வாழ்வில் சில தருணங்களில் என்ன செய்வது என்று அறியாமல் நாம் இருக்கலாம். நாம் நினைத்தது நமக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் இதற்காக வருந்தாமல் நமக்கான வாய்ப்பை உருவாக்குபவர்கள் தான் வாழ்வில் வெற்றி அடைகின்றனர். இதை என் வாழ்க்கை கதை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
குளித்தலையைச் சேர்ந்த நான், விஜயலட்சுமி காந்தி. சிறு வயது முதலே, கணினி பொறியியல் படித்து ஒரு மென்பொருள் பொறியாளராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தேன். ஆனால், நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால், கணினி பொறியியல் டிப்ளமோவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
கல்லூரி அனுபவம்
கல்லூரி நாட்கள் மகிழ்ச்சியானதும், மறக்க முடியாத நினைவுகளாலும் நிரம்பியிருந்தது. இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த, அற்புதமான நண்பர்கள், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். பாடங்களைப் புரிந்துகொள்வதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் என்னை அர்ப்பணித்து, எனது படிப்பை தீவிரமாக எடுத்துக் கொண்டேன். இந்த அர்ப்பணிப்பு எனது தேர்வு மதிப்பெண்களில் பிரதிபலித்தது, இதனால் நான் பெருமைப்பட்டேன். ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிவடையும் போது, எனக்கு கவலை ஏற்பட்டது. எனது இறுதி ஆண்டில், வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நான் கற்றுக் கொண்டவைகளில் நம்பிக்கை இருந்தாலும், வேலை அமைப்பில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.
பள்ளி அறிமுகம்
இந்த நேரத்தில், டிசிகாப் பள்ளியின் பிரதிநிதிகள் நேர்காணல் நடத்த எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தனர். 10,000 உதவித்தொகை, இலவச காலை, மதிய உணவுடன், ஒரு வருட பயிற்சி வகுப்பு மற்றும் ஆறு மாத வேலை பயிற்சி அதற்கு பின் டிசிகாப் நிறுவனத்தின் முழு நேர வேலை, ஆகியவற்றை உள்ளடக்கிய அவர்களின் திட்டத்தை பற்றி கூறினார்கள்.
இந்த வாய்ப்பு எனக்கு நம்பிக்கையை அளித்தது. நான் டிசிகாப் பள்ளியில் சேர வேண்டும் என்று ஆவல் கொண்டேன். இருப்பினும், ஆசை மட்டும் போதாது என்பதை உணர்ந்தேன். நேர்காணலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எண்ணினேன். தேர்வில் உறுதியுடன் பங்கேற்று, முதல் சுற்று தொழில்நுட்ப சோதனையில் தேர்ச்சி பெற்றேன். இரண்டாவது சுற்றில் நான் பதற்றமாக இருந்தேன், எனக்கு நேர்காணல் தொகுப்பாளர் தைரியம் அளித்தார். அந்த நம்பிக்கையோடு இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற்றேன்.
அடுத்து, மூன்றாவது சுற்றை எதிர்கொண்டேன். இந்த சுற்றில் மனிதவள வல்லுனர்கள் எனது குடும்ப சூழ்நிலைகள் மற்றும் எனது ஆர்வத்தை பற்றி கேட்டார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதற்கான எனது ஆர்வத்தையும் எனது விருப்பங்களையும் பகிர்ந்து கொண்டேன். பின்னர் என்னை தேர்வு செய்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அந்த தருணத்தில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு புதிய தொடக்கம்
சென்னையில் தனியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் சிறிது பயமளித்தாலும், டிசிகாப் பள்ளி குழுவினர் சென்னையில் எங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை ஏற்பாடு செய்து, நாங்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்பதை உறுதிசெய்தனர். எனது நண்பர்களில் சிலரும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், நாங்கள் ஒன்றாக சென்னைக்கு குடிபெயர்ந்து, புதிய தொடக்கத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டோம்.
2023 ஜூலை 17ஆம் தேதி, நான் டிசிகாப் பள்ளியில் சேர்ந்தேன். முதலில் அடிப்படை கணினி அறிவைப் பற்றிய பயிற்சியைத் கொடுத்தார்கள். முதல் மூன்று மாதங்களில் எச்.டி.எம்.எல் (HTML) மற்றும் சி.எஸ்.எஸ் (CSS) கற்றுக்கொண்டோம். அதன் பிறகு ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript) மற்றும் வடிவமைப்புக் கொள்கைகளைக் கற்றுக் கொண்டோம். இது அனைத்தையும் சோதிக்க மதிப்பீடு தேர்வை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், டிசிகாப் பள்ளி என்னை ஊக்குவித்து, நம்பிக்கை தந்தது. அவர்களின் வழிகாட்டுதலும் உறுதியும் என் மீதும் என் திறன்களின் மீதும் நம்பிக்கை கொள்ள உதவியது.
பின்னர் மை.எஸ்.கியூ.எல் (MySQL) மற்றும் பி.எச்.பி (PHP) கற்றுகொண்டோம். தற்போது நான் எனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வேலை பயிற்சியில் இணைய உள்ளேன்.
இன்று, ஒரு முழு அடுக்கு உருவாக்குனர் (Full Stack Developer) என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். பல்வேறு திட்டங்களின் மூலம் என்னை மெருகேற்றி கொள்ள அவர்கள் உதவினார்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி
டிசிகாப் பள்ளி தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளித்தது மட்டுமின்றி, எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவியது. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று, அசைக்க முடியாத ஆதரவையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளனர். டோஸ்ட்மாஸ்டர்களில் பங்கேற்பதன் மூலம் எனது தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், புத்தகம் வாசிப்பதன் மூலம் எனது வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் எனது நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அதிகரிக்கவும் உதவினார்கள். அவர்கள் வழங்கிய வாய்ப்பிற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கூடுதலாக, வலையொலிகளைக் (Podcast) கேட்பதன் மூலம் எனது கேட்கும் திறனை மேம்படுத்தியுள்ளேன். இது எனது அறிவையும் புரிதலையும் வளப்படுத்தியுள்ளது.
இந்த வாய்ப்பை அளித்ததற்காக டிசிகாப் பள்ளிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று ஒரு திட்டத்தில் நானும் ஒரு பங்காக இருப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை, ஆனால் இன்று என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையை டிசிகாப் பள்ளி உருவாக்கியுள்ளது. வாழ்வில் முன்னேற நினைக்கும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான், வாய்ப்பு என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை, கிடைத்த வாய்ப்பை பலர் சரியாக பயன்படுத்திகொள்வதில்லை. இது போன்று இருக்காமல், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி தானாக உங்களிடம் வந்துசேரும்! நன்றி! வணக்கம்!