என் பெயர் குணஸ்ரீ குணசேகரன். எனது சொந்த ஊரான திருச்சியில் கணினி அறிவியல் துறையில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ளேன். டிப்ளோமா படிப்பை முடிக்கும் தருவாயில் டிசிகாப் பள்ளியில் இருந்து எங்கள் கல்லூரிக்கு நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் என் வாழ்கையின் பாதையை நான் தேடி கொண்டிருந்தேன். எனக்கு டிசிகாப் நிறுவனத்தை பற்றி எதுவும் தெரியாது, ஆனால் இதுதான் எனக்கான கடைசி வாய்ப்பு, டிசிகாப் தான் எங்கள் கல்லூரிக்கு வரும் கடைசி நிறுவனம். ஆகையால் நேர்காணலில் கலந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அப்போது எனக்கு தெரியவில்லை, தற்செயலாக நான் எடுத்த அந்த முடிவு தான் என் வாழ்வை மாற்ற போகிறது என்று.
முதல் சுற்றை கடந்து இரண்டாவது சுற்றுக்கு சென்றேன். அப்போது அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு நான் தவறான பதிலை அளித்தேன். இதனால் நான் மிகவும் பதற்றம் அடைந்தேன். கிடைத்த இந்த வாய்ப்பும் பறிபோய்விடுமோ என்று தயங்கினேன். இவ்வாறு நான் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னை அடுத்து சுற்றுக்கு தேர்ந்தெடுத்த செய்தியை அறிந்தேன். மகிழ்ச்சியுடன் கடைசி சுற்றில் மனிதவள மேலாளரை சந்தித்தேன். இறுதியில் எங்கள் கல்லூரியில் இருந்து ஏழு நபர்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் என் பெயரும் இடம்பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.
பள்ளியில் அடியெடுத்து வைத்தல்
டிசிகாப் பள்ளியில் எங்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஒரு வருடத்தில் வலை மேலாண்மை, தலைமைத்துவ திறன்கள், பணியிடத்தில் நடக்கும் பண்பு ஆகியவற்றை கற்றுக்கொடுப்பார்கள். பின்னர் நாங்கள் கற்றக்கொண்டதை செயல்படுத்தி பார்க்க ஆறு மாதம் வேலை பயிற்சி. இந்த பதினெட்டு மாதங்கள் எவ்வாறு சென்னையில் தனியாக வசிப்பது என்று தயங்கினேன். இங்கு கிடைக்கும் அனுபவம் எனக்கு பிற்காலத்தில் உதவும், ஆகையால் நம்பிக்கையோடு செல் என்று என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். அவர்கள் அளித்த நம்பிக்கையோடு, என் நண்பர்களுடன் சென்னையை நோக்கி புறப்பட்டேன்.
மின்னஞ்சலை எவ்வாறு அனுப்புவது, நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது போன்ற அடிப்படை கருத்துகளை புரிந்துகொள்வதில் இருந்து எங்கள் கற்றல் பயணம் தொடங்கியது. கேட்பதற்கு எளிமையாக தோன்றினாலும், இவ்வாறு அடிப்படையில் இருந்து கற்பது எங்கள் கற்றல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. பின்னர் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) நிரலாக்க மொழியை கற்க ஆரம்பித்தோம். நான் கணினி துறையில் டிப்ளோமா முடித்துள்ளதால் எனக்கு இதை பற்றி கொஞ்சம் தெரியும். இருந்தாலும், இங்கு அதனை செயல்படுத்தி பார்க்கும் போதுதான் அதை பற்றிய முழு புரிதல் எனக்கு ஏற்பட்டது. கற்க கற்க இன்னும் அதிகம் கற்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது. நானும் புது புது கருத்துகளை ஆராய்ந்து கற்க ஆரம்பித்தேன். எப்போதேனும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை பயிற்சியாளர்களிடம் கேட்பேன். அவர்கள் எனக்கு எளிதாக புரியும் படி சொல்லி கொடுப்பார்கள்.
முன்இறுதி செயல்பாடு
அடுத்தது ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மொழியை கற்க ஆரம்பித்தேன். எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) இரண்டையும் இணைக்கும் கருவியாக ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) செயல்பட்டது. முன் இறுதி கருத்துகளை புரிந்துகொண்டதும் அதில் ஒரு செயல் திட்டத்தை தொடங்கினோம். இந்த செயல் திட்டத்திற்கு ஒரு பயண திட்டமிடுதல் செயலியை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் சிந்தித்தேன். அதை என் குழுவிடம் கூரிய பொது அவர்களும் நல்ல யோசனை, அதையே மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள். எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட்டை (JavaScript) பயன்படுத்தி இந்த செயலியை உருவாக்கினோம். இந்த செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது எனது தொழினுட்ப திறன் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பின்இறுதி மற்றும் ஆராய்ச்சி திட்டம்
ஒரு சிறந்த நிரலாக்க நிபுணராக வேண்டும் என்றால், பிரச்சினைகளை தீர்க்கும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும், அதனை வளர்க்க தர்க்கரீதியான சிந்தனை பற்றி ஆராய தொடங்கினேன். இது சவால்களை எதிர்கொள்ளவும் தீர்க்கவும் எனக்கு உதவியது. முன் இறுதி மொழிகளை கற்ற பின்னர், பின் இறுதி மொழிகளான பி.எச்.பி (PHP), மை.எஸ்.க்யூ.எல் (MySQL), மொழிகளை கற்றோம். பின்இறுதி மொழிகளை கற்ற பின்னர் ஒரு ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். இந்த முறை ஒரு நிகழ்வு ஏற்பாடு தளத்தை உருவாக்கினோம்.
இந்த திட்டத்தின் மூலம் முன் இறுதி மற்றும் பின் இறுதி அமைப்புகளை ஒருங்கிணைப்பதை பற்றி நான் தெரிந்துகொண்டேன். இந்த திட்டங்கள், எனது தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், குழுப்பணி, தகவல் தொடர்பின் இன்றியமையாமை, ஒரு குழுவை எவ்வாறு வழிநடத்துவது போன்றவற்றை கற்க எனக்கு உதவியது. நான் எதிர்காலத்தில் சந்திக்க போகும் சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை இது எனக்கு வழங்கியது.
பள்ளி பயணம்
டிசிகாப் பள்ளியின் மூலம் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புத்தக கண்காட்சி, கணி தமிழ் மாநாடு, ஜாவாஸ்கிரிப்ட் மாநாடு ஆகியவற்றில் நான் பங்கேற்றேன். அவைகளில் இருந்து நான் பலவற்றை கற்றது மட்டுமல்லாமல் புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர்களிடம் கருத்துகளை பரிமாறிக்கொண்டேன் மற்றும் புதிய பல கருத்துகளை தெரிந்துகொண்டேன். தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது பெரும் பங்களித்தது.
தொழில்நுட்ப திறன்களுக்கு அப்பால் நான் பல்வேறு மென்திறன்களையும் இங்கு கற்றுக்கொண்டேன். புத்தகம் வாசிப்பது, வலையொலிகள் கேட்பது, அனைவரின் முன் சரளமாக பேசுவது, தன்னம்பிக்கை, தலைமைத்துவ பண்பு, குழுவுடன் இணைந்து வேலை செய்தல், இன்னும் ஏராளமானவற்றை நான் கற்றுக்கொண்டேன்.
தற்போது ஒரு வருட பயிற்சியை முடித்து வேலை பயிற்சியில் இணைந்துள்ளேன். நான் இதுவரை கற்றுகொண்டத்தை செயல்படுத்தி பார்க்கவும் மேலும் புதியவற்றை கற்றுக்கொள்ளவும் இந்த காலம் எனக்கு உதவும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த டிசிகாப் பள்ளிக்கும், இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி குழுவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.