இன்னல்கள் நிறைந்த இளமைக் காலம்:
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் லோகேஷ். எனது சொந்த ஊர் சிங்காரச் சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயல். இந்தியாவின் பெரும்பாலான மக்களைப்போல நானும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்களது சாதாரணமான குடும்பத்தில் எங்கும் நிகழ்திராத ஒரு அசாதாரணமான நிகழ்வு நடந்தேறியது. அஃது, என்னவெனில், எனது பதினாறாவது வயதில் எனது தந்தை எதிர்பாராத ஒரு விபத்தின் காரணமாக எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். தந்தையை இழந்த வேதனை என்னைத் தீண்டாதவாறு தாய்தான் என்னை அன்பு ஊட்டி, அரவணைத்து வளர்த்தார். என் தாயார், என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை திருமுல்லைவாயலில் உள்ள ஆவடி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். என்னுடைய கடினமான உழைப்பை வெளிப்படுத்தி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 400 மதிப்பெண்களைப் பெற்றேன். பொதுத் தேர்வில், நல்ல மதிப்பெண்கள் பெற்றபோதும் என்னால் பள்ளிக்கல்வியை தொடர முடியவில்லை. எங்களது குடும்பத்தின் சூழ்நிலை என்னை தொழில்நுட்பக் கல்லூரியை நோக்கிக்கொண்டு சென்றது. பி.டீ.லீ. செங்கல்வராய நாயக்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering) துறையில் இணைந்தேன். மூன்றாண்டுக் கல்லூரிப் படிப்பைச் சிறப்பாக முடித்தேன். பட்டயப்படிப்பில் (Diploma) சிறந்த மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றேன். பிடிக்காதப் படிப்பில் சேர்ந்தாலும், ஏதோ படிக்கவேண்டும் என்று படிக்காமல் இயந்திரவியல் துறையில் ஆர்வத்தைச் செலுத்தி நன்றாகப் படித்ததே வெற்றியின் காரணமாக அமைந்தது.
திசை மாறிய வாழ்க்கை:
தொழில்நுட்பக் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மனதில் ஒரு குழப்பம். மூன்று ஆண்டுகளாக நாம் கற்றது பிடிக்காத ஒரு பாடத்தையா என்று மனதில் கேள்வி எழுந்தது. அந்த காலத்தில்தான் ஒரு சில தொழிற்சாலைகளில் பணியாற்றினேன். இயந்திரவியலில் பட்டயப்படிப்பைப் படிக்கும்போதே எனக்கு அதில் துளியும் ஆர்வம் இல்லை. ஆனாலும் அதைக் முடிந்தவரை இஷ்டப்பட்டுப் படித்தேன். பிறகு இயந்திரவியல் துறையில் வேலை செய்யும் பொழுது என்னால் பழைய ஆர்வத்துடன் வேலை செய்ய முடியவில்லை. நான் இந்த துறையையே வெறுக்க ஆரம்பித்தேன். தொழிற்சாலைகளில் பகல் நேரத்திலும் (Morning Shift) இரவு நேரத்திலும் (Night shift) மாறி மாறி வேலைச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விடலாம் என்று தோன்றியது. என் மனக்குதிரை வேகமாக ஓடியது. அது கொஞ்சம் கொஞ்சமாக தகவல் தொழில்நுட்பத் துறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. தகவல் தொழில்நுட்பம் எனக்குப் பிடித்தமான துறை என்பதை மிகவும் தாமதமாகதான் உணர்ந்து கொண்டேன். தகவல் தொழில்நுட்பத்தை கற்று ஒரு சிறந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளனாக உருவாக வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அது கூடிய விரைவில் என்னுடைய இலட்சியக் கனவாகவும் மாறியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைவது எவ்வாறு? மற்றும் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்ற தகவல்களை எல்லாம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டேன். எனக்குத் தெரிந்த சிலரிடம் எப்படி தகவல் தொழில்நுட்பத் துறையில் சேர்வது என்று விசாரித்தேன். அதற்கு அவர்கள் எனக்குத் தெரியாத புதுப்புது தொழில்நுட்ப வார்த்தைகளைக் கூறினார்கள். தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் கூட அப்போது எனக்கு ஏற்படவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் குழம்பிப் போனேன். ஒரே ஒரு விஷயம்தான் என் கண்முன் நின்றது. அது தகவல் தொழில்நுட்பத் துறையில் நான் செல்ல வேண்டும் என்பதாகும். அந்த சமயத்தில் தான் டிசிகாப் பள்ளியில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது.
மறக்க முடியாத நாள்:
பட்டயப்படிப்பு முடித்த மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் கற்றுத் தரப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிசிகாப் பள்ளிக்கு விண்ணப்பித்து எப்படியாவது தேர்வாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதேபோல டிசிகாப் பள்ளிக்கு விண்ணப்பித்தேன். என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர். பிறகு டிசிகாப் பள்ளியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று பள்ளிக்கானச் சேர்க்கை நடைபெற உள்ளது என்று கூறினார்கள். மாணவர் சேர்க்கையில் மூன்று நிலைகள் இருந்தது. முதல் நிலை திறன் சோதனை (Aptitute test), இரண்டாவது நிலை குழு உரையாடல் (Group discussion), மூன்றாவது நிலை நேரடி நேர்காணல் (Interview). காத்துக்கொண்டு இருந்தேன். அந்த நாள் மிகவும் சீக்கிரமாக வந்துவிட்டது. அந்த நேர்காணலில் சுமார் 28 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் நான் எப்படியாவது தேர்வு ஆகி விட வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் நான் தேர்வாகி விட்டேன். இந்த மூன்று நிலைகளையும் வெற்றிகரமாக முடித்து டிசிகாப் பள்ளியின் மாணவன் ஆனேன். அன்றைய நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. டிசிகாப் பள்ளியின் மாணவனாக ஆகிவிட்டேன் என்று பெருமிதம் கொண்டேன். அடுத்த ஒரு வருடம் என்ன நடக்கப்போகிறது என்று எனது மூளைக்குள் ஓட ஆரம்பித்துவிட்டது. நிச்சயமாக ஒரு வருடத்திற்கு பிறகு தகவல் தொழில்நுட்ப பொறியாளனாக டிசிகாப் பள்ளியால் உருவாக்கப்பட்டு இருப்பேன் என்று முழு நம்பிக்கையுடன் எனது பயணத்தை துவங்கினேன். பிறகு வீட்டுற்குச் சென்று என் தாயாரிடம் இந்த இன்பமான தகவலைத் தெரிவித்தேன். அதற்கு என் தாயார், “லோகேஷ் உனக்கு கடவுள் ஒரு நல்ல வழியை காட்டி உள்ளார். அதனை நீ நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறினார். செப்டம்பர் 12-க்காக நான் மிகவும் ஆவலாக இருந்தேன். காரணம் அன்று தான் டிசிகாப் பள்ளியின் தொடக்கவிழா.
பிடித்துப் படிக்கத் துவங்கிய காலம்:
டிசிகாப் பள்ளியில் முதல் நாள் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். மேலும் அன்றுதான் முதன் முறையாக என் சுயசரிதையை அனைவரின் முன்னிலையிலும் தைரியமாகக் கூறினேன். டிசிகாப் பள்ளியில் மாணவர்களை வரவேற்ற முறை மிகவும் சிறப்பாக இருந்தது. டிசிகாப் பள்ளியின் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் கல்வி பயின்ற எல்லா இடங்களிலும் ஆசிரியர்களை சார், மேடம் என்றுதான் கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு அப்படி இல்லை. எல்லாரையும் அவர்கள் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்று கூறினார்கள். இந்த கலாச்சாரத்தின் மூலம் எல்லோரும் சமம் என்று எனக்குத் தெளிவுபடுத்தினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களை எனக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். நானும் மெல்ல மெல்ல கற்க ஆரம்பித்தேன். டிசிகாப் பள்ளியில் நான் குறியீட்டு முறை (Coding) சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். எனக்கு முதலில் HTML, CSS, JavaScript ஆகியவற்றை கற்றுத் தந்தனர். பிறகு பின்-முனையில் (Backend) தரவுத்தளம் (Database) கற்றுத் தந்தனர். பிறகு நானும் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். HTML, CSS மற்றும் Database மட்டுமல்லாமல் வடிவமைப்பு (Design), மென்திறன்கள் (Soft Skills) பற்றியும் எனக்கு டிசிகாப் பள்ளியில் கற்றுக் கொடுத்தார்கள். அனைத்துப் பயிற்சி வகுப்புகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும்கூட நினைத்து பார்க்கவில்லை. நான் இந்த டிசிகாப் பள்ளியில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருவரிடம் எப்படி பேச வேண்டும், ஒருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற அனைத்தையுமே கற்றுக்கொடுத்தனர். டிசிகாப் பள்ளியில் நான் ஒரு சிறந்த புதிய பழக்கத்தையும் கற்றுக்கொண்டேன். புத்தகம் படிப்பது தான் அந்த புதுப்பழக்கம். டிசிகாப் பள்ளியில்தான் எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டானது. டிசிகாப் பள்ளியில் இணைவதற்கு முன்பு என்னுடைய வளர்ச்சி மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது என்னுடைய வளர்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான ஒரே காரணம் டிசிகாப் பள்ளி.
கற்றலும் மாற்றமும்:
டிசிகாப் பள்ளிக்கு வருவதற்கு முன்பு எனக்கு இணைய மேம்பாடு பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் இன்று நான் ஒரு முழு அடுக்கு பொறியாளனாக மாறி உள்ளேன். அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களை உருவாக்கும் அளவிற்கு என்னுடைய கற்றலானது உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை பற்றி நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் எனக்கு புரியாத ஒரு சில வார்த்தைகள் பற்றி முன்பு குறிப்பிட்டேன் அல்லவா? இன்று நான் அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை பலருக்குச் கற்றுத்தரும் அளவிற்கு உருவாகியுள்ளேன். ஒருவரிடம் எப்படி உரையாட வேண்டும் என்பதனை கற்றுக் கொண்டேன். என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியை (Individual growth) என்னால் உணர முடிகிறது. எனக்கு பெரிய அளவில் மக்கள் தொடர்பு (Network) கிடைத்துள்ளது. டிசிகாப் பள்ளியால் நிறைய புதிய மனிதர்களை சந்தித்தேன். அவர்களிடம் இருந்து என்னவெல்லாம் கற்றுகொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்றுக்கொண்டேன். நான் டிசிகாப் பள்ளியில் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் அதிகமான ஊழியர்களை சந்தித்து ஒவ்வொருவரிடம் உள்ள ஒரு தனித்துவமான திறமை அறிந்துக் கொண்டேன். அனைத்து ஊழியர்களும் பயிற்சியாளர்களும் எனக்கு ஒரு நண்பன் போலவே தோற்றமளிக்கிறார்கள். அவர்கள் அந்த அளவிற்கு எங்களுடன் பழகுவார்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நான் டிசிகாப் பள்ளியில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன் மற்றும் Toastmasters பயிற்சியின் மூலம் பார்வையாளர்கள் முன்பேசும் திறனை வளர்த்து வருகிறேன். டிசிகாப் பள்ளியில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. இயந்திரவியல் படித்த மாணவர் கூட நிரலாக்க மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம் என்று டிசிகாப் பள்ளியின் மூலம் தெரிந்துகொண்டேன்.
முடிவுகள் – மாற்றத்திற்கான திறவுகோல்:
எனது வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு டிசிகாப் பள்ளியை தேர்வு செய்ததுதான். டிசிகாப் பள்ளியின் பயிற்சியாளர்களும், என்னுடைய கடின உழைப்பும் என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டுவர காரணமாக அமைந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு நான் ஒரு சாதாரண பட்டயப்படிப்பு முடித்த மாணவன், ஆனால் இன்று நான் ஒரு முழு அடுக்குப் பொறியாளன். கடைசியாக ஒரு விஷயத்தை உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். என்னைபோல ஆர்வமுள்ள மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு இங்கே எப்படி வாய்ப்பு கிடைத்ததோ அதேபோல அவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த வலைப்பதிவை முழுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி.
Such a wonderful blog, keep it up.