எதிர்பாராத தருணங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை, ஆனால் அதற்காக சோர்ந்துவிட்டால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. இதை என் பயணத்தில் இருந்து நீங்கள் கட்ருகொள்வீர்கள். வணக்கம் என் பெயர் ஆஷா கம்பராஜன். என்னுடைய ஊர் மதுரை. என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மதுரையில் தான் முடித்தேன். பள்ளி படிப்பை முடித்ததும் கணினி துறையில் டிப்ளோமா பயின்றேன்.
கல்லூரியில் பயிலும்போது என்னுடைய நோக்கம் ஒரு நல்ல வேலையில் இணைய வேண்டும் என்பது தான். அப்போது தான் டிசிகாப் பள்ளியை பற்றி என் கல்லூரி மூலமாக தெரிந்துகொண்டேன்.
பயணம் ஆரம்பம்
டிசிகாப் பள்ளியின் பிரதிநிதிகள் எங்கள் கல்லூரிக்கு வந்து பள்ளியை பற்றி கூறினார்கள். பள்ளியில் நாங்கள் என்ன கற்றுக்கொள்வோம், இதனால் எங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன, கல்லூரி படிப்பிற்கும் பள்ளியில் பயில்வதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, பள்ளியில் எப்படி சேர்வது போன்ற அனைத்தையும் பற்றி பேசினார்கள். இது என்னை வெகுவாக ஈர்த்தது. பள்ளியின் பிரதிநிதிகள் என்னுடன் உரையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எப்படியாவது பள்ளியில் சேர வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாகியது. பல சுற்றுகளுக்கு பின்னர் நான் பள்ளியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டேன். பள்ளியில் நான் சேர்ந்ததை பற்றி என் பெற்றோரிடம் கூறினேன். அவர்களுக்கும் இது மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளியில் சேர நான் சென்னை வந்தேன். என் பெற்றோரை விட்டு நான் தனியாக வாழ்வது இதுதான் முதல் முறை.
17 ஜூலை 2023 அன்று, டிசிகாப் பள்ளியுடன் எனது பயணம் தொடங்கியது. முதல் நாளில் பல பேரை நான் சந்தித்தேன், அவர்களோடு உரையாட எண்ணினேன். அவர்கள் அனைவரும் முழு புன்னகையுடனும் அன்பான இதயத்துடனும் என்னை வரவேற்றனர். அன்று, நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், ஏனென்றால், கடின உழைப்பின் மூலம், எனது இலக்கை அடையும் முதல் படியை நான் எடுத்துள்ளேன்.
பிறகு நாங்கள் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்க ஆரம்பித்தோம். எங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை பள்ளி பயிற்சியாளர்கள் தெளிவுப்படுத்தினர். எங்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல் ஒரு வழிகாட்டியாகவும் செயல்பட்டனர்.
எதிர்பாராத திருப்பம்
வாழ்கையில் எல்லாம் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இந்த நேரத்தில், ஒரு பெரும் துயரம் என்னை வந்தடைந்து. என்னுடைய தந்தையை நான் இழந்தேன். இந்த நேரத்தில் பள்ளி குழுவினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் ஆதரவோடு நான் பள்ளிக்கு திரும்பினேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, எனது குடும்பத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு என்னை வந்தடைந்து. என்னுடைய இலக்கை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்தேன். பின்னர் ஜாவாஸ்கிரிப்ட்டை கற்க ஆரம்பித்தேன், என்னுடைய முழு முயற்சியையும் இதில் நான் செலுத்தினேன். இந்த சமயத்தில் டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகளில் நான் பங்கேற்றேன். இது எனது பேச்சு திறமையை வளர்த்தது, பல புதிய மனிதர்களையும் சந்திக்கும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தியது. ஒரு முறை டோஸ்ட்மாஸ்டர் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இது ஒரு புறம் இருக்க, முன் இறுதி நிரலாக்க மொழிகளை நாங்கள் கற்று முடித்தோம்.
முதல் ஆறு மாதங்களில், தொழில்நுட்ப ரீதியாக நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்றுக்கொள்வது எளிதாக இருந்தது. ஆனால் ஜாவாஸ்கிரிப்ட்டை கற்பதில் நான் சிரமப்பட்டேன். நான் ஜாவாஸ்கிரிப்டில் பின்தங்கியிருந்தேன், அந்த நேரத்தில், பள்ளி குரு எனக்கு ஆதரவாக நின்று கற்பித்தார். அவர் என்னை தொடர்ந்து கடினமாக முயற்சி செய்ய தூண்டினார். இந்த இக்கட்டான நேரத்தில், பள்ளி பயிற்சியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் எனக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தனர்.
நடைமுறை பயன்பாடு
எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்டை கற்றுக்கொண்ட பிறகு, அதை செயல்படுத்தி பார்க்க முன்பக்க மேம்பாட்டில் ஒரு திட்ட செயல்பாட்டை முடித்தோம். அங்கு நான் பதிவுபெறுதல்/உள்நுழைவு தொகுதியில் பணிபுரிந்தேன். அந்த திட்டத்தின் போது, நிறைய கற்றுக் கொள்ளவும், நான் முன்னர் கற்றுக்கொண்ட திறன்களை மீண்டும் ஒருமுறை நினைவுகொள்ளவும் முடிந்தது. இவ்வாறு, எனது முதல் ஆறு மாதங்களை இந்த அனுபவங்களோடு முடித்தேன். ஆறுமாத பயணத்தை முடித்துவிட்டு, பின்இறுதி வளர்ச்சிக் கட்டத்தில் நாங்கள் அடியெடுத்து வைத்தோம். எஸ்.க்யூ.எல் (SQL) பற்றிய ஆழமான ஆய்வில் தொடங்கி பின்தள வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி இந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.
கூடுதலாக, ஒவ்வொரு வியாழன் தோறும் “Brain Teaser” என்னும் அமர்வை நடத்தி அதில் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். இது உங்கள் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தவும் உங்கள் சிந்தனையைத் தூண்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிர். எல்லோரும் இந்த அமர்வுகளை ரசித்தார்கள். அமர்வுகளின் போது அனைவரும் ஆர்வத்துடன் பதில்களைக் கண்டுபிடிக்க முயன்றதை என்னால் காண முடிந்தது இது எனது தலைமைத்துவத் திறனை மேம்படுத்த உதவியது.
வெளிநிகழ்வுகளும் மதிப்பிட்டு தேர்வும்
பி.எச்.பி (PHP) பற்றிய எங்கள் முதல் மதிப்பீட்டையும் நாங்கள் செய்தோம், அதில் நான் சிறப்பாக செயல்பட்டேன். இது தவிர பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். முதல் நிகழ்வு கனிதமிழ் நிகழ்வு, பள்ளியிலுள்ள அனைவரும் இதில் கலந்துகொண்டோம். இது ஒரு சிறந்த அனுபவம். பின்னர் நான் ரியாக்ட்.ஜெ.எஸ் (React.js) மற்றும் செயற்கை நுண்ணறிவு நிகழ்வில் கலந்து கொண்டேன். இந்த நிகழ்வுகள் எனக்கு மேலும் தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பளித்தன. இந்த பயணம் முழுவதும், நான் நிறைய புதிய நபர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் தானாக முன்வந்து உரையாடலைத் தொடங்கினேன். இது எனது சமூக திறனை வளர்ச்சியடைய செய்தது.
கடைசியாக எங்களை பரிசோதிக்க மதிப்பீடு தேர்வை வைத்தார்கள். இது இரண்டு பாகங்களாக நடந்தது. ஒன்று முன்இறுதி, ஒன்று பின்இறுதி மேம்பாடு. இந்த காலகட்டத்தில்தான் பின்இறுதி மேம்பாட்டில் எனது வலுவான ஆர்வத்தை நான் கண்டறிந்தேன், இது இறுதி மதிப்பீடுகளில் சிறப்பாக செயல்பட என்னைத் தூண்டியது.
இதைத் தொடர்ந்து, நாங்கள் ஒரு முழுஅடுக்கு செயல் திட்டத்தைத் தொடங்கினோம். இதில் நான் சிறந்து விளங்க, React.js கற்கத் தொடங்கினேன், இந்த புதிய அறிவை எங்கள் திட்டத்தில் பயன்படுத்தினேன். இந்த அனுபவம் என்னை தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் வளர செய்தது, ஏனெனில் நான் பரந்த அளவிலான புதிய திறன்களைப் பெற்றேன் மற்றும் எனது தன்னம்பிக்கையை மேம்படுத்தினேன்.
மறக்க முடியாத தருணங்கள்
தற்போது எனது பயிற்சியை முடித்து, வேலை பயிற்சியில் இணைய உள்ளேன். இங்கு நான் க்ளைசர் குழுவில் பணிபுரிய தொடங்கினேன். வேலை பயிற்சியை தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பு எனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை நான் அடைந்தது போல் என்னை உணர செய்தது. மேலும் இந்த புதிய பாத்திரத்தில் தொடர்ந்து கற்கவும் வளரவும் ஆர்வமாக உள்ளேன்.
இந்தப் பயணத்தில் மிகச் சிறந்த மற்றும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தான். எனது பிறந்தநாளை எனது பள்ளி குழுவினருடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பிறந்தநாள் தான் என் வாழ்வில் சிறந்த பிறந்தநாள் என்று நான் நினைக்கும் அளவிற்கு எனது பள்ளி நண்பர்கள் இதனை சிறப்பாக செய்தனர்.
அந்த நாளில் பள்ளி குழுவினர் மட்டுமில்லாமல் டிசிகாப் குழுவினரும் என்னை வாழ்த்தினர். அந்த நாள் கொண்டாட்டம், சிரிப்பு, மகிழ்ச்சி மற்றும் இதயப்பூர்வமான தருணங்களால் நிரம்பியது, அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். இத்தகைய அற்புதமான குழுவில் ஒரு பகுதியாக இருப்பது எனது அதிர்ஷ்டம் என்று எனக்கு அது உணர்த்தியது. இது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, இந்தப் பயணத்தின் போது நான் உருவாக்கிய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் பற்றியது. அந்தச் சிறப்புமிக்க நேரத்தின் நினைவுகளை நான் எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.
டிசிகாப் பள்ளியுடனான எனது பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் என இரண்டும் நிறைந்தது. ஒரு பட்டாம்பூச்சி தனது கூட்டை விட்டு எப்படி வெளியேறி தனது இறக்கைகளை விரித்து பறக்கிறதோ, அதுபோல் எனது தயக்கங்களை களைந்து ஒரு புதிய ரூபத்தை எடுக்க டிசிகாப் பள்ளி எனக்கு உதவியுள்ளது. ஒரு நிபுணராகவும் தனி மனிதனாகவும் பெரும் அளவில் நான் வளர்ந்துள்ளேன். இந்த அனுபவம் எனக்கு தொழில்நுட்ப திறன்களை அளித்தது மட்டுமின்றி எனது மீள்தன்மை, தலைமைத்துவம் மற்றும் நம்பிக்கையை பலப்படுத்தியது. க்ளைசர் குழுவுடனான எனது வேலை பயிற்சியில் நான் முன்னேறும் இந்த தருணத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள், ஏற்படுத்திய தொடர்புகள் மற்றும் வரப்போகும் சாவல்கள் என அனைத்தையும் உறுதியுடனும் ஆர்வத்துடனும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்ற நம்பிக்கையை, என்னுடன் எடுத்துச் செல்கிறேன். நன்றி!