கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நாம் பின்பற்ற வேண்டிய செயல். இதை எனக்கு புரியவைத்தது டிசிகாப் பள்ளி. அனைவருக்கும் வணக்கம்! எனது பெயர் பூமிகா கண்ணன். நான் புதுக்கோட்டை மாவட்டம் அருகிலுள்ள மேல்நிலைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவள். டிசிகாப் பள்ளியில் ஓராண்டு பயிற்சியை முடித்து, தற்போது வேலைப் பயிற்சிக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். நான் எவ்வாறு டிசிகாப் பள்ளியில் இணைந்தேன் என்று இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
டிசிகாப் அறிமுகம்
நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை எனது சொந்த ஊரிலேயே படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் என்ன செய்யலாம் என என் அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் டிசிகாப் பள்ளியைப் பற்றிச் சொன்னார். நான் மிகவும் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் டிசிகாப் பள்ளியில் சேர வேண்டும் என்ற ஆவல் எனக்குள் மலர்ந்தது. டிசிகாப் பள்ளியில் பயிற்சி பெற சென்னை செல்ல வேண்டி இருந்தது. ஆனால், என் தந்தை என்னை வெகு தூரம் அனுப்புவதற்குத் தயங்கினார். இந்நேரத்தில், என் தாயார் எனக்கு ஆதரவாக இருந்தார்.
நான் நேர்காணலில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக சென்னைக்கு வந்தேன். நேர்காணலில் கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்ற பின்னர் என் தாயிடம் இதைப் பற்றிக் கூறினேன். என் தாயார் மிகவும் சந்தோசமாக என் உறவினர்கள் அனைவரிடமும் இதைப் பற்றிக் கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிறகு நான் என்னுடைய ஊருக்குச் சென்ற போது, அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். அது எனது தாய் தந்தைக்குப் பெருமையாக இருந்தது. ஆரம்பத்தில் போக வேண்டாம் என்று கூறிய தந்தை, இப்போது மகிழ்ச்சியோடு என்னைப் பள்ளிக்கு வழியனுப்பிவைத்தார்
டிசிகாப் பள்ளியில் நான்
பள்ளியில் சேர்ந்து போது மென்பொருள் பற்றி ஏதும் அறியாமல் இருந்தேன். என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இங்கு நம்மால் நிலைக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழும்பின. ஆனால், எனது பள்ளி நண்பர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். “உன்னால் முடியும்” என்று கூறினார்கள். நானும் கற்க ஆரம்பித்தேன். எனக்குப் பள்ளியின் கலாச்சாரம் மிகவும் பிடித்துவிட்டது. முதல் இரண்டு மாதங்களில், எச்.டி.எம்.எல் (HTML), மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்றுக்கொடுத்தார்கள். பின்பு, அதில் மதிப்பீடு வைத்தார்கள், அதில் நான் சரியாகச் செயல்படவில்லை.
பின்பு தர்க்கரீதியான சிக்கல்களை (logical problem) எப்படித் தீர்ப்பது என்று கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், நான் அதிலும் சரியாகச் செயல்படவில்லை. இந்த நேரங்களில் நான் மனச்சோர்வு அடைந்தேன். என்னால் இதைக் கற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். அப்போது பள்ளி ஒருங்கிணைப்பாளர் மற்றும் நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் அந்த மதிப்பீடு தேர்வை மீண்டும் எழுதினேன். அதில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன். பின்னர் நடந்த ஜாவாஸ்கிரிப்ட் மதிப்பீடு தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன். இதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அதிகமாக கற்க ஆரம்பித்தேன்.
திட்ட செயல்பாடு
நாங்கள் கற்றுக்கொண்டதைப் பரிசோதித்துப் பார்க்க, எங்களுக்குக் குழுப் பணி வழங்கப்பட்டது. திட்டத்தில் வெற்றி பெறுவது இதன் நோக்கமல்ல, ஒரு குழுவாக நாங்கள் எப்படிச் செயல்படுகிறோம், எப்படி ஒரு குழுவை நாங்கள் செயல்படுத்துகிறோம், என்பதையும் இதில் பரிசோதித்தார்கள். இந்த குழுப் பணியிலிருந்து நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்குக் கடின சூழ்நிலையிலும் குழுவாகச் செயல்படுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
பின்பு டி.பி.எம்.எஸ் (DBMS) மற்றும் பி.எச்.பி (PHP) கற்க ஆரம்பித்தோம். அதை நான் நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்து மொழிகளையும் வைத்து எங்களுக்கு ஒரு குழு செயல்பாடு திட்டத்தை வழங்கியுள்ளனர். நானும் என் குழுவும் அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
சுயகற்றல் அனுபவம்
பள்ளியில் எனக்குப் பிடித்த ஒன்று சுயகற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது. பல வெளி நிகழ்வுகள், பட்டறைகள், நிகழ்நிலை வகுப்புகளில் பங்கேற்பது மூலம் எங்களின் திறன் மற்றும் அறிவை விரிவாக்கம் செய்ய பல வழிமுறைகளைக் கையாண்டனர். நானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், எனது திறனை மேம்படுத்தவும், நான் கற்றுக் கொண்டதைப் பரிசோதித்து பார்க்கவும் இது எனக்கு உதவியது.
டிசிகாப் பள்ளியில் இணைவதற்கு முன்னர், கணினியைப் பற்றி நான் எதுவும் தெரியாமல் இருந்தேன். குழுவாகச் செயல்படுவது எப்படி, தன்னம்பிக்கையோடு செயல்படுவது எப்படி, நம்மை மெருகேற்றிக் கொள்வது எப்படி, சரியான முறையில் தொடர்புகொள்வது எப்படி, இன்னும் பலவற்றை நான் பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவத்தை நான் இங்குத் தெரிந்துகொண்டேன். இங்கு நடைபெறும் டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகளின் மூலம் எனது பேச்சுத் திறமையை வளர்த்துக்கொண்டேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக டிசிகாப் பள்ளிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.