
மாறாத நினைவுகளையும், மனதைவிட்டு நீங்காத அனுபவங்களையும் சுமந்துகொண்டு, மதுரையின் ஒரு சிறு கிராமத்திலிருந்து நான் என் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினேன். நகர வாழ்க்கையின் பரபரப்பில், ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக புறப்பட்ட என்னுடைய கதை இது.
நான் பிரியதர்ஷினி இராமர். மதுரை மாவட்டம், வேடர்புலியங்குளம் தான் என் சொந்த ஊர். அங்கு நான் துறுதுறுவென ஓடி ஆடி விளையாடும் ஒரு சுட்டிப் பெண்ணாகவே அறியப்பட்டேன். எனக்கு “பொம்மை”, “நண்டு” என்று சில செல்லப் பெயர்களும் இருந்தன.
ஒன்பதாம் வகுப்பு வரை நான் ஒரு சராசரி மாணவிதான். ஆனால், அதன் பிறகு படிப்பில் ஆர்வம் அதிகரித்து, வகுப்பில் முதல் மாணவியாக மாறினேன். பள்ளி நாட்களில் நண்பர்களுடன் தண்ணீர்ப் பந்துகளை வைத்து விளையாடியது, ஒன்றாக படித்தது, வெளியே சென்றது போன்ற பல இனிய நினைவுகள் எனக்கு உண்டு. நான் பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்தேன். பதினோராம் வகுப்பு முடியும் தருவாயில் கோவிட்-19 உலகையே உலுக்கியது. பள்ளிகள் மூடப்பட்டு அனைவரும் இல்லத்தில் அடைக்கப்பட்டோம். என் நண்பர்களுடன் விளையாட முடியாமல் போனது எனக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது. அவ்வாறே நான் பன்னிரண்டாம் வகுப்பையும் முடித்து விட்டேன்.
பாதை மாறிய பயணம்
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. செவிலியர் துறையில் சேர விரும்பி, கல்லூரி சேர்க்கைக்கு முயன்றேன். ஆனால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில், டிப்ளோமா படிப்பில் சேர முடிவு செய்தேன். என் முதல் விருப்பம் ஆடை தொழில்நுட்பம் தான். ஆனால், எதிர்பாராதவிதமாக கணினி பொறியியல் பிரிவைத் தேர்வு செய்தேன். அது தான் எனக்கான வாழ்க்கை பாதையை அடைய எனக்கு உதவியது என்று அப்போது எனக்கு தெரியாது.
கல்லூரியின் முதல் ஆண்டு இணையவழியில் முடிந்துவிட்டது. இரண்டாம் ஆண்டில்தான் வழக்கமான வகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம்.
செவிலியர் கனவு முதல் கணினி துறை வரை
காலம் வேகமாக உருண்டோடியது. மூன்றாம் ஆண்டில், வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகள் தொடங்கின. எங்களுடைய துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து எங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான், என்னுடைய கல்லூரியின் முன்னாள் மாணவி ஆஷா கம்பராஜன் மூலம் டிசிகாப் பள்ளியை பற்றி தெரிந்து கொண்டேன். அவர் ஏற்கனவே அங்கு பயிற்சி பெற்று தற்போது அங்கு முழு நேர பணியில் இணைந்துள்ளார்.
அந்த முன்முயற்சியில் சேர எங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று அவர் எங்களை கேட்டார். என் நண்பர்கள் சிலர் தங்கள் பெயர்களை கொடுத்தார்கள். அதனால், நானும் என் பெயரை கொடுத்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் மேல் படிப்பு படிக்க விரும்புவதாகக் கூறி, வர மறுத்துவிட்டார்கள். நான் மட்டும் தனியாக சென்னைக்கு வந்து, என் உறவினர் வீட்டில் தங்கி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். நேர்முகத் தேர்வின் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விடுவேனோ என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கேதான் என் தொழில் வாழ்க்கை தொடங்கியது!
வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு
பல கனவுகளோடு டிசிகாப் பள்ளியில் என் முதல் நாளை தொடங்கினேன். எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சற்று தயக்கத்துடன் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். முதல் நாளில், எங்களுக்கு வரவேற்பு பொருட்களுடன் “சின்னஞ்சிறு பழக்கங்கள்” என்ற புத்தகம் கிடைத்தது. இது புதிதாகவும் சற்று மகிழ்ச்சியாகவும் இருந்தது. அப்போது நான் உணர்ந்தேன், “நாம் சரியான முடிவுதான் எடுத்துள்ளோம்” என்று.

நாங்கள் தொடங்கியபோது, பள்ளி பயிற்சியாளர் ஒரு புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அது ஒரு வார்த்தை உருவாக்கும் விளையாட்டு. எல்லோரும் ஒரு ஆங்கில வார்த்தையை சொல்வார்கள், அடுத்தவர் மற்றொரு வார்த்தையுடன் தொடர்புடைய ஒரு வார்த்தையைச் சொல்ல வேண்டும். அது மிகவும் வேடிக்கையாகவும், எனக்குப் புதியதாகவும் இருந்தது. இது எங்கள் சோர்வை போக்கி எங்களை பணிக்கு ஆயத்தப்படுத்தியது.
எங்கள் முதல் பணி ஒரு மின்னஞ்சல் கையொப்பத்தை (email signature) உருவாக்குவதுதான். அதை எவ்வாறு செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடன் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் லோகேஸ்வரா என்பவரிடம் உதவி கேட்டேன். அவரும் எனக்கு வழி காட்டினார். சில தவறுகள் செய்தாலும், அதை நான் முடித்தேன். எனது முதல் பணியை முடித்ததில் பெருமைப்பட்டேன்.
அதன் பிறகு, எல்லோரும் உள்நுழைவு தளத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டோம். இரண்டாம் நாளில், முந்தைய நாள் நடந்த எல்லாவற்றையும் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. நான் ஒரு சில நிகழ்வுகளை மறந்திருந்தேன். அப்போது தான் நாட்குறிப்பு எழுதுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் எங்களுக்கு விளக்கினார்கள். நாம் கற்பதை மறக்காமல் அவ்வப்போது நினைவுபடுத்த இது எனக்கு உதவியது. இன்றும் இதனை நான் கடைப்பிடித்து வருகிறேன்.
பின்னர் எங்களை மூன்று பேர் கொண்ட குழுக்களாக பிரித்தார்கள். எங்கள் குழுத் தலைவர் பாலாஜி. நாங்கள் அவ்வப்போது வேடிக்கை குணத்துடன் இருந்தாலும், எங்கள் பணிகளில் கவனம் செலுத்தினோம். இந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
கற்றலும் வளர்ச்சியும்
முதலில் நாங்கள் முன் இறுதி மொழிகளை கற்க தொடங்கினோம். அதன் முதலாக எச்.டி.எம்.எல் (HTML) நிரலாக்க கருத்துகளை கற்பதில் ஆரம்பித்தோம். வலைப் பக்கங்களை உருவாக்க இது ஒரு முக்கியமான மொழி என்பதை புரிந்து கொண்டேன். தலைப்புகள், பத்திகள், படங்கள் மற்றும் இணைப்புகள் போன்ற உள்ளடக்கத்தை ஒழுங்கமைக்க எச்.டி.எம்.எல் (HTML) குறிச்சொற்கள் உதவுகின்றன. இது இணையதளங்களின் அடிப்படை கட்டமைப்பாகும்.
எச்.டி.எம்.எல் (HTML) முடித்து சி.எஸ்.எஸ் (CSS) கற்கத் தொடங்கினோம். எச்.டி.எம்.எல் (HTML) மொழியை விட சி.எஸ்.எஸ் (CSS) சற்று சவாலாக இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல அது எளிதாகியது. இதனை கற்றுக் கொடுத்த பயிற்சியாளர் மிகவும் ரசிக்கும் படியாகவும், விளையாட்டு தனமாகவும் சி.எஸ்.எஸ் (CSS) கருத்துகளை கற்று கொடுத்தார்.
எனது பொதுத் தேர்வை நினைவுபடுத்தும் விதமாக இங்கு ஒரு மதிப்பீடு நடைபெற்றது. நாங்கள் இதுவரை கற்றுக்கொண்டதை சோதிக்க இது மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாங்கள் எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர இது உதவும். ஆரம்பத்தில் நான் பதட்டமாக இருந்தேன். ஆனால், அன்றைய நாளின் முடிவில் அதை நான் முடித்துவிட்டேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எங்களுக்கு எங்கள் மதிப்பெண்கள், கருத்துகள் மற்றும் ஒரு வாய்மொழித் தேர்வு நடந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இந்த கருத்துகளை வழங்கினார்கள்.
பின்னர் நாங்கள் ஜாவாஸ்கிரிப்ட் மொழியைக் கற்கத் தொடங்கினோம். இது வெறும் உரை மற்றும் படங்களைக் கொண்ட வலைப்பக்கங்களை, பயனர் ஈடுபாடுள்ள அனுபவங்களாக மாற்றுகிறது. இது இணைய உலகில் புதுமைகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை திறந்து விடுகிறது.
விளையாட்டு வடிவமைப்பு அனுபவம்
முன் இறுதி மேம்பாட்டிற்கு பிறகு, நாங்கள் விளையாட்டு வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் கவனம் செலுத்தினோம். நாங்கள் ஒரு பலகை விளையாட்டை உருவாக்க ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இதற்காக விளையாட்டு மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். இந்த செயல்முறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததுடன், விளையாட்டு உருவாக்குவது பற்றிய பல்வேறு கருத்துக்களையும் எனக்கு கற்றுக்கொடுத்தது.

நம் எண்ணத்தை ஆரம்ப நிலையிலிருந்து ஒரு முழுமையான தயாரிப்பாக மாற்றுவது எப்படி என்பதை இது எனக்கு கற்றுக்கொடுத்தது. பலகை விளையாட்டு உருவாக்குவதில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தோம். இரவு நேரங்களில் கூட யோசனை செய்தோம். இறுதியில், நானும் என் சக நம்பர் கோபிநாத் உடன் இணைந்து ஒரு விளையாட்டை உருவாக்கினேன். நாங்கள் உருவாக்கிய விளையாட்டை அனைவரும் ரசித்து விளையாடினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
செயல்திறன் பயிற்சி அனுபவம்
இதுவரை நாங்கள் கற்றுக் கொண்டதை வைத்து ஒரு செயல்திறன் திட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். டிசிகாப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். நாங்கள் “கோலாப்நெஸ்ட்” என்னும் திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினோம், ஆரம்பத்தில் என்ன செய்வது என்று கண்டுபிடிக்க சிரமப்பட்டோம். எங்கள் வழிகாட்டியின் உதவியுடன் அதை மெல்ல செயல்படுத்த ஆரம்பித்தோம்.
இந்த செயல் திட்டத்திற்காக நாங்கள் பி.எச்.பி (PHP) மற்றும் லாராவெல் (Laravel) தொழில்நுட்பத்தை கற்க வேண்டியிருந்தது. அதனை கற்று எங்கள் திட்டத்தை கற்பனையில் இருந்து செயல்முறைக்கு எடுத்து சென்றோம். நான் முன்னர் விளையாட்டு வடிவமைப்பு நேரங்களில் கற்றவை அப்போது எனக்கு உதவிகரமாக இருந்தது. எங்கள் திட்டத்தை பள்ளி குழுவினரிடம் விளக்கினோம். பின்னர் எங்களுக்கு வேலை பயிற்சிக்கான நேர்காணல் நடைபெற்றது.

அடுத்து என்ன கற்க போகிறோம் என்பதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பி.எச்.பி (PHP) மற்றும் பைதான் (Python) ஆகிய இரண்டு மொழிகளையும் நான் கற்றிருப்பதால், என் திறன் மீது எனக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு வருட பயணத்தை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஆரம்பத்தில் மின்னுஞ்சல் கையொப்பத்தை உருவாக்க போராடிய நான் தற்போது ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறேன் என்பதை எண்ணும் போது எனக்கு பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
இதன் பின்னர் வாழ்வில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நம்பிக்கையை, இந்த ஒரு வருட பயிற்சி எனக்கு அளித்துள்ளது. இன்னும் வரவிருக்கும் நாளில் பல புதுமைகளை படைக்க காத்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பள்ளி குழுவினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.