என் வாழ்க்கை பயணத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு விசயம் என்னவென்றால் “வாய்ப்பு கிடைக்கும் போது அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்பது தான்.
நான் வினித் கிருஷ்ணன். டிசிகாப் பள்ளியில் எனது பயிற்சியை முடித்து இப்பொழுது டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கியுள்ளேன். நான் எப்படி டிசிகாப் பள்ளியில் இணைந்தேன் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
டிசிகாப் அறிமுகம்:
எங்கள் ஊரில், டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்தான் எனக்கும் என் நண்பருக்கும் டிசிகாப் பள்ளியை அறிமுகப்படுத்தினார். அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரால் தான் டிசிகாப் பள்ளியில் இணையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளியில் இருந்த அனைவரும் என்னை விடப் பெரியவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் பழகுவது எனக்குக் கடினமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், பள்ளிப் பருவம் வரை நான் கணினியைப் பயன்படுத்தியது இல்லை. பெற்றோரை விட்டு தனியாகச் சென்றதும் கிடையாது. இது அனைத்தும் எனக்கு ஒரு கனவு போல் தோன்றியது. டிசிகாப் பள்ளியில் இணைந்த நேரத்தில் ஏதேனும் தவறு இழைத்த விட்டோமா என்று பல முறை நினைத்ததுண்டு. ஆனால் காலத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்வது முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன், ஆகவே பள்ளிக்கு ஏற்றவாறு என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
பள்ளியில் நான்:
நாட்கள் செல்ல செல்ல எனக்குப் பள்ளி கலாச்சாரம் மிகவும் பிடித்துவிட்டது. புதிய ஒன்றை கற்று அதில் தேர்ச்சி பெறுவது என்பது ஒரு சிறந்த தருணம். முதன்முதலாக நான் எச்.டி.எம்.எல்(HTML) மொழியை கற்றுக் கொண்டேன். அதனைப் பயன்படுத்தி ஒரு நாட்காட்டியை உருவாக்கினேன். என்னால் முடியுமா என்ற சந்தேகம் களைந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கை உருவாகியது. ஒரு திறமையான வலை உருவாக்குநராக மாற எச்.டி.எம்.எல்(HTML) புலமை மட்டும் போதாது என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
முதல் மதிப்பீடு தேர்வில் நான் சரியாகப் செயல்படவில்லை. இதனால் மனம் உடைந்து இது நம்மால் முடியாது என்று நான் தயங்கிய நேரத்தில், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பள்ளி பயிற்சியாளரிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவர் என்னை ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல், எனது திறமையை மேம்படுத்துவதற்கான விலைமதிப்பற்ற ஆலோசனைகளையும் வழங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக எச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ், தரவுத்தள மேலாண்மை அமைப்பு(DBMS), மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றைக் கற்க ஆரம்பித்தேன்.
கல்வி பயணம்:
பின்னர் பி.எச்.பி(PHP) மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அதைக் கற்பித்த பயிற்சியாளர் மிகவும் எளிதாகப் புரியும்படி அதை நடத்தினர். இருந்தாலும் என்னால் அதில் குறைந்த மதிப்பெண்களே பெற முடிந்தது. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று நான் யோசித்தேன். அப்போது தான் என் பயிற்சியாளர் உதவியுடன் எனக்கு பின்தள மேம்பாட்டை விட முன்தள மேம்பாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இதில் சிறந்து விளங்கப் பல நிகழ்நிலை படிப்புகளை மேற்கொண்டேன். பல பட்டறைகளிலும் கலந்து கொண்டேன். இது எனது புரிதலை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், பல தொழில் வல்லுநர்களின் இணைப்பையும் பெற்றுத்தந்தது.
குழுப்பணி:
அனைத்து மதிப்பீடுகளும் முடிந்ததும், எங்கள் குழு ஒரு ‘ஜர்னல் ரைட்டிங் அப்ளிகேஷனை’ உருவாக்குவதற்கான திட்டத்தைத் தொடங்கினோம். நானும் எனது சக நண்பரும் வடிவமைப்பாளர்களாகப் பொறுப்பேற்றோம். எங்களின் வடிவமைப்பு செயல்முறை காகித ஓவியங்களில் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஃபிக்மா வடிவமைப்பு கருவியைப் பயன்படுத்தி நுட்பமான வடிவமைப்பை உருவாக்கினோம். பல வடிவமைப்புக்குப் பின் எங்கள் திட்டத்தை முடித்தோம். எனக்குள் இருக்கும் கற்பனைத் திறனைப் பற்றி இந்த கூட்டுத் திட்டத்தின் மூலம் தான் நான் தெரிந்துகொண்டேன். எனது குழுவும் இதனை ஆதரித்தனர். வடிவமைப்பில் யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் அவர்களுக்கு உதவ நான் முன்வந்தேன்.
வேலை பயிற்சி:
பின்னர் நான் பொருள் மேலாண்மை அமைப்பு திட்டத்தில் இணைந்தேன். இங்கும் நான் வடிவமைப்பு பணியை மேற்கொண்டேன். இவ்வாறே ஒரு வருடப் பயிற்சியை முடித்தேன். பின்னர் எங்களுக்கு வேலை பயிற்சி தொடங்கியது, நான் முன்தள மேம்பாடு துறையை தேர்ந்தெடுத்தேன். தயாரிப்பு மேலாளருடன் நேர்காணலை முடித்த பின்பு என்னை கிளைசர் (Klizer) குழுவில் தேர்ந்தெடுத்தனர். இது வரை வடிவமைப்பில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வந்தேன், தற்போது மேம்பாடு துறையில் சேர்ந்தவுடன் எனக்குத் தயக்கம் உண்டானது. எச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ், ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றை நான் இன்னும் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை. அதனை கற்க அதிக நேரம் செலவிட்டேன்.
வேலை பயிற்சியின் போது நான் பயனர் இடைமுகத்தில் பணிபுரிந்தேன். எங்களின் வழிகாட்டி “தயக்கம் கொள்ளாதீர்கள், நம்பிக்கையுடன் செயல்படுங்கள், முடிந்தவரைப் போராடுங்கள்” என்று பல அறிவுரைகளை வழங்கினார். இது எனக்கு புது உத்வேகத்தை வழங்கியது, இன்னும் அதிக முயற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எச்.டி.எம்.எல், சி.எஸ்.எஸ் மொழியைக் கற்க ஆரம்பித்தேன். எனக்கு ஏதேனும் தெரியவில்லை என்றால் என் நண்பர்களிடம் கேட்டேன், அவர்களும் எனக்கு உதவினார்கள். எந்த துறையில் பணி புரிந்தாலும், சுய கற்றல் மற்றும் சுய ஆர்வம் இருந்தால் தான் அதில் வெற்றி பெற முடியும் என்று வேலை பயிற்சியின் போது நான் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் பணிகளை மேற்கொள்வது சற்று கடினமாகத் தான் இருந்தது, இருந்தாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டு அனைத்து பணிகளையும் முடித்தேன்.
தற்போது டிசிகாப் நிறுவனத்தில் ஒரு முழு நேர பணியாளராக நான் சேர்ந்துள்ளேன். பள்ளியைப் பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்னவென்றால், படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் எங்களை அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கச் செய்தனர். தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் எங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வழி செய்தனர். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க நான் கடமைப் பட்டுள்ளேன்.