வாழ்க்கை என்பது போராட்டங்கள் நிறைந்த ஒரு பயணம், இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும். ஆர்வம் இருந்தால் வாழ்வில் வரும் இன்னல்களை எளிதாக கடந்துவிடலாம் என்பது எனது நம்பிக்கை.
என் பெயர் அகிலாஷ்வரன் பிரபாகரன். பள்ளி நாட்கள் முதலே எனக்கு தொழில்நுட்பம் மீதும் இணைய விளையாட்டு மீதும் அதிக ஆர்வம் இருந்தது. ஒரு விளையாட்டு கலைஞராக வேண்டும் என்பது தான் என் லட்சியம். அனிமேஷன், முப்பரிமாண வடிவமைத்தல், கலைப்படைப்பு இது அனைத்தையும் சிறந்த முறையில் இணைத்தால் தான் ஒரு விளையாட்டை உருவாக்க முடியும். அதை செய்யவேண்டும் என்பது தான் எனது ஆசை. இதற்காக சேஷசாய் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி பொறியியல் டிப்ளோமா முடித்தேன்.
என் கல்லூரி நாட்களில் கல்லூரியின் துறைத்தலைவர்கள் திரு.ரவீந்திரன், மற்றும் திரு.டி. முத்தமிழ் செல்வன் அவர்கள் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். கணினி விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், முதலில் மென்பொருள் துறையில் நிபுணத்துவம் பெறுதல் வேண்டும், என்று எனக்கு அவர்கள் அறிவுரை வழங்கினர். அவர்களின் அறிவுரைப்படி மென்பொருள் துறையில் உள்ள வாய்ப்புகளை தேடினேன், அப்போது தான் டிசிகாப் பள்ளியை பற்றி தெரிந்துகொண்டேன்.
ஒரு புதிய பாதை
டிசிகாப் பள்ளியில் மென்பொருள் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கு பயிற்சிப் பெற விண்ணப்பித்தேன். இதற்காக நேர்காணலை அவர்கள் நடத்தினார்கள். அது மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. நம்மை தேர்ந்தெடுப்பார்களா மாட்டார்களா என்பதை பற்றி கவலை கொள்ளாமல், என்னால் இயன்ற வரை நேர்காணலில் செயல்பட்டேன். முடிவில் என்னை தேர்ந்தெடுத்ததாக அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் எனது பள்ளி பயணத்தை ஆரம்பித்தேன்.
அடிப்படை தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை கற்றுக்கொள்வதில் இருந்து எனது பயணம் ஆரம்பித்தது. முதலில் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) போன்ற அடிப்படைகளிலிருந்து தொடங்கி, ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript), பி.எச்.பி (PHP), எஸ்.க்யூ.எல் (SQL), மற்றும் ரியாக்ட் ஜே.எஸ் (React JS) வரை எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். இந்த முழுமையான கற்றல் அனுபவம் எனது தொழில்நுட்ப திறன்களை வளர்த்தது மட்டுமின்றி மென்பொருள் மேம்பாடு நிலைகளை புரிந்துகொள்ள உதவியது.
இந்த பயணத்தில், எனக்கு ஆதரவாக இருந்த பள்ளி குழுவினர் மற்றும் பள்ளி பயிற்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதல் எனக்கு முக்கியமான நுண்ணறிவுகளையும், நடைமுறை அறிவையும் வளர்க்க உதவியது. மென்பொருள் தொழில்முறை வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாக இருந்தது.
தொழில்நுட்பத்திற்கு அப்பால்
தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதோடு, டிசிகாப் பள்ளியில் எங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் கவனம் செலுத்துகிறார்கள். டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பை நான் இங்கு பெற்றேன். இது எனது பேச்சுதிறன் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தியது. இந்த நிகழ்ச்சிகள் என்னை பல சவால்களுக்கு உட்படுத்தின. அந்த சாவல்களை எதிர்கொள்வதன் மூலம் எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், தொடர்புகொள்ளவும் நான் கற்றுக்கொண்டேன்.
அதேபோல், டிசிகாப் பள்ளி எனக்கு நாட்குறிப்பு (Journal) எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தியது. இது எனது அன்றாட அனுபவங்களைப் பற்றி சிந்தித்து, தனிப்பட்ட மற்றும் தொழில்முறையில் வளர்ச்சியடைய உதவியது. எனக்கு சிறுவயதில் இருந்தே நாவல்களை படிக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதை நான் தொடந்து செய்ததில்லை, இப்போதும் அப்போதும் என விட்டுவிட்டு படிப்பேன். இங்கு வந்தபிறகு அதை ஒரு வழக்கமான பலக்கமாக்கினேன். இது எனது கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறனை வளப்படுதியது.
விளையாட்டு மேம்பாளர்
ஒரு வருட பயிற்சியை அடுத்து நாங்கள் வேலை பயிற்சியில் தற்போது இணைத்துள்ளோம். இதில் என்னை விளையாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு பிரிவில் தேர்ந்தெடுத்தனர். ஒரு விளையாட்டு உருவாக்குநராக வேண்டும் என்பது தான் எனது ஆசை, அதற்காக தான் டிசிகாப் பள்ளியில் இணைந்தேன், இங்கு கற்றுக்கொள்ளும் மென்பொருள் தொழில்நுட்ப அறிவு பின்னாளில் விளையாட்டு துறையில் உதவும் என்று நினைத்தேன். ஆனால் இங்கேயே அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது நிறைவேறியது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்தது.
ஒரு மாணவராக தொடங்கி இன்று விளையாட்டு மேம்பாடு துறையில் பணிபுரியும் வரையான இந்த பயணம் பல சவால்களையும் தடைகளையும் கொண்டிருந்தது, இந்த தடைகளை எதிர்த்து போராட எனக்கு உதவியாக இருந்த பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், எனது பள்ளி நண்பர்களுக்கும், பெற்றோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துறையில் நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்வதற்கும், வளர்ச்சியடைவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.