வாழ்க்கைக் குறிப்பு :
எனது பெயர் கணேஷ் முரளி. நான் திருவொற்றியூரில் வசிக்கிறேன். பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் தொழில்நுட்பக் கல்லூரியில், இயந்திரவியலில் பட்டயப்படிப்பை (Diploma) 2019 ஆம் ஆண்டு நிறைவுச் செய்தேன். கொரோனா பரவலால் அடுத்த ஒரு வருடகாலம் இடைவெளி எடுத்துக்கொண்டேன். பிறகு ஒரு மோட்டார் வாகன நிறுவனத்தில் ஒரு வருடம் வேலைச் செய்தேன். அதன்பிறகு, ஒரு பெரிய நிறுவனத்தில் தகவல்களை உள்ளீடு செய்யும் துறையில் மூன்று மாதங்கள் பணிபுரிந்தேன். நான் படித்த இயந்திரவியல் துறைத் தொடர்பான வேலைகளில் ஈடுபட அதிக ஆர்வம் இல்லை. ஆனால், மென்பொருள் தொடர்பான வேலைகளில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.
டிசிகாப் கனவு:
என் நண்பர் ஒருவர் டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் டிசிகாப் பற்றிய தகவல்களைக் கூறுவார். ஒரு சமயம் டிசிகாப் நிறுவனத்தின் கலாச்சாரம் குறித்து என்னிடம் கூறினார். எல்லோரும் சமம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது டிசிகாப் கலாச்சாரம். இதுபோன்ற நிறைய விஷயங்கள், டிசிகாப் நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற என் உள்மனதின் ஆசையை அதிகரித்து வந்தது. ஆனால், நான் மென்பொருள் சார்ந்த படிப்பைக் கற்காததால், டிசிகாப் நிறுவனத்தில் சேர முடியாது என்பதைப் புரிந்துக்கொண்டேன். அந்த நேரத்தில்தான் டிசிகாப் பள்ளி என்ற மாற்றத்திற்கான வித்தைத் தொடங்கினார்கள். அதை நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். நான் டிசிகாப் பள்ளியில் சேர்வதற்கு முக்கிய காரணம் முன்னர் சொன்ன நண்பர்தான். அவர் தான் டிசிகாப் பள்ளி பற்றிய தகவலை என்னிடம் கொண்டு வந்துச் சேர்த்தார்.
பள்ளியில் நான் :
டிசிகாப் பள்ளியில் சேர்வதற்கு மூன்று படிநிலைகள் இருந்தது. முதலில் தகுதித் தேர்வு (Aptitude test), இரண்டாவது குழு விவாதம் (Group discussion), மூன்றாவது நேரடி நேர்முகத் தேர்வு. மூன்று படிநிலைகளிலும் எல்லாரும் கலந்துக் கொண்டார்கள். பிற நிறுவனங்களில் ஒவ்வொரு படிநிலையும் வெளியேற்றும் (elimination) படிநிலையாக இருக்கும். ஆனால், டிசிகாப் பள்ளியில் மூன்று படிநிலைகளிலும் ஒருவர் எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பதனைப் பொறுத்தே தேர்வுச் செய்யப்படுகிறார். டிசிகாப் பள்ளியில் சேர நான் தேர்வாகியிருந்தேன். டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரியமாறு நான் கண்ட கனவுகள் நிஜமாகப் போகின்றன. டிசிகாப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே வரவேற்பிற்காகக் கணினிப் பையும், புத்தகமும், காண்டாமிருக பொம்மையும் கொடுத்தார்கள். அதனை டிசிகாப்பில் வேலைச் செய்யும் என் நண்பர் கையில் வாங்கியதில் மகிழ்ச்சி அடைந்தேன். என் நண்பர் என்னை விட ஆனந்தமானார். டிசிகாப் பள்ளியில் ஊக்கத்தொகை அளிப்பதும், உணவளிப்பதும் எனது வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய உதவியது.
தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை:
நண்பர்கள் எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, நான் மட்டும் தனியே நின்றிருந்தேன். சில நேரங்களில் என்னையே நான் தாழ்வாக நினைத்திருந்தேன். என்னுடைய தாடை ஒரு பக்கம் வளைந்திருப்பதே இந்தத் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம். அதனை சரிச் செய்ய ஒரு பெரிய அறுவை சிகிச்சை (major operation) செய்ய வேண்டி இருந்தது. இந்த சிகிச்சையைக் கொரோனா காலத்தில் செய்து முடித்தேன். இது தாழ்வுமனப்பான்மையில் இருந்து எனக்கு விடுதலை அளித்தது. நான் ஒரு புதிய மனிதனாக உருவெடுத்தேன். சிகிச்சை முடிந்த சில மாதங்களிலேயே வேலைக்குச் செல்லத் தயாரானேன். குடும்பச் சூழ்நிலை மென்மேலும் படிக்க ஏதுவற்றதாக இருந்தது. எனக்குத் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) பற்றி சிறிய அளவிற்குக்கூடத் தெரியாது. ஆனால், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைச் செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என்று மட்டும் தெரியும். குடும்பக் கஷ்டத்தையெல்லாம் போக்க நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. பணம்தானே இங்கு எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.
மென்பொருள் வடிவமைப்பாளரான நான்:
டிசிகாப் பள்ளி தொடங்கப்பட்ட ஒரு வார காலம் தலைகால் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுது தகவல் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லித்தருவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். டிசிகாப் பள்ளியில் என்னென்ன பாடங்கள் இருக்கிறது என்றே சில காலம் தெரியாமல் இருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல நான் கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் கேட்டுப் பாடங்களைத் தெரிந்துக் கொண்டேன். G-suite பற்றி எனக்கு நிறையத் தெரியும் என்று நினைத்தேன். ஆனால், அதில் எனக்குத் தெரியாத விடயங்கள் நிறைய இருக்கிறது என்று G-Suite பற்றி வகுப்புகள் நடந்தபோது தான் தெரிந்தது. ஒரு மாத காலம் அனைத்து பாடங்களைப் பற்றிய அறிமுக வகுப்புகள் இருந்தது. HTML, CSS கற்றுக்கொடுத்தப் பிறகு நானும் டிசிகாப் பள்ளியில் இலவசமாக வழங்கிய மடிக்கணினியில் செய்துப் பார்த்தேன். பயிற்சி செய்த நேரத்தில், “நான் மென்பொருள் மேம்பாட்டாளர்” (software developer) ஆகிவிட்டேன் என்று நினைத்து மகிழ்ந்தேன். தினமும் கொடுக்கின்ற பணியை (task) அவ்வப்பொழுதே முடித்துவிடுவேன். அதிகமான பணி இருக்கும் ஒரு சில நேரங்களில் சோர்வடைவது போல இருக்கும். ஆனால், தலைமை நிர்வாக அதிகாரி பாடங்களை எடுக்கும்பொழுதும், எங்களுடன் உரையாடும் பொழுதும் புத்துணர்ச்சி தானாக வந்துவிடும். அந்த நேரங்களில் புதிதாக ஏதேனும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். டிசிகாப் பள்ளியில் நான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். டிசிகாப் பள்ளியில் எனது அறிவு அபாரமாகப் பெருக்கியது. எனக்குப் புகைப்படம் எடுப்பது (Photography), மென்பொருள்களை வடிவமைப்பது (Design), மற்றும் திருத்துவதில் (Editing) ஈடுபாடு அதிகம். எனக்கு வடிவமைப்புப் பாடம் மிகவும் பிடித்தமைக்குக் காரணம், பயிற்சியாளர்களே. என் வாழ்க்கையை நினைத்து பயந்த நாட்கள் உண்டு. ஆனால், டிசிகாப் பள்ளிக்கு வந்த பிறகு எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை திடமாக நம்பினேன். நான் வளர்ந்துக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன்.
விரிந்த சிறகுகள்:
கல்லூரி காலங்களில் இலக்கில்லாமல் இருந்த எனக்கு இலக்காக அமைந்தது டிசிகாப் பள்ளி. இலக்குகள் எட்டப்பட்டவுடன் இறக்கை முளைத்த ஆசை பறந்துச் சென்று வேறொரு இடத்தை அடைந்துவிடுகிறது. அடையப்பட்டவுடன் மாற்றம் அடைபவையே இலக்குகள். இலட்சியம் எப்போதும் சிறகுகளைக் கொண்டிருக்கிறது. அந்த இலட்சியம் தொடப்பட்டவுடன் சிறகுகள் வானத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்கிறது. அதுபோலவே என் இலட்சியமான டிசிகாப் பள்ளியை அடைந்தவுடன் என் சிறகுகள் வானை நோக்கிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. டிசிகாப் பள்ளியில் நான் தனிப்பட்ட எனது திறமையை அறிந்துக் கொண்டு அதைப் பெருக்கி ஒரு சிறந்த பணியாளராக உருவாக வேண்டும் என்பதே என் ஆரம்பகால இலட்சியம். அதுபோலவே, நான் ஒரு சிறந்த வடிவமைப்பாளராக உருவாகிவிட்டேன். ஒரு மென்பொருளை சிறப்பாக என்னால் வடிவமைக்க முடியும். நான் கற்றுக்கொண்டதில் மிகவும் பிடித்தது அடிப்படை முழு அடுக்கு (Basic full stack). நடத்தும் பாடத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட நேரடியாகப் பயிற்சி செய்து புரிந்துக்கொள்ளும் வடிவமைப்பைக் கொண்டதுதான் டிசிகாப் பள்ளி. பிக்மா தளவமைப்பை (Figma layout) எப்படி செய்வது? என்பதைக் அறிந்துக்கொண்டேன். திட்டங்களில் (Project) ஈடுபட்டு, வகுப்பில் கற்றுக்கொண்டவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்தேன். ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் சில திட்டங்களையும் செய்தேன். JavaScript project செய்தபோது நிறையக் கற்றுக்கொண்டேன். செயலிகளை (Applications) உருவாக்குவதற்கும் பயிற்சியின் மூலம் தெரிந்துக்கொண்டேன். பயிற்சி வகுப்புகளில் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொண்டதைப் போலவே தனியாக ஆர்வம் வந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.
டிசிகாப் பள்ளியில் கொண்டாட்டம்:
வாழ்க்கை என்பது வெறும் வாழப்படுவதற்கு மட்டும் அல்ல. அது கொண்டாடப்பட வேண்டியதும் கூட. டிசிகாப் நிறுவனத்தின் சின்னம் காண்டாமிருகம். உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், சுமத்ரா காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம், வெள்ளைக் காண்டாமிருகம் என்ற ஐந்து வகையான காண்டாமிருகங்கள் மட்டும் தான் உள்ளது. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 22ம் நாள் உலகக் காண்டாமிருகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டிசிகாப் பள்ளியில் நாங்கள் உலக காண்டாமிருகத் தினத்தைக் கொண்டாடினோம். எனக்கு இது மிகவும் புதிதாக இருந்தது. இதற்கானக் காரணம் அறிந்தபோது நான் மிகவும் வியப்புக்கு உள்ளானேன். வண்டலூரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் இரண்டு காண்டாமிருகங்கள் (ராம் & ரைன்) உள்ளன. அவை இரண்டையும் டிசிகாப் நிறுவனம் தத்தெடுத்துள்ளதே இதற்குக் காரணம். தீபாவளியையும், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் நாங்கள் கொண்டாடினோம். எந்த பயிற்சி வகுப்புகளிலும் இதுபோன்று விழாக்களை கொண்டாடியதாக நான் கேள்விப்பட்டதில்லை. மேலும், இந்த விழாக்களுக்காக நடைப்பெற்ற கலை நிகழ்ச்சிகள் மிகவும் தனித்துவமானவை.
கற்றலின் மேல் அதீத ஆர்வம் :
டிசிகாப் பள்ளியில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல பிடித்துப் போனது. டிசிகாப் பள்ளியில் நன்றி சொல்லும் நிகழ்விற்கு விளக்கக்காட்சி (PPT) செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. புதிய புதிய விஷயங்களைச் சிரமேற்கும் பொழுதுதான் பலவகை அனுபவங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு நாள் நிப்டி பிப்டி (Nifty fifty) பற்றித் தலைமைச் செயல் அலுவலர் பயிற்சிக் கொடுத்தார். பணத்தை எவ்வாறு முறையாகச் சேமித்துக் கையாள்வது என்பதை இந்த வகுப்பு எனக்கு உணர்த்தியது. மேலும் அவர் பங்குச்சந்தைப் பற்றித் தெளிவாக விளக்கியதால், எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த வகுப்பு எனக்குப் பங்குகளில் முதலீடுச் செய்ய ஆர்வத்தைத் தூண்டவும் செய்தது. டிசிகாப் பள்ளியில் தினமும் காலையில் ஒன்பது மணி முதல் ஒன்பதரை மணி வரை புத்தகம் படிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் ஒரு பத்தியை படிக்க வேண்டும். அதை வேறொருவர் விளக்கமாக விவரிக்க வேண்டும். இந்தச் செயல்பாடு புத்தகங்கள் மீது எனக்கிருந்த ஆர்வத்தை அதிகரித்தது. வெறும் பாடத்தை மட்டுமல்லாமல் டிசிகாப் பள்ளி எனக்கு வாழ்க்கையின் பல்வேறு கோணங்களைப் பற்றிய அறிவையும் புகட்டியது என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். முழுமையாக இந்த வலைப்பதிவை வாசித்தமைக்கு நன்றி. வலைப்பதிவைப் பற்றிய உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.