சில சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா என்று நமக்கு தெரிவதில்லை. ஆனால் நம் மீது நம்பிக்கை கொண்டு எந்த செயலில் இறங்கினாலும் அதில் நாம் வெற்றி அடையலாம் என்பதை என் வாழ்க்கை கதையில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் பரத் ராஜ் கண்ணன். எனது சொந்த ஊர் சென்னையை அடுத்துள்ள ஆவடி. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செயின்ட் அந்தோணி நடுநிலைப் பள்ளியில் படித்தேன். பின்னர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை ஆர்.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களைப் பெற்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடம் என்றால் சமூக அறிவியல் தான், அதில் நான் 97 மதிப்பெண் எடுத்தேன். அந்த சமயத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அனைவரிடமும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண் மேல் பெறுவேன் எனக் கூறினேன். அதே போல் நான் மதிப்பெண் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் என்னுடைய படிப்பைத் தொடங்கினேன். நான் இரண்டு கல்லூரியில் விண்ணப்பித்தேன். பிறகு அதில் பி.டீ.லீ. செங்கல்வராய நாயக்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் டிப்ளோமா துறையில் இணைந்தேன். மூன்று ஆண்டு கல்லூரிப் படிப்பைச் சிறப்பாக முடித்தேன். சிறந்த மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
கொரோனா காலத்தில் நான் ஒரு பெரிய நிறுவனத்தில் பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் மாறி மாறி இரண்டு வருடம் வேலை செய்தேன். ஆனால் எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை, இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட தேவைக்காக அதைத் தொடர வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்த பணியில் நான் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை, அதனால் எனக்கு ஒரு புதிய பாதையை உருவாக்க நினைத்தேன். அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.
திசை மாறிய வாழ்க்கை:
இந்த நேரத்தில், டிசிகாப் பள்ளியின் முதல் பயிற்சி வகுப்பில் என்னுடைய கல்லூரி நண்பர் சேர்ந்தார். அவன் மூலமாக இரண்டாம் பயிற்சி வகுப்பு நேர்காணல் நடைபெறுவதை நான் அறிந்துகொண்டேன். டிசிகாப் பள்ளிக்கு விண்ணப்பித்து எப்படியாவது தேர்வாக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். பின்னர் டிசிகாப் பள்ளியில் 2023 ஜூலை 17ஆம் தேதி, நான் சேர்ந்தேன். தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் படித்த எனக்கு இந்த பாதை பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் என்னால் முடியும் என்று எனக்கு நானே நம்பிக்கை அளித்தேன். ஒரு வருட பயிற்சி வகுப்பு, ஆறு மாத வேலை பயிற்சி, அதற்குப் பின் டிசிகாப் நிறுவனத்தில் முழு நேர வேலை, ஆகியவற்றை உள்ளடக்கிய அவர்களின் திட்டத்தைப் பற்றி கூறினார்கள். பயிற்சியின் போது உதவித்தொகையும் வழங்குகிறார்கள், காலை மதிய உணவும் வழங்கப்படுகிறது.
முதல் இரண்டு மாதங்களில், எச்.டி.எம்.எல் (HTML), மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்றுக்கொடுத்தார்கள். அதை வைத்து பின்பு, அதில் மதிப்பீடு வைத்தார்கள், அதில் நான் சரியாகச் செயல்படவில்லை. என்னால் அதைக் கற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். அதன் பிறகு ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) கற்றுக் கொண்டேன். இது அனைத்தையும் சோதித்து மதிப்பீடு தேர்வு வைத்தார்கள். பின்னர் மை.எஸ்.கியூ.எல் (MySQL) மற்றும் பி.எச்.பி (PHP) கற்றுக்கொண்டேன். பின்னர் ஃபிக்மா வடிவமைப்பை கற்றுக்கொண்டேன். பின்னர் தர்க்கரீதியான சாவல்களை எப்படித் தீர்ப்பது என்று கற்றுக் கொடுத்தார்கள். அதில் நான் நல்ல நன்றாகச் செயல்பட்டேன். எனக்குப் பள்ளி பயிற்சியாளரின் பாராட்டு கிடைத்தது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கிடைத்தது. இன்று ஒரு முழு அடுக்கு உருவாக்குனர் (Full Stack Developer) என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். தற்போது நான் எனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வேலை பயிற்சியில் இணைய உள்ளேன்.
வளர்ச்சி:
டிசிகாப் பள்ளி எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவியது. டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகளில் பங்கேற்பதன் மூலம் எனது பேசும் திறனை மேம்படுத்தவும், புத்தகம் வாசிப்பதன் மூலம் எனது வாசிப்புத் திறனை மேம்படுத்தவும். கூடுதலாக, வலையொலிகளைக் (Podcast) கேட்பதன் மூலம் எனது கேட்கும் திறனை மேம்படுத்தியுள்ளேன். இது எனது அறிவையும் புரிதலையும் வலுப்படுத்தியுள்ளது.
சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலம் எனது நம்பிக்கையையும் ஊக்கத்தையும் நான் மேம்படுத்தியுள்ளேன். அதன் பின்பு சமூக அமர்வுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு நான் சென்றிருந்தேன். இதனால் எனக்குப் பெரிய அளவில் மக்கள் தொடர்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்வில் வினாடி வினாவில் நான் முதல் பரிசு பெற்றேன். இதனால் அனைவரும் என்னை பாராட்டினார்கள். இந்த வாய்ப்பை அளித்ததற்காக டிசிகாப் பள்ளிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை போல உங்களுக்கும் சில சமயங்களில் நாம் எடுத்த முடிவு சரியானதா என்ற சந்தேகம் உருவாகலாம், ஆனால் எந்த செயலாக இருந்தாலும் நம்முடைய முழு முயற்சியையும் அளித்தால் அதில் வெற்றி பெறலாம். இதை தான் இந்த ஒரு வருடத்தில் நான் கற்றுக்கொண்டேன். மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்! நன்றி!