
வணக்கம்! நான் விக்னேஷ் சந்திரசேகர். சென்னையில் பிறந்து வளர்ந்தவன். கணினி அறிவியலில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு, தற்போது டிசிகாப் பள்ளியில் மென்பொருள் பயிற்சி பெற்று வருகிறேன். என்னுடைய வாழ்க்கை பயணத்தின் ஒரு சிறிய தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆரம்ப பள்ளி நாட்கள்
எட்டாம் வகுப்பு வரை செயின்ட் மோஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அந்த நாட்கள் மகிழ்ச்சியுடனும், நண்பர்களுடனும், எண்ணற்ற நினைவுகளுடன் நிறைந்திருந்தன. பெரும்பாலான பள்ளி நண்பர்களுடன் இப்போது தொடர்பில் இல்லை என்றாலும், அந்த நினைவுகள் இப்போதும் என் முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன. பின்னர் பத்தாம் வகுப்பு வரை ஜமாலியா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இந்த ஆண்டுகள் என் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. இந்த நேரத்தில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டதால் தேர்வுகள் இல்லாமல் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். இது நல்லதா கெட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தேர்வுகள் நடைபெற்றிருந்தால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருப்பேன் என்று நான் நம்புகிறேன்.
கல்லூரி வாழ்க்கை
நான் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி பொறியியல் டிப்ளமோ படிப்பை படித்தேன். மொழி ஆற்றல் பெரிதும் இல்லாத காரணத்தால் நான் பதினோராம் வகுப்பிற்கு பதில் டிப்ளமோ தேர்ந்து எடுத்தேன். முதல் மூன்று கல்வி பருவம் இணையவழியில் நடந்தன. நான்காவது பருவத்தை மட்டுமே, நான் நேரடியாக வகுப்புகளில் கலந்து கொண்டேன்.
ஆச்சரியப்படும் விதமாக, அந்த இணையவழி பருவங்கள் என் வாழ்க்கையை சிறப்பாக மாற்றின. இல்லத்தில் அதிக நேரத்தை செலவழித்தால் என்னால் பலவற்றை கற்க முடிந்தது. என் கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், ஆழமான நட்புகளுடன் நிறைந்திருந்தது. வகுப்புகளுக்குப் பிறகு, நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம், வெளியே செல்வோம், ஒன்றாக தேர்வுகளுக்கு படிப்போம். இந்த காலங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.
வேலை அனுபவம்
என் பணி வாழ்க்கை சென்னையிலுள்ள நாவலூரில் தொடங்கியது, அங்கு நான் சுமார் 9 மாதங்கள் பணியாற்றினேன். ஒன் வெப் (ONE WEB) என்ற செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை மையமாகக் கொண்ட எனது வேலையின் மூலம், நெட்வொர்க்கிங் துறையில் அதிக கருத்துக்களை கற்க முடிந்தது. இந்த நேரத்தில், நான் சி.சி.என்.எ (CCNA) அடிப்படைகளையும் கற்றுக்கொண்டேன். இருந்தாலும் தொழில்நுட்ப துறையில் இணைய வேண்டும் என எனக்கு ஆவல் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தோல்வியே வெற்றிக்கு முதற்படி
டிசிகாப் பள்ளி பற்றி என் கல்லூரி நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அப்போது டிசிகாப் பள்ளி பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. மென்பொருள் துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள, இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று எங்கள் மனதில் தோன்றியது. ஆகையால் 2023 அன்று டிசிகாப் பள்ளியில் சேர விண்ணப்பித்தேன். நாங்கள் நான்கு பேர் நேர்காணலுக்குச் சென்றோம். ஆனால் எங்களில் ஒருவர் மட்டுமே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமா என்று என் மனம் ஏங்கியது. முயற்சி செய்வதில் தவறில்லை என்று எண்ணி மீண்டும் அடுத்த ஆண்டு நேர்காணலுக்கு விண்ணப்பித்தேன். இந்த முறையாவது தேர்வாக வேண்டும் என்று தீர்மானத்தோடு நேர்காணலில் கலந்து கொண்டேன். அனைத்து சுற்றுகளிலும் என் முழு திறனை வெளிப்படுத்தினேன். இறுதியாக என்னை தேர்ந்தெடுத்தாக கூறினார்கள். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆனால் ஒரு கவலையும் எனக்கு இருந்தது. என்னோடு நேர்காணலில் கலந்து கொண்ட என் நண்பர்கள் தேர்வாகவில்லை. படிப்பது, வெளியே செல்வது, நேர்காணலில் கலந்து கொள்வது என என் வாழ்நாளில் எல்லாவற்றையும் என் நண்பர்களுடன் தான் செய்தேன். இப்போது தனியாக இங்கு செல்ல வேண்டும் என்பதை எண்ணிய போது, எனக்கு பயமாகவும் சற்று தயக்கமும் ஏற்பட்டது. இருந்தாலும் என் எதிர்காலத்தை எண்ணி, மன தைரியத்தோடு டிசிகாப் பள்ளியில் இணைந்தேன்.
பள்ளியும் நானும்
முதல் நாளில் அறிமுகம் மற்றும் சில செயல்முறைகளை நாங்கள் மேற்கொண்டோம். முதல் சில நாட்கள் நான் தனிமையாக உணர்ந்தேன். என் நண்பர்களை விட்டு பிரிந்தது சற்று வருத்தமாக இருந்தது. நாட்கள் நகர நகர அது குறைய ஆரம்பித்தது. இங்கு பல புதிய நண்பர்களை நான் சம்பாதித்தேன். எங்களை குழுக்களாக பிரித்தார்கள்.

ஆரம்பத்தில் அடிப்படை வகுப்புகள் நடைபெற்றன. பணியிட மேலாண்மை, தொழில்முறை மின்னுஞ்சல் அனுப்புவது, சுய கற்றல், நாட்குறிப்பு எழுதுதல் போன்றவற்றை நாங்கள் தெரிந்து கொண்டோம். பின்னர் தொழில்நுட்ப பயிற்சிக்கு சென்றோம். முதலில் நாங்கள் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) மொழியைக் கற்கத் தொடங்கினோம். என் கல்லூரியில் நான் கற்றுக் கொண்டதை விட அதிகமாக இங்கு நான் கற்றுக்கொண்டேன். அதுவும் கோட்பாடு அடிப்படையில் இல்லாமல் செயல்முறை படுத்தி கற்றுக்கொண்டோம். எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) முடிந்ததும், அதை குறித்து ஒரு மதிப்பீடு நடந்தது. அதில் நான் மூன்றாவது இடத்தைப் பிடித்தேன்.
விளையாட்டு மேம்பாட்டு அனுபவம்
முன் இறுதி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட பிறகு, நாங்கள் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் வடிவமைப்பு பற்றி கற்க தொடங்கினோம். நாம் அனைவரும் பல விளையாட்டுகளை விளையாடி இருப்போம். ஆனால் அதை உருவாக்கும் போது தான் அதன் பின்னால் இருக்கும் கடின உழைப்பை பற்றி நான் தெரிந்துகொண்டேன். ஒரு விளையாட்டு எவ்வாறு இருக்க வேண்டும், அதை எப்படி வடிவமைக்க வேண்டும், நாம் உருவாக்கும் விளையாட்டை மக்கள் ரசிக்கும் படி எவ்வாறு செய்ய வேண்டும், போன்றவற்றை நான் கற்றேன். கற்றுக்கொண்டதை வைத்து நானும் என் நண்பர் பாலாஜியும் இணைந்து ஒரு விளையாட்டை உருவாக்கினோம். அதை அனைவரின் முன்னிலையில் காட்சியும் படுத்தினோம்.

மேடை பயம் விலகிய தருணம்
எங்கள் விளையாட்டை காட்சிப்படுத்தும் போது, பார்வையாளர்களுக்கு விளையாட்டின் விதிகளை தமிழில் விளக்குவது சற்று கடினமாக இருந்தது. ஆனால், பாலாஜி உதவ, எல்லாம் சீராகியது. இந்த கண்காட்சியின் மூலம், ஒரு விளையாட்டை எப்படி சுவாரஸ்யமாக வழங்குவது, நம்பிக்கையுடன் பேசுவது, சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது என நிறைய கற்றுக்கொண்டேன். டேபிள் டாப் விளையாட்டு கண்காட்சி (TTOX) நிகழ்வில் மற்றவர்கள் விளையாட்டை தொகுத்து வழங்கியதைப் பார்த்தது இதற்கு எனக்கு பெரிதும் உதவியது. டிசிகாப் பள்ளியில் இணைவதற்கு முன், நான் ஒருபோதும் கேமரா முன்னிலையில் பேசியதில்லை. ஆனால் இப்போது நம்பிக்கையோடு பேசினேன். இந்த மாற்றம் டிசிகாப் பள்ளி மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் அளித்த வாய்ப்புகளாலும் ஆதரவாலும் தான் சாத்தியமானது.
வாழ்க்கை பாடங்கள்
எங்கள் பள்ளியில் டோஸ்ட்மாஸ்டர், வலையொலி கேட்பது (Podcast), புத்தக வாசிப்பு, பிழைத்திருத்தம் (Debugging), தொழிநுட்ப பேச்சுக்கள், வெற்றிக் கதைகள் (LFTB) மற்றும் நாட்குறிப்பு எழுதுவது போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளை செய்கிறோம். இவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. பல முறை நானும் பாலாஜியும் டோஸ்ட்மாஸ்டர் அமர்வில் தலைமைப் பொறுப்பை ஏற்று வழங்குவோம். என் பேச்சு பயத்தை போக்க டோஸ்ட்மாஸ்டர் எனக்கு உதவியது.
நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல் செய்வோம். அப்போது புத்தகத்தில் படித்ததைப் பற்றி விவாதிப்போம்.வெற்றிக் கதைகள் (LFTB) மூலம் அனுபவம் வாய்ந்த மக்களை பற்றி தெரிந்துகொள்வோம். பிழை திருத்தம் மூலம் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பது, தொழில்நுட்ப பேச்சுக்களில் மூலம் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது என ஒவ்வொரு அம்சமும் என் திறனை மேம்படுத்தியது.
செயல்முறை கல்வி
விளையாட்டு கண்காட்சிக்கு பின், நாங்கள் நிகழ்நேர செயல் திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினோம். எங்கள் குழுவில் கோபிநாத், மைதிலி, லோகேஷ் ஆகியோர் இருந்தனர். டிசிகாப் நிறுவனத்தின் பணியாளர் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார். நாங்கள் ரியாக்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மின்னஞ்சல் வடிவமைப்பு தளத்தை (Email Template Builder) உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
முதலில், ரியாக்ட் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தினோம். எங்கள் வழிகாட்டி எங்களுக்கு பொறுப்புகளை பிரித்து வழங்கினார். எனக்கு வடிவமைப்பை அழகுபடுத்துதல் பிரிவு வழங்கப்பட்டது. எனக்கு இது மிகவும் பிடித்த பகுதி என்பதால், சி.எஸ்.எஸ் (CSS) மொழியை பயன்படுத்தி எங்கள் திட்டத்தை பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கும் படி செய்வதில் பணியாற்றினேன். இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரின் கடின உழைப்பால் இந்த திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக முடித்து, அதை காட்சிப்படுத்தினோம்.
வெளிநிகழ்வு அனுபவம்
நான் டிசிகாப் பள்ளி மூலம் இரண்டு பலகை விளையாட்டு கண்காட்சியில் பங்கேற்றேன். இதில் ஒரு நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது. டேபிள் டாப் விளையாட்டு கண்காட்சி (TTOX) என்ற அந்த நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தான் பலகை விளையாட்டு மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி தெரிந்து கொண்டேன். நிகழ்வில் அவர்கள் விளையாட்டுகளைத் காட்சிப்படுத்தினார்கள். சில கல்லூரி மாணவர்களும் வந்து தங்கள் விளையாட்டுகளை காட்சிப்படுத்தினார்கள்.

தற்போது நாங்கள் பின் இறுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் பின்னர் நாங்கள் வேலை பயிற்சியை மேற்கொள்வோம். இந்த ஒரு வருடத்தில் நான் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். பல புதிய நபர்களை சந்தித்தேன். பல இடங்களுக்கு சென்றேன். ஒரு காலத்தில் நமக்கு இது வருமா என்று எண்ணியிருந்த பலவற்றை இங்கு நான் முயற்சித்துள்ளேன்.
வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடப்பதில்லை. முதல் முறை பள்ளியில் சேர விண்ணப்பித்த போது நான் தோல்வியுற்றேன். சரி இது நமக்கு வராது என்று என்னிருந்தால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது. நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வரை முயற்சி செய்ய வேண்டும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று கூறுவார்கள்.