
வணக்கம், என் பெயர் லோகேஷ் முனுசாமி. நான் சென்னையில் பெரவள்ளூர் என்னும் இடத்தில் பிறந்தேன். எனது தொடக்கக் கல்வியை தமிழ் வழியில் படித்தேன். ஆரம்பப் பள்ளிக்கு பிறகு, பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கு மாறினேன். பின்னர் புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்தேன். என் வாழ்க்கை பயணத்தையும், நான் எவ்வாறு டிசிகாப்பள்ளியில் இணைந்தேன் என்பதை பற்றியும் இந்த பதிவில் பகிர உள்ளேன்.
குழந்தை பருவத்தின் மறக்க முடியாத தருணங்கள்
என் அம்மாவின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். எனக்கு விவசாயம் பார்ப்பது பிடிக்கும். ஆண்டுதோறும் என் அம்மாவின் சொந்த ஊருக்குச் செல்லும் போது சிறு சிறு விவசாய வேலைகள் செய்வேன். இளம் வயதில் எனக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிக்கும். அந்த கார்ட்டூன்களை பார்க்கும் போது நாமும் வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இரவு நேரங்களில் நண்பர்களுடன் தெருவில் குடி விளையாடிய நாட்களை என்னால் மறக்க முடியாது. அடுத்ததாக என் பள்ளி நாட்களை பற்றி பார்க்கலாம்.
போராட்டங்கள்
ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற நான், ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கு மாறியதால், ஆரம்பத்தில் படிக்கவும் எழுதவும் மிகவும் சிரமப் பட்டேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனது வாசிப்புத் திறனிலும் எழுதும் திறனிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், நேரு மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில், தடகளம், பூப்பந்து, நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் நான் பங்கேற்றேன். பூப்பந்து போட்டியில் எனது அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு (District Level) முன்னேறியது. அது ஒரு கடினமான போட்டி. அதில் நாங்கள் தோற்றோம். இருந்தாலும் அது எனக்கு முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. தோல்வியுற்றாலும் இறுதிவரை போராட வேண்டும் என்ற மனநிலையை எனக்குள் புகுத்தியது.
பத்தாம் வகுப்பில், நாங்கள் தினசரி தேர்வுகளை எழுதி, முந்தைய தேர்வுத் தாள் களைப் பற்றி விவாதித்து, முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். இதனால், என்னால் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அதன் பிறகு, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் டிப்ளமோ படிப்பை படிக்க விரும்பினேன். ஆனால் என் குடும்பத்தினர் உயர் கல்வியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் பிறகு பன்னிரண்டாம் வகுப்பை முடித்தேன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பித்து, மூன்று கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தேன். கலந்தாய்வில் கலந்து கொண்ட போது, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தேன், ஆனால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, கணினிப் பொறியியல் துறையில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு வகையில் அது என் வாழ்க்கையை மாற்றியது என்றும் கூறலாம்.
கல்லூரி வாழ்க்கை
கணினி துறையில் சேர்ந்து படிக்க தொடங்கினேன். கல்லூரியின் ஆசிரியர்கள் மிகவும் நட்பாக பழகினார்கள். எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தார்கள். குறிப்பாக வேதியியல் பேராசிரியர் ஜான்சி அவர்கள் மிகவும் கலகலப்பாக பாடம் நடத்துவார். இங்கு எனக்கு பல நண்பர்கள் இருந்தார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றாக படிப்பது வெளியே செல்வது என கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. மூன்றாவது பருவத் தேர்வின் போது என் நண்பர் ஒருவரின் வருகை பதிவு சதவீதம் குறைவாக இருக்கவே, அவர் கல்லூரி படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான் ஒழுக்கம் மற்றும் நேரத்தின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது. ஒரு வழியாக என் டிப்ளமோ படிப்பும் முடிந்தது.
பணி அனுபவம்
டிப்ளமோ படிப்பை முடித்த பிறகு, எங்கள் துறைத் தலைவர் என்னை ஓரு நிறுவனத்தில் பணியமர்த்தப் பரிந்துரைத்தார். நானும் என் நண்பன் லோகேஸ்வராவும் அந்த நிறுவனத்தில் சேர்ந்தோம். அந்த நிறுவனம் வன்பொருள், மென்பொருள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியது. எனது முதல் நாள் பயிற்சி, கிண்டியில் உள்ள ஒரு வங்கியில் சிடிஎஸ் இயந்திரம் (CTS machine) பராமரிப்பில் தொடங்கியது. இவ்வாறு பல வங்கிகளில் பணி புரிந்துள்ளேன். சில வங்கிகளுக்கு பேருந்து வசதி இல்லாததால், தினமும் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பணிபுரிந்தேன். சில மாவட்டங்களுக்கு சென்று ஓரிரு நாட்கள் தங்கி சிடிஎஸ் இயந்திரங்களைச் சரி செய்துள்ளேன். இது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, அந்த வேலையைச் செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இருந்தாலும் என் மனதில் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. நாம் படித்ததற்கும் செய்கிற வேலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையே, இப்படியே வாழ்க்கையை கடத்திவிடுவதா என்ற கேள்விக்குறி. ஒரு நாள் எல்லாவற்றிக்கும் விடை கிடைத்தது. ஒரு நாள் எங்கள் கல்லூரி மூலம் டிசிகாப் பள்ளி என்று முன்முயற்சியை பற்றி தெரிந்துகொண்டேன். தொழில்நுட்பத்தை கற்று தருவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பும் அளிக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு, அதில் சேர விண்ணப்பித்தேன். என் நண்பர்களையும் விண்ணப்பிக்க பரிந்துரைத்தேன். அவர்களிடம் இருந்து நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. நானும் என் நண்பர் லோகேஸ்வராவும் நேர்காணலில் கலந்து கொண்டோம்.
டிசிகாப் பள்ளியில் எனது அனுபவம்
நேர்காணல் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. முதலில் தகுதி சுற்று. இந்தச் சுற்றில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டோம் என்று நினைத்தோம், ஆனால் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில்நுட்பம் (Technical) மற்றும் மனிதவள (HR) சுற்றுகளுக்கு சென்றோம். அங்கு எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொண்டேன். முன்பு கூறியது போல தான், வெற்றியோ தோல்வியோ கடைசி வரை போராட வேண்டும் என்று எண்ணினேன். என்னால் முடிந்ததை நேர்காணலில் வெளிப்படுத்தினேன், முடிவுகளை பற்றி கவலை கொள்ளவில்லை. இறுதியில் நானும் என் நண்பனும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

தற்போது நான் என் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். ஏனென்றால், நான் இங்கே, தொழில்நுட்ப உலகின் அடித்தளத் தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். பயிற்சியின் ஆரம்பத்தில் எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற அடிப்படை வலைத்தள தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தார்கள். இந்த மூன்றும் ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கு மிக அவசியம்.
எச்.டி.எம்.எல் (HTML) மூலமாக ஒரு வலைப்பக்கத்தின் கட்டமைப்பை உருவாக்குவது எப்படி என்பதையும், சி.எஸ்.எஸ் (CSS) மூலம் அதன் தோற்றத்தை அழகாக வடிவமைப்பது எப்படி என்பதையும் புரிந்து கொண்டேன். அதன்பின்னர், ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்றுக் கொண்டு, அதைப் பயன்படுத்தி வலைத்தளங்களில் செயல்பாடுகளை உருவாக்குவது எப்படி என்பதைச் சிறிது சிறிதாக தெரிந்துகொண்டேன். பயிற்சியாளர்கள் ஒவ்வொரு தலைப்பையும் கற்றுக் கொடுத்த பிறகு, அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு செயல் பயிற்சியை வழங்குவார்கள். அது எங்கள் புரிதலை மேலும் செம்மைப்படுத்தியது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் முயற்சி செய்து அந்தப் பயிற்சியை முடிப்போம்.

செயல்திறன் அனுபவம்
எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய அடிப்படை வலைத்தள தொழில்நுட்பங்களை வைத்து, அதன் அடிப்படையில், தற்போது ரியாக்ட் கட்டமைப்பை பயன்படுத்தி ஒரு செயல்பாட்டை குழுவாக மேற்கொண்டுள்ளேன். ஒரு மின்னஞ்சல் வடிவமைப்பு தளத்தை (Email Template Builder) உருவாக்குவது தான் எங்களுடைய செயல்பாடு. இந்தத் திட்டத்தில் நாங்கள்:
- எளிதாக உருவாக்க கூடிய (Drag-and-drop) பயனர் இடைமுகக் கருத்துகளை ஆராய்ந்து (Analyze) வருகிறோம்.
- கூறுகளை ஒட்டுமொத்தமாகவும் தனிப்பட்ட அளவிலும் திட்டமிட்டு உருவாக்கி (Plan and Create) வருகிறோம்.
- மாறும் படிவம் கையாளுதல் (Dynamic Form Handling), நிகழ்நேர முன்னோட்டம் (Real-time Preview) போன்ற கருத்துகளைப் பயன்படுத்துகிறோம்.
இது ஒரு குழு அடிப்படையிலான கற்றல் திட்டம் (Team-based Learning Project) என்பதால், நாங்கள் ஒரே நேரத்தில் குறியிடுதல் (Coding), பேச்சு திறன் (Communication) போன்ற மென்திறன்களையும் (Soft Skills) வளர்த்து வருகிறோம். எங்கள் வழிகாட்டிகள் (Mentors) தொடர்ந்து கருத்துக்களை (Feedback) வழங்கி, எங்களை வழிநடத்துகிறார்கள்.
ரியாக்ட் கட்டமைப்பை கற்றது எனக்குப் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. இதில் கற்றுக்கொள்வது மட்டும் இல்லாமல், நேரடியாக அதை பயன்படுத்தியும் பார்த்து வருகிறேன். இதில் பல மேம்பட்ட கருத்துகளை நன்கு புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். அதில் சிலவற்றை பார்க்கலாம்.
- கூறு அடிப்படையிலான கட்டமைப்பு (Component-based Architecture) – ஒரு பெரிய பயனர் இடைமுகத்தை (UI) சிறிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்க முடிகிறது.
- பண்புகள் (Props) – கூறுகளுக்கு இடையே தரவை (Data) அனுப்புவது எப்படி என்பதை இவற்றின் மூலம் புரிந்து கொண்டேன்.
- நிலை மேலாண்மை (State Management) – கூறுகளில் மாறும் தரவை (Dynamic Data) எவ்வாறு கையாள்வது என்பதை பயில்கிறேன்.
- ரியாக்ட் ஹூக்ஸ் (React Hooks) – செயல்பாட்டுக் கூறுகளில் (Functional Components) தர்க்கத்தை (Logic) எழுத இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இது ஒரு தொடக்கம் மட்டும் தான். தொழில்நுட்ப துறையில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் ஏராளமாக இருக்கிறது. என்னால் முடிந்த வரை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள நான் முயற்சித்து வருகிறேன். வாழ்நாள் கற்றலின் முக்கியத்துவத்தை நான் இங்கு கற்றுக்கொண்டேன். இன்னும் சில மாதங்களில் தொழில்நுட்ப பயிற்சியை முடித்து வேலை பயிற்சியில் இணைய உள்ளேன். அங்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நான் காத்திருக்கிறேன்.

இப்போது நினைத்து பார்க்கையில், அன்று எனக்கு கணினி துறைக்கு பதில் மின்னணு துறையில் டிப்ளமோ கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எவ்வாறு மாறியிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் முடிந்ததை எண்ணி பயனில்லை உள்ளதை கொண்டு எவ்வாறு வாழ்வில் சிறந்த இடத்திற்கு செல்வது என்பதை கண்டறிந்து செல்வது தான் புத்திசாலித்தனம். எனவே ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் மனம் வருந்தாதீர்கள். அதை விட சிறந்த ஒன்று உங்களுக்காக காத்திருக்கும். இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.