வாழ்வில் வாய்ப்பு என்பது ஒரு முறை தான் கிடைக்கும் என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம், அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என் பின்னணி
வணக்கம் என் பெயர் வீணா வேல்முருகன், சென்னையை அடுத்துள்ள ஆவடி தான் எனது சொந்த ஊர். வள்ளல் சபாபதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எனது பள்ளிப் படிப்பை முடித்தேன். சிறு வயது முதலே எனக்கு கணினி மீது ஆர்வம் அதிகமாக இருந்தது, அதனால் பதினொன்றாம் வகுப்பில் கணினி பிரிவை தேர்ந்தெடுத்தேன். கணினி தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்துகொள்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக பயின்று, அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட்டேன். கணினி பாடத்தில் நான் அதிக மதிப்பெண் பெற்றேன், இதனால் கணினி துறையில் பயில வேண்டும் என்று நினைத்தேன்.
மாற்றம் தந்த சந்திப்பு
நான் தினமும் பள்ளிக்கு பேருந்தில் செல்வது வழக்கம், அவ்வாறு ஒரு நாள் நான் பேருந்தில் செல்கையில் எனது தோழி சந்தியாவை சந்தித்தேன். அவள் டிசிகாப் பள்ளி என்னும் பயிற்சி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறினாள். டிசிகாப் பள்ளியா? அப்படி என்றால் என்ன? என்று நான் கேட்டேன். அதற்கு டிசிகாப் பள்ளியை பற்றி அவள் கூறினாள். இது எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. எனது பெற்றோரும் டிசிகாப் பள்ளியில் சேருமாறு என்னிடம் கூறினார், அவர்களின் அறிவுரைப்படி மற்றும் சந்தியாவின் உதவியோடு நான் டிசிகாப் பள்ளி நேர்காணலில் கலந்துகொண்டு அதில் தேர்ச்சியும் பெற்றேன்.
ஒரு புதிய அத்தியாயம்
2023 July 17 ஆம் நான் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன். முதல் நாளில் எங்களை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். ஆனால் சில காரணங்களால் என்னால் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை, 10 மணிக்கு தான் நான் அலுவலகத்திற்கு சென்றேன். இதனால் நான் சற்று பதட்டமாக இருந்தேன். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் என்னை கண்டதும் அமர சொன்னார்கள், நேர்காணலில் என்னுடன் இருந்த என் நண்பர் என் அருகில் இருந்தார், அது எனக்கு ஆறுதலாக இருந்தது.
சற்று நேரம் கழித்து அனைவரின் முன்நின்று என்னை அறிமுகப்படுத்த சொன்னார்கள், நான் வருவதற்கு முன்னரே அனைவரும் அவர்களை அறிமுக படுத்திகொண்டனர். இப்போது நான் தனியாக பேச வேண்டும் என்ற எண்ணம் என்னை பயமுறுத்தியது, இருந்தாலும் என்னை பற்றி சில விசயங்களை நான் பகிர்ந்து கொண்டேன். சிறிது நேரம் பின்னர் எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் நான் கணினி பிரிவில் படித்தேன் ஆனாலும் நான் மடிக்கணினியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஆகவே அடிப்படை அமைப்புகளை அமைக்க என் நண்பரிடம் உதவி கேட்டேன். பின்னர் எங்கள் பணிக்கான கணக்குகளை உருவாக்கினோம்.
இங்கிருந்து பலரும் கணினி சார்ந்த படிப்பினை முடித்திருந்தனர், மூன்று பேர் மட்டும் தான் தொழில்நுட்பம் சாராத பின்னணியில் இருந்து வந்திருந்தோம். நான் மற்றவர்களுடன் அதிகமாக பேச மாட்டேன், இதனால் முதல் சில நாட்கள் நான் யாருடனும் பேசவில்லை. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தேன். எங்களில் பயணம் நாட்குறிப்பு (Journal) எழுதுவதில் இருந்து தொடங்கியது. இது எங்களின் எழுதும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டது. பின்பு பணியிடத்தில் எவ்வாறு நடந்துகொள்வது, தொழில்முறை மின்னஞ்சலை எவ்வாறு அனுப்புவது, மற்றும் சில இணைய கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்றுகொடுத்தார்கள்.
பள்ளியின் சிறப்பம்சம்
டிசிகாப் பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால், தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் எங்களுக்கு நேரடியாக பயிற்சி அளித்தனர், இதனால் தொழில்நுட்ப கருத்துகளை எங்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. முதல் இரண்டு மாதங்களில் நாங்கள் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்க ஆரம்பித்தோம். கடினமாக இருந்தாலும் புதிதாக ஒன்றை கற்றுகொள்வதால் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அடுத்ததாக ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மற்றும் வடிவமைப்பில் நாங்கள் கவனம் செலுத்தினோம். ஆரம்பத்தில் இதை புரிந்துகொள்வதற்கு நான் சிரமப்பட்டேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் அதை கற்க தொடங்கினேன், ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மற்றும் வடிவமைப்பு இரண்டிலும் நான் நன்றாக செயல்பட்டேன், மற்றும் தர்க்கரீதியான சிந்தனை (Logical Thinking) திறனையும் வளர்த்துக்கொண்டேன்.
ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) மற்றும் வடிவமைப்பு இரண்டிலும் மதிப்பீடு தேர்வு நடத்தினர், அதில் நான் சிறப்பாக செயல்பட்டேன். தேர்வு முடிந்ததும் நாங்கள் ஒரு செயல்திட்டத்தை தொடங்கினோம். நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் செயல்படுத்தி பார்க்க இது உதவியது. என் தொழில்நுட்ப அறிவை விரிவுபடுத்த இது உதவியது, அதனுடன் என்னுடைய தலைமைத்துவ திறன் மற்றும் தகவல் தொடர்பு திறனையும் வளர்க்க முடிந்தது. ஆறு மாதங்களுக்கு பின்னர் பின் இறுதி மேம்பாட்டை நாங்கள் கற்க தொடங்கினோம். அடிப்படைகளை கற்ற பிறகு மை.எஸ்.க்யூ.எல் (MySQL) மற்றும் பி.எச்.பி (PHP) மொழியை பயின்றோம். இதன் பிறகு அதில் மதிப்பீடு தேர்வு வைத்தார்கள், நான் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடத்தை அறிந்துகொள்ள இது எனக்கு உதவியது.
எதிர்காலத்திற்கான முதல் படி
முதல் வருட பயிற்சி முடிவடையும் தருவாயில் எங்களுக்கு கடைசி மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டது, இது முன்இறுதி மற்றும் பின்இறுதி இரண்டிலும் எங்களை சோதிக்க நடத்தப்பட்டது, கடைசி இரண்டு மாதங்களில் முழு அடுக்கு செயல்திட்டத்தை நாங்கள் செய்தோம், இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. தற்போது எனது பயிற்சி முடிவடைந்து அடுத்து வேலை பயிற்சியில் (Internship) இணைய உள்ளேன். இந்த வேலை பயிற்சி நாங்கள் இதுவரையில் கற்றுகொண்டதை நேரடியாக பயன்படுத்த எங்களுக்கு கற்றுக்கொடுக்கும். வேலை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு டிசிகாப் நிறுவனத்தில் இணைய நான் காத்திருக்கிறேன்.
கற்றது கையளவு
நாம் அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தான். தமிழில் ஒரு அழகான மேற்கோள் உள்ளது “கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று” இதை நான் வெளிநிகழ்வு ஒன்றிற்கு செல்லும் போது தான் தெரிந்துகொண்டேன். ஜாவாஸ்கிரிப்ட்டை (JavaScript) மையமாக கொண்ட அந்த நிகழ்வு எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது. ஜாவாஸ்கிரிப்ட் (JavaScript) எவ்வாறு வளர்ச்சியடைந்தது, ஜாவாஸ்கிரிப்ட் மூலம் இணைய பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது போன்றவற்றை தெரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல அங்கு நடைபெற்ற போட்டியில் நானும் என் நண்பர்களும் முதல் பரிசு பெற்றோம். அப்போது நான் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
தொழில்நுட்ப திறன்களை தாண்டி பலவற்றை பள்ளி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, எனது எண்ணங்களை சிறந்த முறையில் வகைப்படுத்தி பேசுவதற்கு டோஸ்ட்மாஸ்டர் உதவியது. என் நினைவாற்றலை அதிகரிக்க நாட்குறிப்பு எழுதுவது (Journal Writing) உதவியது. எங்களின் தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த பயணத்தை தொடங்கும் போது எவ்வாறு மடிக்கணினியை பயன்படுத்துவது என்றே எனக்கு தெரியாது, ஆனால் இந்த ஒரு வருடத்தில் நான் அடைந்த வளர்ச்சியை பார்கும் போது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. என் கதையிலிருந்து நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருந்தால் உங்க கல்வி பின்னணி ஒரு தடையல்ல, முயற்சி செய்தால் தடைகளை கூட படிகளாக மாற்றலாம். இந்த சமயத்தில் எனக்கு உதவிய பள்ளி குருக்கள், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எனது நண்பர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.