
அனைவருக்கும் வணக்கம். நான் சேவாக் குமரேசன். சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் இருந்து வருகிறேன். இந்த வலைப்பதிவின் மூலம், என் வாழ்க்கை பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
தற்போது நான் டிசிகாப் பள்ளியில் மென்பொருள் பயிற்சி பெற்று வருகிறேன். நான் எவ்வாறு டிசிகாப் பள்ளியில் இணைந்தேன் என்பதை பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னர் என் இளவயது வாழ்க்கை பற்றிய சிறு விவரங்கள்.
இளமை பருவ வாழ்க்கை
என்னுடைய இள வயது பள்ளி வாழ்க்கையை ஒரு பொற்காலம் என்றே கூறலாம். ஆனால், மகிழ்ச்சியான தருணங்கள் வேகமாக செல்லும் என்பதை போல, என் பள்ளி நாட்களும் வெகு விரைவாக சென்றது. ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.
முதல் மேடைப் பேச்சு, ஆசிரியர் தின நாடகம், நண்பர்களுடன் ஆட்டம், கோ-கோ போட்டி என என் பள்ளி வாழ்க்கை மறக்க முடியாத பல அற்புதமான நினைவுகளால் நிறைந்துள்ளது.
கல்லூரி வாழ்க்கை
பத்தாம் வகுப்புக்குப் பிறகு, எனக்காக ஒரு பெரிய திருப்பம் காத்திருந்தது. நான் ஐடிஐ (ITI) பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். இங்கு சேர்வதற்கு முன்னர் அது நமக்கு சரியாக இருக்குமா என்று சிந்திக்காமல் சேர்ந்துவிட்டேன். அதனால், என் வாழ்க்கையில் இரண்டு வருடங்களை நான் வீணாக்கினேன். இது தொடர்ந்தால் என் வாழ்க்கை எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் என்பதை புரிந்து கொண்டு, நான் தைரியமாக ஒரு முடிவெடுத்தேன். ஐடிஐ (ITI) பயிற்சியை விட்டுவிட்டு, தொழில்நுட்ப துறைக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்தேன்.
அதற்காக டிப்ளமோ படிப்பை படிக்க முடிவு செய்தேன். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படிப்பது சற்று கடினமாக தான் இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சியோடு உழைத்தேன். அங்குள்ள ஆசிரியர்களும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்கள். கடின உழைப்புடன் எல்லா தேர்வுகளையும் வெற்றிகரமாக கடந்து, 82 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்தேன்.
அடுத்தது என்ன?
கல்லூரியின் இறுதி நாட்களில், அடுத்து என்ன செய்வது என்று நான் குழப்பத்தில் இருந்தேன். அப்போது தான் எங்கள் கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மூலம் டிசிகாப் பள்ளியை பற்றி தெரிந்துகொண்டேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நேர்காணலுக்கு விண்ணப்பித்து, அதில் பங்கேற்றேன்.

முதலில் தகுதி சுற்று. அதில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டாவது சுற்றில், ஒரு தொழில்நுட்ப நேர்காணல் நடந்தது. நான் பதட்டமாக இருந்தேன். இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினேன். மூன்றாவது மனிதவள சுற்று. நான் அவர்களுடன் பேசும் போது, என் மனதில் தோன்றியதை சுதந்திரமாக பேச முயற்சித்தேன். எல்லா சுற்றும் முடிந்த பின்னர், தேர்ந்தெடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
கடந்த ஒரு வருடத்தில், நான் டிசிகாப் பள்ளியில் கற்றுக்கொண்டதை தற்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நிரலாக்க உலகின் ஆரம்பம்
கற்றல் பயணத்தில், நான் முதலில் அடி எடுத்து வைத்தது எச்.டி.எம்.எல் (HTML) உலகில். ஒரு இணையப் பக்கத்தின் உள்ளடக்கத்தை எப்படி கட்டமைப்பது, தகவல்களை எப்படி அடுக்கி வைப்பது என்பதை இது எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆரம்பத்தில் குறியீட்டு கருத்துகளை புரிந்து கொள்வதில் சில சவால்களை நான் சந்தித்தேன். இருப்பினும், பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலுடன், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன, ஒரு வலைப்பக்கத்தின் அடிப்படை கட்டமைப்பை எச்.டி.எம்.எல் (HTML) மூலம் உருவாக்குவதைப் புரிந்துகொண்டேன்.

அடுத்ததாக சி.எஸ்.எஸ் (CSS) மொழியை கற்றுக்கொண்டேன். எச்.டி.எம்.எல் (HTML) ஒரு பக்கத்தின் உள்ளடக்கத்தை வடிவமைக்க உதவுவது போல், சி.எஸ்.எஸ் (CSS) அந்தப் பக்கத்தை அழகு படுத்த உதவுகிறது. ஒரு வலைப்பக்கத்தில் காட்சி வடிவமைப்பது, எழுத்துருக்களை மாற்றுவது, தளவமைப்பை ஒழுங்குபடுத்துவது போன்ற பல விஷயங்களை சி.எஸ்.எஸ் (CSS) மூலம் நான் தெரிந்துகொண்டேன். இது வலைப்பக்கத்திற்கு அழகியல் தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அடுத்து, நான் ஜவாஸ்கிரிப்ட் (JavaScript) மொழியை கற்கத் தொடங்கினேன். முதலில் மாறும் மதிப்புகள் (variables), தரவு வகைகள் (data types), வரிசைகள் (arrays), மற்றும் பொருட்கள் (objects) போன்ற எளிய கருத்துக்களைப் புரிந்து கொண்டேன். பிறகு, அடிப்படை தர்க்க சிக்கல்களைத் தீர்ப்பது, ஆவணப் பொருள் மாதிரிகளை (Document Object Model) கையாள்வது போன்ற பணிகளை பயிற்சியாளர்கள் உதவியுடன் செய்து முடித்தேன். அஜாக்ஸ் (Ajax), பொருள் சார்ந்த நிரலாக்கம் (Object-Oriented Programming), மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interfaces) போன்ற மேம்பட்ட கருத்துகளையும் கற்றுக்கொண்டேன்.
அடுத்து, நான் எஸ்.கியூ.எல் (SQL) உலகிற்குள் நுழைந்தேன். தரவுத்தளங்களை நிர்வகிப்பது, தகவல்களைச் சேமிப்பது, தேடுவது, மீட்டெடுப்பது போன்ற அம்சங்களை எஸ்.கியூ.எல் (SQL) எனக்குக் கற்றுக் கொடுத்தது.
விளையாட்டு மேம்பாடு
இந்தத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, எங்களுக்கு விளையாட்டு மேம்பாடு மற்றும் வடிவமைப்பு பற்றிய வகுப்புகள் நடைபெற்றது. ஒரு விளையாட்டை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள முழுமையான செயல்முறையை நாங்கள் கற்றுக்கொண்டோம். நான் எனது சக ஊழியருடன் இணைந்து ஒரு பலகை விளையாட்டை உருவாக்கத்தில் ஈடுபட்டேன். எங்கள் விளையாட்டை பல முறை சோதித்து, அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என ஆய்வு செய்து, எங்கள் யோசனைகளைச் செம்மைப்படுத்தினோம். இந்த செயல்முறை, ஒரு விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் தெளிவாக சிந்தித்து, ஆராய்ச்சி செய்து, அதை ஒரு யதார்த்தமான தயாரிப்பாக மாற்றுவதற்கு எவ்வாறு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது. இது ஒரு தனித்துவமான கற்றல் அனுபவமாக அமைந்தது. மேலும் குழுப்பணி, சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் எனது திறன்களை மேம்படுத்தியது.

குழு செயல்திட்டம்
பிறகு நாங்கள் குழுவாக இணைந்து ஒரு செயல்திட்டத்தில் பணிபுரிந்தோம். திட்டத்தை ஒருங்கிணைக்க எங்களுக்கு ஒரு வழிகாட்டி இருந்தார். இந்தத் திட்டத்திற்காக பைதான் (Python) மற்றும் ஜாங்கோ (Django) கட்டமைப்பையும் கற்றுக்கொண்டோம்.
நாங்கள் ஒரு நவீன நகர செயல் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தோம். இது பொதுமக்களுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். நகரத்தில் அல்லது தெருக்களில் ஏதேனும் பொதுப் பிரச்சனை ஏற்பட்டால், பொதுமக்கள் அதைத் தீர்க்க சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்கும் வகையில் ஒரு வலைத்தளத்தை நாங்கள் உருவாக்கினோம்.
இந்தத் திட்டத்தில், பயனர் இடைமுகம் (UI) மற்றும் பயனர் அனுபவம் (UX) வடிவமைப்பதும், பயனர் பதிவுப் பக்கத்தை உருவாக்குவதும் எனது முக்கியப் பணியாக இருந்தது. பயனர்கள் எளிதாக உள் நுழையும் வகையில் பயனர் இடைமுகத்தை (UI) உருவாக்க நான் முயற்சித்தேன். சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ஒரு திட்டத்தில் பங்கெடுத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டோஸ்ட்மாஸ்டர்
டோஸ்ட்மாஸ்டர் என்பது மேடை பேச்சு மீது எங்களுக்கு இருக்கும் பயத்தை போக்கி, சரளமாக எந்தவித தயக்கமும் இன்றி, நாம் கூற நினைப்பதை தெளிவாக வெளிப்படுத்த உதவும் ஒரு களமாகும். பல மேடைப்பேச்சு போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், என்னை பேசும் படி அழைத்தால் நான் பதட்டம் அடைவேன். அதை போக்க டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகள் எனக்கு பெரிதும் உதவியது. டோஸ்ட்மாஸ்டர் அமர்வுகளில் அனைவருக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்படும். அந்த பாத்திரங்களில் பங்கேற்றது மூலம் நான் பலவற்றை கற்றுள்ளேன்.
தொழில்முறை அமைப்புகளில், வெளி இடங்களில், நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், குறுகிய நேரத்தில் எவ்வாறு நாம் கூற நினைப்பதை வெளிப்படுத்துவது என எல்லாவற்றையும் இது எனக்கு கற்றுக்கொடுத்தது.
டிசிகாப் பள்ளி திட்டத்தில் நான் தொழில்நுட்ப, தொழில்துறை மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு திறன்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். இது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்ததுடன், புதிய கற்றல் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இந்தப் பயணத்தில், எனது திறமைகளை மேலும் மேம்படுத்த பல ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பெற்றேன். பள்ளியில் நான் பெற்ற இந்த ஒரு வருட அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக என்றென்றும் நிலைத்திருக்கும். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பள்ளி குழுவினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.