வணக்கம்! என் பெயர் மதன் குமார் புகழேந்திராஜா. நான் திருச்சியில் இருந்து வருகிறேன். சிறு வயதில் நாம் பல கனவுகள் மற்றும் லட்சியங்களைக் கொண்டிருப்பது வழக்கம். அது போன்று எனக்கு சிறு வயது முதலே மென்பொருள் துறையில் சேர வேண்டும் என்ற ஆவல் இருந்தது. என்னுடைய ஆசையை நிறைவேற்ற சேஷாசாயி தொழில்நுட்ப கல்லூரியில் கணினி பொறியியல் டிப்ளோமா படிப்பை தேர்ந்தெடுத்தேன்.
கல்லூரி நாட்கள் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியது, ஒன்றாக படித்தது, வெளியே சென்றது என வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. இது ஒரு புறம் இருக்க, கல்வியில் கவனம் குறைய ஆரம்பிக்கவே, மதிப்பெண்களும் குறைய ஆரம்பித்தன. அதனால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இதனால் என் மதிப்பெண்களும் உயர்ந்தது. இவ்வாறே இரண்டு வருடங்கள் கடந்து மூன்றாவது மற்றும் கடைசி கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்தேன். இந்த நேரத்தில் தான் எனக்கு வாழ்கையை பற்றிய ஒரு பதற்றம் உருவானது. இந்த நேரத்தில் எனக்கு இரண்டு நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தன. இதில் எதையாவது therthedukalama அல்லது பட்டப்படிப்பை மேற்கொள்ளலாமா என்று எண்ணி கொண்டிருந்த நேரத்தில் தான், டிசிகாப் பள்ளியில் இருந்து எங்கள் கல்லூரிக்கு நேர்காணலுக்காக வந்திருந்தார்கள்.
பட்டம் இல்லையென்றால் என்ன!
டிசிகாப் பள்ளியில் இருந்து வந்தவர்கள் தங்களின் அமைப்பை பற்றி எடுத்துக்கூறி, தாங்கள் செய்து வருவதை பற்றி கூறினார்கள். டிப்ளோமா அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, பட்டப்படிப்பை படிக்க இயலாத மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஊக்கதொகையும் அளித்து, வேலை வாய்பையும் அளிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். இது ஒரு புதிய ஒன்றாக தோன்றியது, மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்ற இது தான் சரியான வழி என்று தெரிந்து, நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பித்தேன். இதில் கலந்துகொள்வதற்காக எனக்கு கிடைத்த அந்த இரண்டு வேலை வாய்ப்பையும் நிராகரித்துவிட்டேன்.
நேர்காணல் மூன்று சுற்றுகளாக நடந்தது. முதலில் தொழில்நுட்ப சுற்று. இதில் மென்பொருள் தொழில்நுட்பம் குறித்து நாங்கள் அறிந்ததை பரிசோதித்தார்கள். பின்னர் அனைவரையும் தனியாக நேர்காணல் செய்தனர். இதில் எங்கள் ஆசை, லட்சியம், திறன், தொழில்நுட்ப துறையின் மீது எங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போன்றவற்றை பற்றி கேட்டார்கள். இதில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடைசி சுற்றில் மனிதவள மேலாளரை சந்தித்தோம். கணினி, நிரலாக்கம் பற்றி எனக்கு ஓரளவு தெரிந்திருந்ததால், நான் நம்பிக்கையுடன் நேர்காணலில் பங்கேற்றேன். முடிவில் என்னை தேர்ந்தெடுத்ததாக அவர்கள் கூறியபோது, நான் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தேன்.
திருச்சி முதல் சென்னை வரை
இந்த மகிழ்ச்சியான செய்தியை என் பெற்றோரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அவர்களும் என்னை ஆதரித்து என்னை வழியனுப்பி வைத்தனர். என் கனவை அடைய, சென்னையை நோக்கி நான் புறப்பட்டேன். ஜூலை 17, 2023 அன்று டிசிகாப் பள்ளியில் நான் இணைந்தேன். முதல் சில நாட்களில், இந்த ஒரு வருடத்தில் நாங்கள் என்ன கற்றுக்கொள்ள போகிறோம், யார் எங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள், எங்கள் கணக்குகளை அமைப்பது போன்றவற்றை செய்தோம். பின்னர் எங்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நபர்களிடம் இருந்து நேரடியாக நாங்கள் கற்றுக்கொள்வதால், நிரலாக்க கருத்துகளை நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது.
டிப்ளோமா படிக்கும் போது நிரலாக்க கருத்துகளை நான் படித்திருந்தாலும், இங்கு அதனை பயிற்சி செய்து பார்க்கும் போது, அதன் அர்த்தங்களை என்னால் மேலும் புரிந்துகொள்ள முடிந்தது. முதல் மூன்று மாதங்கள் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) மொழியை கற்க ஆரம்பித்தோம். பின்னர் அதில் ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மற்றும் வடிவமைப்பின் அடிப்படைகளை கற்க ஆரம்பித்தோம். இது அனைத்தையும் முடித்த பின்னர், நாங்கள் குழுவாக ஒரு செயல்திட்டத்தை மேற்கொண்டோம். இந்த திட்டம் நாங்கள் கற்றுக்கொண்டதை நிஜ உலகில் செயல்படுத்தி பார்க்க எங்களுக்கு உதவியது.
அனுபவ கற்றல்
டிசிகாப் பள்ளியில் எனக்கு பிடித்த ஒன்று, கோட்பாடு அடிப்படையில் கற்காமல், செயல்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான். நாங்கள் கற்றுக்கொண்டதை செயல்படுத்தி பார்க்க செயல்திட்டம், எங்களின் பலம் பலவீனத்தை அறிய தேர்வுகள், புதிய தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்ள வெளி நிகழ்வுகளுக்கு செல்வது, என எங்களை மேம்படுத்த பல வழிகளை கையாண்டனர்.
முன்இறுதி கருத்துகளை முடித்த பின்னர் பின்இறுதி நிரலாக்க மொழிகளை நாங்கள் கற்றுக்கொள்ள தொடங்கினோம். அதனை முடித்த பின்னர், முன்இறுதி மற்றும் பின்இறுதி இரண்டையும் இணைத்து ஒரு செயல்திட்டத்தை மேற்கொண்டோம். இதற்கு டிசிகாப் நிறுவனத்திலிருந்து ஒருவர் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். இந்த ஒரு வருடத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அம்சங்களில் நான் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றேன். குழுவாக செயல்படுவது, ஒரு குழுவை வழிநடத்துவது, அனைவரின் முன் நின்று பேசுவது என என்னை பல வகையில் நான் மேம்படுத்திக் கொண்டேன்.
கனவு நிறைவேறியது
ஒரு வருட பயிற்சிக்கு பின்னர், தற்போது நாங்கள் டிசிகாப் நிறுவனத்தில் வேலை பயிற்சியில் இணைந்துள்ளோம். எனது சிறு வயது ஆசை இப்போது நிறைவேறியுள்ளது என்பதை என்னும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு முழு அடுக்கு வலை மேம்பாலர் என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த ஒரு வருடத்தில் நான் அடைந்த மாற்றங்களை என்னால் உணர முடிகிறது. பள்ளி எனக்கு வழங்கிய ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நண்பர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம், நன்றி!