Skip to main content

நாம் விரும்பவது அனைத்தும் நமக்கு கிடைப்பதில்லை. அதற்காக நாம் வருந்துவது உண்டு. ஒரு வேலை நமக்கு தேவையானது கிடைக்கவில்லை என்றால் அது நமக்கான பாதை இல்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு சிறந்தது எதுவோ அது நிச்சயம் நமக்கு கிடைக்க ஒரு வாய்ப்பு தேடி வரும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நம் திறன்.

வணக்கம் என் பெயர் அகல்யா துரைராஜ். என் சொந்த ஊர் திருச்சி. சிறு வயதில் எனக்கு செவிலியராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடும்ப சூழ்நிலையால் என்னால் அந்த துறையில் சேர முடியவில்லை.  பன்னிரெண்டாம் வகுப்பை முடித்ததும் திருச்சியில் உள்ள சேஷசாயி தொழில்நுட்ப கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் டிப்ளோமா படிப்பை படிக்க முடிவு செய்தேன். அதன் பின்னர் எனக்கு தொழில்நுட்ப துறையில் ஆர்வம் அதிகரித்தது.

முதல் இரண்டு வருடங்களை வெற்றிகரமாக கடந்து, கல்லூரி இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்தேன். அப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழும்பியது. அடுத்து வாழ்வில் நான் என்ன செய்ய போகிறோம்? டிப்ளோமா படிப்பை மட்டும் வைத்து தொழில்நுட்ப துறையில் சாதிக்க முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. நான் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தேன். இந்த நேரத்தில் தான் டிசிகாப் பள்ளி என்ற அமைப்பு எங்கள் கல்லூரிக்கு வந்தது.

வாழ்வை மாற்றிய நேர்காணல்

டிசிகாப் பள்ளியில் இலவசமாக மென்பொருள் பயிற்சியை அளித்து, பயிற்சி காலத்தில் உதவித்தொகையும் வழங்கி, பயிற்சிக்கு பிறகு முழு நேர வேலையும் வழங்குகிறார்கள் என்பதை அறிந்ததும் நான் மகிழ்ச்சியடைந்தேன். இது நமக்கான வாய்ப்பு, இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நேர்காணலில் கலந்து கொண்டேன். என்னுடைய முழு முயற்சியையும் அளித்து நேர்காணலில் செயல்பட்டேன். இறுதியில் என்னை தேர்ந்தெடுத்தனர் என்பதை அறிந்ததும் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள டிசிகாப் நிறுவனத்தில் பயிற்சி அளிப்பதாக கூறினார்கள். ஒரு புறம் புதிய இடத்திற்கு செல்லும் ஆர்வம் இருந்தாலும், மற்றொரு புறம் சற்று தயக்கமும், பயமும் இருந்தது. பெற்றோரும் ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, பயிற்சியில் உள்ள நன்மைகளை தெரிந்ததும் அவர்களும் அனுமதித்தனர். மாற்றம் ஒன்றே மாறாதது, ஆகையால் இந்த மாற்றத்தை இன்முகத்தோடு ஏற்று சென்னைக்கு புறப்பட்டேன். ஜூலை 17 2023 அன்று பள்ளி பயணத்தை தொடங்கினேன்.

முதல் நாள் பள்ளியில் டிசிகாப் பற்றியும் அதன் தயாரிப்புகள் பற்றியும் தெரிந்துகொண்டோம். பின்னர் எங்கள் மடிக்கணினியை அமைப்பது, தகவல் தொடர்பு தளங்களில் கணக்குகளை உருவாக்குவது, ஒரு பணியிடத்தில் எவ்வாறு நடந்துகொள்வது போன்றவற்றை கற்பதில் இருந்து எங்களின் கற்றல் பயணத்தை ஆரம்பித்தோம்.

கற்றல் செயல்பாடு

முதல் ஆறு மாதங்களில் முன் இறுதி மொழிகளான எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். பின்னர் அதனை பயன்படுத்தி ஒரு செயல் திட்டத்தை செய்தோம். இது என் அறிவையும், புரிதலையும் மேலும் வளர்த்தது. முன் இறுதியை முடித்த பின்னர், பின் இறுதி மொழிகளை கற்க ஆரம்பித்தோம். பி.எச்.பி (PHP), எஸ்.க்யூ.எல் (SQL), மற்றும் ரியாக்ட் ஜே.எஸ் (React Js) மொழிகளை கற்று கொண்டேன். அதில் நடைபெற்ற தேர்வை முடித்ததும், முழு அடக்கு மேம்பாட்டில் ஒரு செயல்பாட்டை தொடங்கினோம்.

முன்னாள் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், மற்றும் டிசிகாப் ஊழியர் ஒருவரும் இந்த செயல் திட்டத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். முழு அடுக்கு செயல் திட்டத்தின் பொது நாங்கள் ரியாக்ட் ஜே.எஸ் (React Js) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். ஆரம்பத்தில் அதை கற்றுகொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது. பல நாட்களாக அதை கற்க முயற்சி செய்தேன். இருந்தாலும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. இந்த நேரத்தில் என் குழு நண்பர்கள் மற்றும் வழிகாட்டி எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்கள் அளித்த நம்பிக்கையோடு மீண்டும் முயற்சி செய்து அதனை கற்றுக்கொண்டேன். அவர்கள் அளித்த ஆலோசனைகள் மூலம் பல தவறுகளை நான் சரி செய்து கொண்டேன்.

தொழில்நுட்பத்திற்கு அப்பால்

தொழில்நுட்ப திறன்களுடன் சுய மேம்பாட்டு திறன்களையும் நான் கற்றுக்கொண்டேன். இங்கு வந்த ஒரு வருடத்தில் பல திறன்களை நான் வளர்த்துக்கொண்டேன். தனியாக வாழ்வது, குழுவோடு சேர்ந்து வேலை செய்வது, பேச்சு திறன், எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் ஆகியவற்றை நான் இங்கு பெற்றேன். இங்கு வருவதற்கு முன்பு நான் புத்தகங்களை பெரிதாக படித்தது இல்லை. இங்கு வந்த பிறகு, பல தொழில்நுட்ப நிகழ்வுகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். தைரியமாக அனைவரின் முன்னால் பேச ஆரம்பித்தேன். வெளி நிகழ்வுகளுக்கு செல்வதன் மூலம், புதிய தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. பல புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பள்ளி குடும்பம்

ஒரு பணியிடம் போல் இல்லாமல் நாங்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல் இருந்தோம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடுவது, குழுவாக வெளியே செல்வது, ஒன்றாக விளையாடுவது, என பல மறக்கமுடியாத தருணங்கள் பள்ளியில் நான் பெற்றேன். இதில் அனைத்திலும் சிறந்த ஒரு அனுபவம் இங்கு என் பிறந்தநாள் கேக்கை வெட்டியது தான், எங்கள் குடும்பத்தில் எவ்வாறு என் பிறந்தநாளை கொண்டாடுவார்களோ அதே போல் இங்கு, அது போல் இங்கு நடைபெற்றது.

தற்போது நான் ஒரு வருட பயிற்சியை முடித்து வேலை பயிற்சியில் இணைந்துள்ளேன். இன்னும் பலவற்றை கற்று தொழில்நுட்ப துறையில் நிபுணராக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த டிசிகாப் பள்ளிக்கும், இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி குழுவினருக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Ahalya Durairaj

Author Ahalya Durairaj

More posts by Ahalya Durairaj

Leave a Reply