வாழ்வில் வரும் எல்லா கேள்விகளுக்கும் ஒரு இடத்தில் பதில் இருக்கும். அதை தேட நாம் முயன்றால் போதும், அதை நாம் கண்டுபிடித்துவிடலாம்.
என் பெயர் பட்டாபிராமன் வீரராகவன். நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவன். எனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தேன். பின்னர் முதன் முதலாக கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்தேன். தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா (DEEE) படிப்பை முடித்தேன். கல்லூரி முழுவதும் கிண்டியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.
என் வாழ்க்கையின் சிறந்த அனுபவம் என்றால் அது கல்லூரியில் படித்த தருணம் தான். வேலைக்கு சென்றுக்கொண்டே என் கல்லூரி பயணத்தை நான் கடந்தேன். எனக்கு குடும்பத்தில் இருந்து கிடைத்த பண உதவி மிக குறைவாக தான் இருந்தது. இருந்தாலும், வேலைக்கு சென்றதால் என்னால் என் செலவுகளை பார்த்துக்கொள்ள முடிந்தது. இந்த நேரத்தில் தான் வெளி உலகத்தை பற்றியும், புதிய மனிதர்களுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். இது என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த தருணம்
இப்படியே எனது கல்லூரி படிப்பை முடித்தேன். கல்லூரியை விட்டு வெளியே வந்து பிறகு தான், வாழ்கையின் உண்மை நிலை எனக்கு புரிந்தது. இதுவரை பெற்றோரின் நிழலில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது தனியாக என் வாழ்கையை வாழ வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். அடுத்து என்ன செய்வதென்று யோசித்தேன், ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
என் நண்பருடன் இணைந்து அரும்பாக்கத்தில் உள்ள மேஜிக் பஸ் (Magic Bus) என்ற அமைப்பில் வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங் (Hardware and Networking) என்ற இரண்டு மாத இலவச வகுப்பில் சேர்ந்தேன். அதன் பிறகு சென்னையில் உள்ள என் நண்பரின் விடுதியில் தங்கி, எனக்கான வேலையை தேடினேன். தேடி தேடி அலைந்தது தான் மிச்சம். எனக்கு பிடித்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. ஒரு சில வேலைகள் கிடைத்தது. ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை. வேறுவழியின்றி மீண்டும் என் சொந்த ஊருக்கே சென்றுவிட முடிவு செய்தேன். சொந்த ஊரில் என் நண்பருடன் சேர்ந்து நெல் அறுவடை இயந்திரத்தை பற்றி கற்றுக்கொண்டிருந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. ஒரு நாள் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது, இது தான் என் வாழ்க்கையா? இப்படி தான் எனது வாழ்கையை கழிக்க வேண்டுமா? இது எனக்கு சரிவராது என்று புரிந்துகொண்டேன். அப்போதுதான் மாற்றத்தின் கதவு எனக்கு திறந்தது.
எப்படி தெரிந்தது டிசிகாப் பள்ளி
இவ்வாறே தினமும் வயலுக்கு சென்று வந்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒருநாள் விழுப்புரம் பேருந்து நிலையத்தில், டிசிகாப் பள்ளியின் முதல் பயிற்சி வகுப்பு மாணவர் பாலமுருகனை சந்தித்தேன். அவரும் என் கல்லூரியில் தான் படித்தார். அவரிடம் பேசும் போது டிசிகாப் பள்ளியை பற்றி விளக்கமாக சொன்னார். எனது நண்பர்களும் மற்றும் முன்னர் படித்தவர்களும் அங்கு பயிற்சி பெறுகின்றனர் என்று கூறினார். உடனே நான் பள்ளியை பின்தொடர ஆரம்பித்தேன். அப்போது தான் இரண்டாம் பயிற்சி வகுப்பு விண்ணப்பம் தொடங்கியதை பார்த்தேன். அதற்கு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அதிக நாட்கள் இருந்ததால் ஊரிலேயே கிடைத்த வேலையை செய்தேன்.
மீண்டும் சென்னையை நோக்கி
இதே போல் வாழ்க்கை சென்றுக்கொண்டிருந்த போது, பள்ளியில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. புதிய நம்பிக்கையோடு மீண்டும் சென்னைக்கு வந்து நேர்காணலில் கலந்து கொண்டேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திடமாக இருந்தேன். எனது முழு ஆற்றலையும் நேர்காணலில் வெளிப்படுத்தினேன். ஆனால், எனக்குள் ஒரு சந்தேகமும் இருந்தது. நான் மின்னணுவியல் துறையில் படித்தேன். இங்கு தேர்ந்தெடுப்பது கணினி துறைக்கு, ஆகையால் நம்மை தேர்ந்தெடுப்பார்களா என்று நினைத்தேன். பின்னர் முடிவுகளை அறிவித்தனர். என்னை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்ததும் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
அந்த தருணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாது. மொத்தம் 60 மாணவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள், அதில் 11 பேர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமிதம் அடைந்தேன். இதனை பற்றி பெற்றோரிடம் கூறினேன், அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் ஆசிர்வாதத்தோடு, ஜூலை 2023 இல், எனது பள்ளி பயணத்தை தொடங்கினேன்.
அடிப்படை முதல் நிபுணத்துவம் வரை
அடிப்படைகளை கற்பதில் இருந்து எனது பயணத்தை தொடங்கினேன். மின்னஞ்சல் அனுப்புவதில் தொடங்கி வலைத்தளத்தை உருவாக்குவது வரை எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன். எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript), ஃபிக்மா (Figma), மை.எஸ்.க்யூ.எல் (MySQL), மற்றும் பி.எச்.பி (PHP) போன்ற பல நிரலாக்க மொழிகளை இங்கு கற்றுக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல் மேடையில் பேசுவது, தலைமைத்துவ பண்புகள், நேர்மறை எண்ணங்கள், ஆங்கிலத்தில் பேசுவது மாற்றும் எழுதுவது என்று எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, “இந்த துறை நமக்கு சரிவருமா? நாம் படித்தது வேறு, இங்கு செய்வது வேறு” இந்த எண்ணம் பலமுறை எனக்கு வந்ததுண்டு. ஆனால் இப்போது முழுமனதுடன் சொல்ல முடியும் “என்னால் இது மட்டுமல்ல எதிலும் வெற்றி கொள்ள முடியும்”. இந்த நம்பிக்கையை எனக்கு அளித்தது டிசிகாப் பள்ளி தான். இந்த பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.