களுக்கும் மற்றும் டிசிகாப் குழுவிற்கும் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டோம் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். ஏனென்றால், நாங்கள் தான் டிசிகாப் பள்ளிக்கு முதலாவது குழு அதனால் அவர்களுக்கும் அளவுகடந்த மகிழ்ச்சி. அனைவருமே புதிய நபர்களாக இருக்கவே முதல் நாளன்று அனைவருமே ஒரு சிறிய தயக்கத்துடன் காணப்பட்டோம். அதனைப் போக்கப் பள்ளி குழு எங்களுக்கு ஒரு சில விளையாட்டுகளை நடத்தி தயக்கத்தை போக்கினர். அடுத்ததாக டிசிகாப் பள்ளியில் ஒரு வருடம் ஆறு மாதம் இணைந்தது படிப்பதற்கான பணி கடிதத்தில் கையொப்பம் இட்டது அதுவும் ஒரு மறக்க முடியாத தருணம். மேலும், பல திறன்களைக் கற்றுக்கொண்டேன் அவற்றை ஒவ்வொன்றாகப் பின்வருமாறு பார்ப்போம்.
தொழில்நுட்ப ரீதியாக நான் கற்றுக்கொண்டவை :
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், அடிப்படையாகக் கணினியைப் பயன்படுத்தும் முறை அதன் செயல்பாடுகள் குறித்துக் கற்றுக்கொண்டேன். இணையதள சேவைப் பற்றியும் அது செயல்படும் முறையையும் கற்றுக்கொண்டேன். இணையதள வடிவமைப்பிற்கு தேவைபடக்கூடியக் கணினி மொழிகளான HTML, CSS, JAVASCRIPT போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன் மற்றும் அது தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
அதுமட்டுமின்றி இணையதள வடிவமைப்பிற்கு முக்கியத் தேவைகளான, பயனர் அனுபவம் (user experience) மற்றும் பயனர் இடைமுகம் (user interface) பற்றியும் அதற்காகப் பயன்படுத்தக்கூடிய Figma கருவியைப் பயன்படுத்தும் முறை பற்றியும் கற்றுக் கொண்டுள்ளேன். இணையதள சந்தைப்படுத்துதல் பற்றிய அடிப்படைகளை கற்றுக் கொண்டேன்.
மேலும், நம்முடைய தகவல்கள் எவ்வாறு தரவுத்தளத்தில் (Database) சேமிக்கப்படுகிறது என்பது பற்றி தரவுத்தள மேலாண்மை (Database management system) வகுப்பில் கற்றுக்கொண்டேன். டிசிகாப் நிறுவனம் அவர்களுடைய விநியோகஸ்தர்களுக்கு, எவ்வித பணிகளைச் செய்து கொடுக்கிறது மற்றும் டிசிகாப் கருவிகள் பயனர்களுக்கு எப்படி உதவுகிறது அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
என்னதான் நமது தாய்மொழி தமிழாக இருந்தாலும் தொழில் ரீதியாக வரும்போது கண்டிப்பாக ஆங்கிலம் தான் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி டிசிகாப் நிறுவனத்தின் ஊழியர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் தொடர்புகொண்டு பேசியே ஆகா வேண்டும் என்ற சூழலில் ஆங்கிலம் தான் அங்குப் பயன்படும். எனவே, ஆங்கிலத்தில் பேசுவதற்கான (communication skill) திறன்களை வளர்க்கும் வகுப்புகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. நானும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு முயற்சித்து வருகிறேன். ஆங்கில வகுப்பில், ஆங்கிலத்தில் பேச வைப்பது மட்டுமல்லாமல் மேலும் நமது நடத்தை திறன், ஒழுக்கம், நேர மேலாண்மை, அணுகுமுறை போன்றவற்றைப் பற்றியும் எங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
கூடுதல் செயல்பாடுகள் :
மேலும் பள்ளியில் வாராந்திர அனுபவத்தைப் பற்றி எழுதும் படி கூறினார்கள். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வார நாட்களில் நிகழ்ந்தவற்றை நினைவு கூற இந்த வாராந்திர பதிவு உதவிகரமாக இருக்கும். அந்த பதிவை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புகிறோம். அது எங்களுக்கு ஆங்கிலத்தில் வாக்கியம் உருவாக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி புத்தகம் படிக்கும் பழக்கத்தினை என்னுள் வளர்த்துக் கொண்டு வருகிறேன். நாங்கள் பள்ளியில் இணைந்தவுடன் எங்களுக்கு சின்னஞ்சிறு பழக்கங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இந்த புத்தகம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டு படித்து வரும் படி கூறினார்கள். புதிய பழக்கங்களை நம்முள் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதைப் பற்றி இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் கிளியர் அருமையாகக் கூறியிருப்பார். ஒவ்வொரு வாரமும் புத்தக மன்றம் (Book club) என்ற ஒன்று பள்ளியில் நடத்தப்பட்டு அந்த புத்தகத்தில் புரிந்ததை பற்றிப் பேசுவோம். இதன் மூலம் ஒவ்வொருவரும் அவர்கள் விதத்தில் புரிந்தவற்றைக் கூறுவார்கள் இதன் மூலமாக நான் நிறையக் கற்றுக்கொண்டேன். அதுமட்டுமின்றி கூட்டத்திற்கு முன் நின்று பேசுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. இந்த புத்தக மன்றம் மூலமாக அந்த தயக்கத்தை குறைத்துக்கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த பள்ளி நிர்வாக குழுவிற்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
இவற்றை தாண்டி :
அவ்வப்போது எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு புதிய தலைப்புடன் எங்களைச் சந்திக்க வருவார். முதல் முறை நம்மால் விலைகொடுத்து வாங்க முடியாத ‘நேரத்தை’ பற்றி வகுப்பு எடுத்தார். டிசிகாப் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின்-ல் அமைந்துள்ளது. எனவே அங்கிருந்தும் ஊழியர்கள் நிறுவனத்திற்கு பணியாற்றி வருகின்றனர். சில சமயங்களில் அவர்களுடன் இணைந்து வேலை பார்க்க வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் அவர்களுக்கும், நமக்கும் நேர மாற்றம் இருக்கக்கூடும் அதனைப் புரிந்து கொள்ளும் விதமாக இந்தியாவிற்கும்-அமெரிக்காவிற்கும் இடையிலான நேர மாற்றத்தைப் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுத்தார். இரண்டாவதாகத் தலைமைத்துவம் பற்றியும் அதை எவ்வாறு நம்முள் வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றியும் வகுப்பு எடுத்தார். அடுத்ததாக, ஒரு முறை எங்களுக்கு வணிகம், தொழில்நுட்பம், புத்தகம் போன்ற தலைப்புகளின் கீழ் எங்களைப் பேசும் படி கூறினார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் வணிகம் என்ற தலைப்பின் கீழ் படிப்பினை கைவிட்டு வெற்றிகரமாக ஆஸ்திரேலியாவில் தேநீர்க் கடை நடத்தி வரும் ஒரு இந்திய இளைஞரைப் பற்றிப் பேசினேன். அந்த தருணம் தலைமை அதிகாரி முன் நின்று பேசுவது மிகவும் தைரியத்தையும், பெருமிதத்தையும் கொடுத்தது. மேலும், டிசிகாப் பள்ளி தினம் தினம் ஒரு புதிய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பதை நான் முழுவதுமாக உணர்கிறேன். நானும் அதைத்தான் விரும்புகிறேன். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையின் போது வகுப்புக்குச் செல்வதில் சற்று ஆர்வமற்று காணப்பட்டேன். நான் சரியாக வகுப்புக்கு செல்ல மாட்டேன் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுதியில் அதிகம் இருப்பேன். ஆனால், டிசிகாப் பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுக்கக் கூட என் மனம் இடம் கொடுக்க மறுக்கிறது. நான் இங்குக் கூற வருவது “ஆர்வத்தை” பற்றித் தான். ஆம், நமக்கு எந்த ஒரு விஷயம் அதிக ஆர்வத்தைக் கொடுக்கிறதோ அதை நம்மால் செய்யாமல் இருக்க முடியாது மற்றும் அதைத் தவிர்க்கவும் முடியாது. இவ்வாறாகவே நான் டிசிகாப் பள்ளியில் உணர்கிறேன்.
அன்று முதல் இன்று வரை:
பள்ளியில் இணைந்த இந்த தினம் வரை எங்களுடன் அதிகம் இருப்பவர்கள் பள்ளி நிர்வாக குழு தான். கண்டிப்பாக இவர்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த பயணத்தில் நாங்கள் சோர்வடைந்தாலோ அல்லது பாதை மாறினாலோ எங்களைத் தட்டி எழுப்பி எங்களை மீண்டும் அதே பாதைக்கே கொண்டுவந்து விட்டுச் செல்பவர்கள். எங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதை விட அதிகமாகக் கவலைப் படக் கூடிய நபர்கள். நாங்கள் அனைவருமே டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே அவர்களுடைய மிகப்பெரிய ஆசை என்று எங்களிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்கள். மேலும், எங்களுக்குப் படிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து குறைகள் இன்றி பார்த்துக் கொள்பவர்கள். அவர்களின் ஆசைப் படியே நாங்கள் அனைவருமே டிசிகாப் நிறுவனத்தின் ஊழியராகப் பணி அமர்வு பெறுவோம் என்று கூறிக் கொள்கிறேன். அவர்களுடைய கனவுகள் நனவாக என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் மாத ஊக்கத்தொகை :
டிசிகாப் பள்ளியில் எங்களுக்கு மாதம் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதல் மாத ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் பெற்றிருப்பதைப் பார்த்ததும் மிகப்பெரிய சந்தோஷம். அதைவிட சந்தோஷம் என்னவென்றால், வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தி தான் டிசிகாப் டெக்னாலஜீஸ் என்ற வாசகத்துடன் வந்திருந்ததைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருந்தது. அதற்குள்ளாக, டிசிகாப் நிறுவனத்தில் இணைந்து விட்டது போல் உணர்ந்தேன். இந்த ஊக்கத்தொகை எங்கள் அனைவருக்குமே மிகவும் உதவிகரமாக இருக்கிறது. நானும் எனது நண்பர்களும் ஒன்றாக இணைந்து வாடகை வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, எனக்கு வீட்டு வாடகைக்கும், இரவு உணவிற்கும் மற்றும் என்னுடைய வீட்டிற்கு ஒரு சிறிய தொகை போக என்னுடைய அன்றாட செலவுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நண்பர்கள்:
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செயல்படுவதில் நட்புக்கு வேறு எந்த உறவும் நிகராகாது. டிசிகாப் பள்ளியில் எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களைக் கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். நண்பர்கள் என்று இங்கு என்னுடன் பயின்று வரக்கூடிய மாணவர்கள் மட்டுமின்றி எனக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய பயிற்சியாளர்களையும் சேர்த்துத் தான் கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பயிற்சியாளர்களாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நண்பர்களாக எங்களுடன் பழகிக் கொண்டிருக்கின்றனர். மேலும், என்னுடைய அனுபவங்களைக் கூறிக்கொண்டே போகலாம் அடுத்த பதிவிற்குக் கொஞ்சம் மீதம் வைத்துக்கொள்ளும் விதமாக இத்துடன் இந்த வலைப்பதிவை முடித்துக்கொள்கிறேன். பொறுமையுடன் என்னுடைய அனுபவங்களை வாசித்தமைக்கு மிக்க நன்றி. மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
நன்றி !