என் பெயர் வந்தனா கும்ப சோமநாதன். நான் மதுரையில் இருந்து வருகிறேன். ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலையால் என்னால், பதினோராம் வகுப்பை தொடர முடியவில்லை. ஆகையால், மதுரையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில், கணினி டிப்ளோமா படிப்பை தேர்ந்தெடுத்தேன். பின்இறுதி மேம்பாட்டு (Backend Development) துறையில் பணிபுரிய வேண்டும் என்பது எனது ஆசை, அதனால் தான் கணினி துறையில் டிப்ளோமா படித்தேன்.
கல்லூரி அனுபவம்
மூன்று வருட கல்லூரி படிப்பின் போது, கணினி சார்ந்த பலவற்றை நான் கற்றுக்கொண்டேன். என்னை ஊக்குவிக்கும் பல நண்பர்களும் கிடைத்தனர். நாங்கள் அனைவரும் எப்போதும் ஒன்றாக தான் படிப்போம். எனக்குத் தெரிந்ததை நான் அவர்களுக்குக் கற்பிப்பேன், எனக்குப் புரியாத கருத்துக்களை அவர்கள் எனக்குக் கற்பிப்பார்கள். இதனால் நான் கல்லூரியில் சிறந்த மதிப்பெண்களை பெற்றேன். அனைத்து தேர்வுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 96.2% சதவீத மதிப்பெண்ணை பெற்றேன். கல்லூரி நாட்கள் எனக்கு சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது. கல்லூரியின் கடைசி ஆண்டின் போது பல்வேறு நிறுவனங்கள் எங்கள் கல்லூரிக்கு நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். அப்போது டிசிகாப் பள்ளியில் இருந்தும் வந்திருந்தார்கள்.
டிசிகாப் பள்ளி நடத்திய நேர்காணலில் பதிமூன்று பேர் கலந்துகொண்டனர். அதில் நானும் என் சகோதரியும் கலந்துகொண்டோம். மூன்று சுற்றுகளுக்கு பின்னர், எங்கள் கல்லூரியிலிருந்து எட்டு பெறை தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் என் சகோதரியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது. ஒரு வழியாக எனக்கு பிடித்த துறையில் சேர போகிறோம் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. முதலில் சற்று தயங்கினாலும், பின்னர் எங்கள் பெற்றோரும் எங்களை ஆதரித்து, சென்னைக்கு செல்ல அனுமதித்தார்கள். பல கனவுகளோடு சென்னையை நோக்கி நான் புறப்பட்டேன்.
கனவுகளை தேடி ஓர் பயணம்
டிசிகாப் பள்ளியுடன் எனது பயணத்தைத் தொடங்க நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஜூலை 17, 2023 அன்று டிசிகாப் பள்ளி தொடங்கியது. முதல் நாளில் டிசிகாப் பள்ளியின் கலாச்சாரத்தை பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்ற அவர்களது எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் மற்றவர்களுடன் பேசுவதற்கு நான் தயங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தயக்கத்தை போக்கி அனைவருடனும் பேச ஆரம்பித்தேன். ஒரு ஊழியர் போல் இல்லாமல், நாங்கள் அனைவரும் நண்பர்கள் போல் பழகினோம். முதல் சில நாட்கள், பணியிடத்தில் எவ்வாறு நடந்துகொள்வது, பணிகளை எவ்வாறு திட்டமிடுவது, மின்னுஞ்சல் அனுப்புவது, எங்கள் கணக்குகளை உருவாக்குவது போன்ற அடிப்படை செயல்களை செய்துகொண்டிருந்தோம். எனது கனவுகளை நோக்கிய பயணம் இப்போது தொடங்கியது.
நிபுணர்களுடன் கற்றல்
நாளுக்கு நாள் டிசிகாப் நிறுவனத்தின் உழியர்கள் எங்களுக்கு வலை மேம்பாட்டை பற்றி கற்றுத்தர ஆரம்பித்தார்கள். இந்த துறையில் அவர்களுக்கு நிபுணத்துவம் இருந்ததால், எளிதாக எங்களுக்கு புரியும்படி அவர்கள் கற்றுதந்தனர். முதல் இரண்டு மாதங்கள் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) மொழியை பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம். ஆரம்பத்தில் நிரலாக்க கருத்துகளை புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சியோடு அதனை எதிர்கொள்ள ஆரம்பித்தேன். சுயகற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தேன். இது எனக்கு ஓர் புதிய அனுபவமாக இருந்தது. பின்னர் நாங்கள் கற்றுக்கொண்டதை பரிசோதிக்க எங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் நான் எங்கு என்னை மேம்படுத்த வேண்டும் என்று நான் தெரிந்துகொண்டேன்.
அதன் பிறகு நாங்கள் வலை வடிவமைப்பை பற்றி, கற்க ஆரம்பித்தோம். இதனுடன் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மொழி பற்றியும் தெரிந்துகொண்டோம். அடுத்த நான்கு மாதங்களில் நான் வடிவமைப்பு மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) இரண்டையும் முழுவதுமாக கற்று, அதில் எனது அறிவை மேம்படுத்திக்கொண்டேன். இதுவரை நாங்கள் கற்ற அனைத்தையும் வைத்து ஒரு நிகழ்நேர செயல்திட்டத்தை மேற்கொண்டோம்.
பின்இறுதி மேம்பாடு
பின்இறுதி மேம்பாட்டை கற்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை, எனவே அதனை கற்க தொடங்கும் போது நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன். மை.எஸ்.க்யூ.எல் (MySQL) என்ற தரவுத்தள மேலாண்மை அமைப்பை பற்றி கற்பதில் இருந்து தொடங்கி, அதன் அடிப்படைகளை கற்ற பின்னர், பி.எச்.பி (PHP) மொழியை தொடங்கினோம். பி.எச்.பி (PHP) மொழியானது ஒரு கடல் போல் பறந்து விரிந்திருந்தது. அதன் கட்டமைப்பை புரிந்துகொள்ள நான் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் பள்ளிக்கு வந்ததில் இருந்து எனக்கு ஒன்று புரிந்தது, சரியான அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இருந்தால், எதையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். பி.எச்.பி (PHP) சவாலானதாக இருந்தாலும், அதைப் புரிந்துகொள்ள கடினமாக உழைத்தேன். பயிற்சி செய்ய செய்ய அது எளிதாக மாறியது. பின்னர் பி.எச்.பி (PHP) மொழியில் உள்ள பொருள் சார்ந்த நிரலாக்க கருத்துகளை (OOPS) கற்றுக்கொண்டோம். பின்இறுதி மேம்பாட்டில் எங்களை பரிசோதிக்க தேர்வை நடத்தினர். முன்னர் கூறியது போல் இது நான் எங்கு என்னை மேம்படுத்த வேண்டும் என்பதை அறிய உதவியது.
வெளிநிகழ்வு மற்றும் செயல்திட்டம்
எங்கள் பயிற்சி காலத்தின் கடைசி இரண்டு மாதங்களில், முழுஅடுக்கு வலை மேம்பாட்டில் நாங்கள் ஒரு செயல்திட்டத்தை செய்தோம். இது எவ்வாறு முன்இறுதி மற்றும் பின்இறுதி மேம்பாட்டை ஒன்றாக இணைப்பது என்று எங்களுக்கு புரியவைத்து. பயிற்சி மற்றும் முயற்சி இது இரண்டும் ஒன்றினைந்தால் தான் வெற்றியை அடைய முடியும் என்று இந்த செயல்திட்டம் எனக்கு புரியவைத்து. பள்ளியில் எங்களை வெளி நிகழ்வுகளுக்கு செல்ல ஊக்குவித்தார்கள். ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வு, பிரௌசர் ஸ்டாக் (BrowserStack) நிகழ்வு, கணித்தமிழ் மாநாடு, புத்தக கண்காட்சி என பல வெளிநிகழ்வுகளுக்கு நான் எனது பள்ளி நண்பர்களுடன் சென்றுள்ளேன். அங்கு புதிதாக பலவற்றை கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், புதிய நபர்களின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது. இது எல்லாம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
தற்போது ஒரு வருட பயிற்சியை முடித்து வேலை பயிற்சியில் இணைந்துள்ளேன். இந்த ஒரு வருடத்தில் என்னிடம் பல மாற்றங்களை நான் கண்டுள்ளேன். பல புதிய நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளனர், புதிய கருத்துகள் பல கற்றுள்ளேன். வலை மேம்பாட்டை தாண்டி வாழ்க்கைக்கு தேவையான பல திறன்களை நான் இங்கு வளர்த்துக்கொண்டேன். புத்தகம் வாசிப்பது, வலையோலிகளை கேட்பது, சிறுகதைகள் எழுதுவது, அனைவரின் முன்னால் நின்று பேசுவது, என்று என்னை மேம்படுத்தும் அனைத்தையும் இங்கு செய்ய ஆரம்பித்தேன்.
தொழில்ரீதியாக, முன்-இறுதி மற்றும் பின்இறுதி மேம்பாடு இரண்டிலும் எனது நிபுணத்துவத்தை வளர்த்துள்ளேன். முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன், மேலும் முக்கியமாக பணியிடத்தில் நடந்துகொள்ளும் பண்பு மற்றும் சிறந்த நடைமுறைகளையும் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனது வாழ்க்கையில் வரவிருக்கும் சவால்களுக்கு எதிர்கொள்ள என்னை தயார்படுத்தியுள்ளது. இந்த பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.