கனவுகளை நோக்கி நகரும் இந்த வாழ்கையில் ஒரு சில தருணங்கள் நம் வாழ்வை முன்னேறச் செய்கின்றன, அப்படி என் வாழ்வில் நடந்த தருணம் தான் டிசிகாப் பள்ளி. என் பெயர் சினேகா நாகராஜன். நான் புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்தவள். தகவல் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த துறையில் எப்படி இணைவது என்று நான் சிந்தித்த நேரத்தில் என் கல்லூரியின் மூலம் டிசிகாப் பள்ளியைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.
இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் எனது கனவு நிறைவேறும் என்று நினைத்தேன். இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன். பல்வேறு சவால்களைக் கடந்து டிசிகாப் பள்ளியில் இணைந்தேன். தற்போது எனது ஒரு வருடப் பயிற்சியை முடித்து, வேலை பயிற்சியில் இணைய உள்ளேன். இந்த தருணத்தில் டிசிகாப் பள்ளியில் எனது அனுபவத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அடிப்படைகளுடன் தொடங்குதல்
என் கற்றல் பயணம் வலை மேம்பாட்டின் அடிப்படைகள், எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்டை (JavaScript) கற்பதன் மூலம் தொடங்கியது. இந்த அடிப்படை மொழிகள், வலை மேம்பாட்டில் ஆர்வமுள்ள எவருக்கும் மிகவும் முக்கியமானவை. எச்.டி.எம்.எல் (HTML) வலைப்பக்கங்களை அமைக்க எனக்குக் கற்றுக்கொடுத்தது, சி.எஸ்.எஸ் (CSS) அவற்றை அலங்கரிக்க உதவியது, மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) செயல்பாடுகளைச் சேர்க்க உதவியது. டிசிகாப் பள்ளியின் கற்பிக்கும் அணுகுமுறை மற்றும் பயிற்சிகள் இந்த தொழில்நுட்பங்களை எளிதாக கற்கவும் ஆர்வத்துடன் செயல்படவும் எங்களுக்கு உதவியது.
தொழில்முறை மற்றும் சுய மேம்பாடு
டிசிகாப் பள்ளி தொழில்நுட்ப அம்சங்களில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், தொழில்முறை மற்றும் சுய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. பல்வேறு அமர்வுகளின் மூலம், திறமையான தொடர்பு திறன், குழு வேலை, தொழில்முறை நடத்தை போன்றவற்றை நான் கற்றுக்கொண்டேன். இந்த திறன்கள் தொழில்நுட்ப துறையில் மிகவும் அவசியமானவை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். மேலும், இது பல்வேறு சூழ்நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள எனக்கு உதவியது.
இந்தப் பயணத்தின் போது, எனது நிரலாக்கத் திறன்களை மட்டுமன்றி, எனது தொடர்புத் திறனையும் மேம்படுத்திக் கொண்டேன். இதற்கு எனக்கு உதவிய ஒன்று டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கத்தில் இணைந்தது தான். இது என்னைச் சிறந்த தொடர்பாளராகவும், மேலும் தன்னம்பிக்கையுடன் பேசக்கூடியவராகவும் மாற்றியது. கூடுதலாக, சென்னை ரியாக்ட் நிகழ்வுகள் மற்றும் டிசிகாப் பள்ளி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகச் சந்திப்புகளில் பங்கேற்றது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வுகள் தொழில் நுட்பத்தின் புதிய போக்குகளை அறிந்து கொள்ள உதவின. மேலும், வல்லுநர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்புகளையும் அளித்தன.
சவால்களை எதிற்கொள்ளுதல்
நாங்கள் கற்று கொண்டதைச் சோதிக்க பள்ளியில் எங்களுக்கு ஒரு திட்டச் செயல்பாட்டை வழங்கினர். இந்த குழு செயல்பாடு, நான் கற்றுக்கொண்ட திறன்களை நடைமுறையில் பயன்படுத்த எனக்கு வாய்ப்பளித்தது. சவால்களை எதிர்கொண்டு, டிசிகாப் பள்ளி சமூகத்தின் ஆதரவு மற்றும் உற்சாகத்துடன், நான் குழு செயல்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். இந்த அனுபவம் எனது நம்பிக்கையை மேலும் உயர்த்தியது மற்றும் வலை மேம்பாட்டின் மீது எனது புரிதலை உறுதியாக்கியது.
பி.எச்.பி மற்றும் எஸ்.க்யூ.எல் கற்றல்
அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட பிறகு, நான் பி.எச்.பி (PHP) மற்றும் எஸ்.க்யூ.எல் (SQL) மொழியைக் கற்றுக்கொண்டேன். பி.எச்.பி (PHP), சர்வர் பக்க ஸ்கிரிப்டிங் மொழியாகச் செயல்படுத்தக்கூடிய வலை பயன்பாடுகளை உருவாக்க உதவியது. எஸ்.க்யூ.எல் (SQL) மூலம் தரவுத்தொகுப்புகளை நிர்வகிக்கவும் மற்றும் சேமிக்கவும் எனக்குச் சுலபமானது. இந்த திறன்கள் சவாலான வலை மேம்பாட்டுத் திட்டங்களில் பணிபுரிய எனக்கு உதவியது.
இறுதி திட்டம்: மாங்கோடிபி (MongoDB) மற்றும் எக்ஸ்பிரஸ்.ஜே.எஸ் (Express.js)
பின்னர் நான் மாங்கோடிபி (MongoDB) மற்றும் எக்ஸ்பிரஸ்.ஜே.எஸ் (Express.js) தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். மாங்கோடிபி (MongoDB) எனக்குத் தரவுகளை நெகிழ்வாக மற்றும் செயல்திறனுடன் நிர்வகிக்க உதவியது, மற்றும் எக்ஸ்பிரஸ்.ஜே.எஸ் (Express.js) உறுதியான மற்றும் செயல்திறனுள்ள வலை பயன்பாடுகளை உருவாக்க உதவியது. இந்த இறுதி திட்டம் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் மேலும் புரிந்துகொள்ள உதவியது.
எனது நண்பர்களுக்கும், பள்ளி முதல் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கும் என் உணர்வுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. கற்றுக்கொள்வதில் எனக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் என் நண்பர்கள் எனக்கு உதவினார்கள். அவர்களின் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், இரண்டாம் சக வகுப்பு நண்பர்களும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றனர். எனது நண்பர்களுடன் சேர்ந்து புதிய விஷயங்களை கற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
டிசிகாப் பள்ளியின் முழுமையான மற்றும் ஆதரவான கற்றல் சூழல் என் வாழ்வின் மிகப் பெரிய பரிசாக இருந்தது. அவர்கள் வழங்கிய பாடத்திட்டம் தொழில்நுட்ப திறன்களை மட்டுமன்றி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்றங்களை வழங்கியது எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. டிசிகாப் பள்ளியுடன் என் பயணம் என் வாழ்கையை மாற்ற எனக்கு உதவியது. எதிர்கால பள்ளி மற்றும் டிசிகாப் திட்டங்களில் என் திறன்களைப் பயன்படுத்த நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனது கற்றல் பயணத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருந்ததற்கு டிசிகாப் பள்ளிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.