கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. கல்வியால் எந்தச் சவாலையும் சமாளிக்க முடியும் என்பதை எனது வாழ்க்கைப் பயணம் உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.
என் பெயர் அம்ரிஷ்.சே. கல்வி என்பது பள்ளி, கல்லூரியில் மட்டும் கிடைக்கும் ஒன்று என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், டிசிகாப் பள்ளி அதை மாற்றிவிட்டது. இந்த கட்டுரையில்
நான் எப்படி டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன் என்று பார்க்கலாம் வாருங்கள்.
ஆரம்ப காலம்:
எனது பன்னிரண்டாம் வகுப்பை முடித்ததும், எனது நண்பருடன் சேர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரிக்கான பயணத்தைத் தொடங்கினேன். நானும் எனது நண்பரும், பல கல்லூரிகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்தோம். ஆனால் விரைவில், ஒரு கடுமையான உண்மை எனக்குப் புரிந்தது – குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் படிப்பைத் தொடர முடியாது என்று. அப்போதுதான் என் தந்தையின் நிதிப் பிரச்சனையின் தீவிரத்தை நான் உணர்ந்தேன். அதன்பிறகு, நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது என்பது உறுதியானது. தேர்வு விடுமுறை நாட்களில், எனது குடும்பத்திற்காக மளிகைக் கடையில் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். அதில் கிடைத்த வருமானம் எனது குடும்பத்திற்கு உதவியாக இருந்தது. ஆனால் முழு கடனையும் அடைக்க இது போதுமானதாக இல்லை.
டிசிகாப் அறிமுகம்:
இந்த நேரத்தில் எனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உணர்ந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. வழிகாட்டுதலைத் தேடி, என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு தலைமை ஆசிரியரை அணுகினேன். என் குழப்பத்தை உணர்ந்த அவர், எனக்கு வழிகாட்டினார். அவர் என்னை டிசிகாப் பள்ளிக்கு அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பு எனது எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றும் என்று எனக்குத் தெரியாது. டிசிகாப் பள்ளியின் முதன்மை நோக்கம் உயர்கல்வி படிக்க முடியாத அல்லது அவர்களின் தற்போதைய தகுதியுடன் சிறந்த வேலையைக் கண்டுபிடிக்க முடியாத மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதாகும்.
இதைப் பற்றி கேள்விப்பட்டதும், திட்டத்தில் சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தைத் தொடர்ந்து, நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. நேர்காணல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நான் பதற்றமாகவே இருந்தேன். ஆனால், மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் என் பெயரை கடைசியாக அழைத்தார்கள், அந்த நேரத்தில் நான் உலகின் உச்சியில் இருப்பது போல் உணர்ந்தேன். பின்னர், இந்த செய்தியை எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் அனைவரும் எனது சாதனையில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர். இந்த அனுபவம் உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்தது. டிசிகாப் பள்ளியில் நான் பல நண்பர்களை சந்தித்தேன். வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தாலும், எல்லாரும் ஒற்றுமையாக பழகினோம். ஒருவருக்கொருவர் உதவி செய்து, கற்றுக்கொண்டோம்.
டிசிகாப் பள்ளியில் நான்:
பள்ளியில் நான் சேர்ந்த போது மென்பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் சில நாட்கள் தத்தளித்தேன். இதுவரை நான் பார்த்திராத தொழில்நுட்பங்களும், கேள்விப் படாத கணினி பாடங்களும் என்னைப் பயமுறுத்தின. இதில் வெற்றி பெற முடியுமா என்று எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இதை எல்லாம் உடைத்தெறிந்து, முயற்சி செய்தால் எதையும் அடையலாம் என்று பள்ளியில் உள்ள அனைவரும் எனக்குக் கற்பித்தார்கள். “ஒரு நல்ல மாணவனின் வெற்றி ஒரு சிறந்த ஆசிரியரின் கைகளில் உள்ளது” என்பது பழமொழி. இதை நான் பள்ளியில் உணர்ந்தேன்.
டிசிகாப் பள்ளியின் ஆசிரியர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். வெறும் கற்பித்தலோடு நின்று விடாமல், பாடம் நமக்குப் புரிந்ததா, அதை எவ்வாறு பயன்படுத்துவது, புரியாவிட்டால் என்ன செய்வது, சிறந்த மென்பொருள் உருவாக்குநராக மாற என்ன செய்வது, என்று தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்தார். இது எங்களது திறனை வளர்ப்பது மட்டுமல்லாமல், பணிசுழலுக்கு எங்களை தயார்ப்படுத்திக்கொள்ள உதவியது. குறியீட்டுத்துறையை நான் இன்னும் முழுவதுமாக கற்றுக்கொள்ளவில்லை, என்றாலும் அதன் அடிப்படையில் நான் தெளிவாக உள்ளேன்.
ஆரம்பத்தில் இது நமக்கு வருமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால் இன்று ஒரு தளத்தை எவ்வாறு வடிவமைப்பது, அதற்கு என்ன தேவை என்பதை கற்றுக் கொண்டேன். “நாம் கற்றுக்கொள்வது மற்றும் கற்றல் அல்ல மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் ஒருவகையான கற்றல்தான்” என்பதை டிசிகாப் பள்ளி நிறுவனரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் யாரிடம் உரையாடினாலும் அவர் என்ன சொல்கிறார் என்பதை நன்றாகக் கவனிப்பார். கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு நிகழ்ச்சி என்று அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.
கற்றல் அனுபவம்:
டிசிகாப் பள்ளியில் நான் கற்றுக்கொண்டது வெறும் பாடத்திட்டம் மட்டுமல்ல. வாழ்க்கைக்குத் தேவையான பல திறன்களையும் கற்றுக்கொண்டேன். குழுவாகச் செயல்படுவது, தகவல் தொடர்பு திறன், பிரச்சனை தீர்க்கும் திறன், நேர மேலாண்மை போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டேன். டிசிகாப் பள்ளியில், திறமையான பயிற்சியாளர்களால் தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொண்டதுடன், அதை நேரலையில் பயிற்சி செய்து பார்க்க உதவினார்கள்.
டிசிகாப் பள்ளி எனக்கு வழங்கிய அறிய வாய்ப்புகள்:
- திறமையான தொழில்நுட்ப வல்லுநராக மாற வாய்ப்பு
- வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு
- புதிய நண்பர்களையும், இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன்.
டிசிகாப் பள்ளியில் பயிற்சி காலத்தை முடித்த பிறகு, நான் டிசிகாப்- க்யூ ஏ டச்(QA Touch) பிரிவில் வேலைப் பயிற்சியில் சேர்ந்தேன். தொழில் வல்லுநர்களிடம் கற்றுக்கொள்வதில் என் பயணத்தைத் தொடங்கி, தற்போது அவர்களோடு பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
டிசிகாப் பள்ளி எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. என் வாழ்க்கையை மாற்றியமைத்தது. தொழில் நுட்பத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குத் திறமையை வளர்த்துக்கொள்ள டிசிகாப் பள்ளி ஒரு நல்ல வாய்ப்பாகும். இது மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு அற்புதமான திட்டம்.
டிசிகாப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு என் அறிவுரை:
என் வாழ்வில் நடந்த சிறந்த நிகழ்வாக டிசிகாப் பள்ளியை எண்ணுகிறேன். என்னைப்போல் உங்களுக்கும் இதில் சேர வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவறவிடாதீர்கள். கடினமாக உழைத்து, உங்கள் இலக்குகளை அடையுங்கள்.
அடுத்த வலைப்பதிவில் சந்திப்போம்!
நன்றி! வணக்கம்!