முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
வாழ்வில் அனைவரும் வெற்றியை தேடி ஓடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை முயற்சி செய்தால் போதும் வெற்றி அவர்களை தேடி வரும் என்று. முயற்சியின் முக்கியத்துவத்தை என் பயணத்தில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என் பெயர் வர்ஷிதா கும்ப சோமநாதன், நான் எவ்வாறு டிசிகாப் பள்ளியில் இணைந்தேன் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாருங்கள்.
பள்ளி நேர்காணல்
ஒரு முறை என் கல்லூரிக்கு டிசிகாப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் நேர்காணலுக்காக வந்திருந்தார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது, என் நண்பர்களுடன் நானும் நேர்காணலில் கலந்துக்கொண்டேன். பிறகு அவர்கள் பள்ளியை பற்றியும் நேர்காணல் செயல்முறை பற்றியும் கூறினார்கள், நேர்காணல் மூன்று கட்டமாக நடைபெற்றது.
நேர்காணல் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயரை வாசித்தார்கள். அதில் என் பெயரும் வந்தது, அத்தருணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாது. நேர்காணலில் நானும் என் இரட்டைச் சகோதரி வந்தனாவும் தேர்ச்சிப்பெற்றோம். இந்த செய்தியை எங்கள் பெற்றோரிடம் கூறினோம். ஆரம்பத்தில் எங்களை சென்னைக்கு அனுப்புவதற்கு அவர்கள் தயங்கினார்கள். இந்த வாய்ப்பில் உள்ள நன்மைகளை புரிந்துகொண்டு பிறகு நாங்கள் செல்வதற்கு அனுமதித்தார்கள்.
மாற்றம் தந்த பயணம்
ஜூலை 15, இரவு 9.30 மணிக்கு மதுரையிலிருந்து நாங்கள் சென்னைக்கு புறப்பட்டோம். மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் சென்னையை வந்தடைந்தோம். இதுதான் சென்னைக்கு நான் வருவது முதல் முறை, என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க நான் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். ரயில் நிலையத்தில் இருந்து நாங்கள் டிசிகாப் நோக்கி சென்றோம். சிறிது நேரத்தில் நாங்கள் டிசிகாப் பள்ளியை அடைந்தோம். அப்போது எனக்கு வானில் பறப்பது போல் இருந்தது, அந்த மகிழ்ச்சியோடு அருகில் இருந்த தங்கும் விடுதிக்கு சென்று சற்று இளைப்பாறினோம்.
பள்ளியும் நானும்
ஜூலை 17-ஆம் தேதி பள்ளியில் எனது முதல் நாளை நான் தொடங்கினேன். எங்களுக்காக காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் பள்ளியை பற்றி அறிமுகம் கொடுத்தார்கள். அடுத்த ஒரு வருடத்தில் நாங்கள் என்ன கற்றுக்கொள்ள போகிறோம், இந்த திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது போன்றவற்றை கூறினார்கள். நாங்கள் எங்களை அறிமுக படுத்திக்கொண்டோம்.
எங்களுக்கு மடிக்கணினி, புத்தக பை மற்றும் சின்னஞ்சிறு பழக்கங்கள் (Atomic Habits) என்ற புத்தகத்தை வழங்கினார்கள். அந்த நாள் மடிக்கணினி அமைப்பதற்கும், அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்டோம். மாலையில் என் குடும்பத்தினருடன் பூங்காவிற்கு சென்று அன்று நடந்தவற்றை பற்றி என் பெற்றோரிடம் கூறினேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
டிசிகாப் பள்ளிக்கு வந்த பிறகு என்னிடம் நான் பல மாற்றங்களை பார்க்கிறேன். எனது கல்லூரி நாட்களில் பாடம் சார்ந்த புத்தகங்களை மற்றுமே நான் படித்திருக்கிறேன், வாழ்வை மேம்படுத்தும் புத்தகங்களை நான் படித்ததில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகு அதற்கும் முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இது எனக்கு புரியாத ஒன்றாக தான் இருந்தது, எதற்காக இந்த புத்தகங்களை படிக்க சொல்கிறார்கள் என்று நினைத்தேன், இருந்தாலும் அதை முயற்சி செய்ய நினைத்து தினமும் சில பக்கங்களை படித்தேன்.
பிறகு தான் அவர்கள் எதற்காக அதை சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். இப்போதெல்லாம் புத்தகங்களை படிக்கவில்லை என்றால் அந்த நாளே எனக்கு நிறைவாக இருப்பதில்லை. படிக்கும் பழக்கத்தோடு எழுதும் பழக்கமும் எனக்குள் வளர தொடங்கியது. ஒரு திறமையான இணைய மேம்பாலராக வேண்டும் என்றால் நிரலாக்க திறன் மற்றும் போதாது, தலைமைத்துவம், பேச்சுத்திறன், படைப்பாற்றல் போன்ற பல திறனும் முக்கியம் என்று எங்களுக்கு உணர்த்தினர்.
கடினமான நேரங்கள்
வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக செல்வதில்லை, சில நேரங்கள் அது நமக்கு பல சவால்களை அளிக்கிறது. பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்கள் முடித்த நிலையில், நானும் பல சவால்களை எதிர்கொண்டேன். எனக்கு சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, தங்கும் விடுதியிலும் சில பிரச்சினைகள் இருந்தது, இதுதவிர எனக்கு காலில் காயமும் ஏற்பட்டது. நான் மிகுந்த குழப்பமான நிலையில் இருந்தேன், எதற்காக பள்ளிக்கு வந்தோம், இங்கு இருப்பதால் நமக்கு என்ன பயன் போன்ற கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
இதற்கான பதிலும் எனக்கு உடனே கிடைத்தது, இங்கு வந்தபிறகு தான் என் மீதும் எனது திறமையின் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இங்கு வருவதற்கு முன்பு நான் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது. எனது உறவினர்களுக்கும் என்னை பிடித்ததில்லை. ஆனால், இங்கு வந்தபிறகு அவர்கள் எல்லோருக்கும் முன்னிலையில் சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஓங்கியிருக்கிறது.
என்னுள் இந்த மாற்றம் ஏற்பட முக்கிய காரணம் டிசிகாப் பள்ளி தான், என்னுடைய திறமையை வெளிக்கொணர உதவியவர்கள் இவர்கள்தான். இங்கே அவர்கள் எங்களை மாணவர்களாகப் பார்க்காமல் நண்பர்களாகவும் குடும்பத்தினராகவும் பார்க்கிறார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகை வந்தாலும் குடும்பத்தினருடன் கொண்டாடுவது போல நாங்கள் இங்கு ஒன்றாக கொண்டாடினோம்.
என்ன கற்றுக்கொண்டேன்?
முழு அடுக்கு வலை மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து திறனையும் நான் பள்ளியில் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் நாங்கள் எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS), ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) போன்ற நிரலாக்க மொழிகளை கற்றுக்கொண்டோம். என்னதான் நான் கணினி துறையில் படித்திருந்தாலும் நிரலாக்கம் குறித்த முழு புரிதல் அப்போது என்னிடம் இல்லை, நிரலாக்கத்தை பயன்படுத்தி வலைதளங்களை உருவாக்குவார்கள் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும், நிரலாக்கம் என்பது கடினமான ஒன்று என்று பலரும் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன். வெறும் ஒரு வருடத்தில் இது அனைத்தையும் எவ்வாறு கற்றுக்கொள்வது என்று நான் நினைத்தேன், ஆனால் சரியான வழிகாட்டுதல் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்இறுதி மொழிகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதை முடித்ததும் பின்இறுதி மொழிகளுக்கு சென்றோம், ஆனால் அது எனக்கு சரியாக வரவில்லை. முன்இறுதி மொழிகளை கற்பதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது, பின்இறுதி மொழிகளை கற்கும் போது நான் மிகவும் சோர்வுற்றேன். இந்த நேரத்தில் பள்ளி குருவின் வழிகாட்டுதலும் உத்வேகமும் எனக்கு ஊக்கத்தை அளித்தது. அந்த உத்வேகத்துடன் நான் மீண்டும் கற்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் எனது பயணம் மிகவும் சுவாரஸ்யமாக மாறியது. இணையதளத்தை உருவாக்கும் போதும், குறியீட்டை எழுதும் போதும் அதை நான் மிகவும் ரசித்து செய்தேன்.
எதிர்காலத்தை நோக்கி
பல சமயங்களில், நான் தாழ்வாக உணர்ந்துள்ளேன், அந்த சமயங்களில், பள்ளி நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் நான் பெற்றேன். பள்ளியில் வழங்கப்பட்ட பயிற்சி எங்கள் குறியீட்டு திறன்களை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு தொழில்முறை இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதையும் கற்றுக்கொடுத்து. தற்போது எனது கேட்கும் திறன், எழுதும் திறன், வாசிப்புத் திறன் மற்றும் குறியீட்டு திறன் ஆகியவை பெரிய அளவில் மேம்பட்டுள்ளன.
ஒரு வருட பயிற்சியை முடித்து நான் இப்போது வேலை பயிற்சியில் இணைத்துள்ளேன், எனது திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ளவும், இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்ளவும் நான் காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்த எனது பெற்றோர், பள்ளி பயிற்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பயணம் இப்போது தான் தொடங்கியது போல் உள்ளது, அதற்குள் ஒரு வருடத்தை கடந்துவிட்டேன். இது வெறும் தொடக்கம் தான், இன்னும் வாழ்வில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் எப்போதும் முயற்சி செய்வதை மட்டும் நான் கைவிடமாட்டேன், நன்றி!
முதலில் கஷ்டம் வந்தாலும்
இரண்டாவது வெற்றியும் தொடர்ந்து
வரும்… என்பது தான் உண்மை
இன்றைய சோதனை நாளைய சாதனை..