Skip to main content

இன்று சர்வதேச பெண் குழந்தை தினம். பெண் பிள்ளை வேண்டாம் என்று பெண் சிசு கொலைகள் செய்த காலம் மாறி இன்று பெண்களுக்கு சம உரிமை வழங்கும் காலம் உருவாகிவிட்டது. பெண்கள் இல்லாத துறைகளை இன்று காண கிடைப்பது கடினம். பெண் தலைவர்கள் இல்லா தேசங்களை பார்ப்பதும் இன்று மிக கடினம். ஒரு பெண்ணிற்குக் கல்வி கற்பித்தல், ஒரு சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கு சமம் என்பதை டிசிகாப் நம்புகிறது. 

டிசிகாப் பள்ளி என்பது டிசிகாப் சமூகத்தின் ஒரு முன்முயற்சியாகும். இது 12 ஆம் வகுப்பு / பாலிடெக்னிக் / டிப்ளமோ கல்லூரிகளை முடிக்கும் மாணவர்களை தொழில்துறைக்குத் தயார்ப்படுத்த முயல்கிறது. டிசிகாப் பள்ளியில் பயிற்சியானது டிசிகாப் சமூகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. டிசிகாப் பள்ளி அனைவருக்கும் சம வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்டது. நாங்கள் பள்ளியைத் தொடங்கியபோது, நிதி அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத தகுதியுள்ள பல மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினோம். 

அதிலும் முதன்மையாக பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று எண்ணினோம். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகம் எங்கும் உள்ள கிராமப்புற பெண்கள் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ள பெண்கள் பயன் பெற உதவியாக இருக்கும் என்று உறுதியாக எண்ணினோம்.

இதைச் செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் களப்பணிகளை ஆரம்பித்தோம். இவ்வாறு செய்வதன் மூலம் பலதரப்பட்ட மக்களை எங்கள் டிசிகாப் சமூகத்தில் சேர்த்து எங்கள் சமூகம் வலுப்பெற செய்ய முடியும் என நம்பினோம். ஆனால் இது எளிதான காரியமாக இல்லை. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று என்னும் சமுதாயம் காலமாகி விட்டது என்று தான் நாங்கள் எண்ணினோம். ஆனால் அது முற்றிலும் தவறு. இன்றளவும் பல கிராமங்களில் மற்றும் பல நகரங்களில் பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்கப் பல தடைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

வீட்டு பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வது, சிறு வயது திருமணம், நிதிச் சுமைகள், பெற்றோரின் ஆதரவு இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல், எதோ ஒரு நிறுவனத்தில் எதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். இது இப்படி இருக்க கிராமப்புற பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கின்றது. போக்குவரத்துக்குப் பற்றாக்குறை, போதுமான கல்வி வளங்கள் இல்லாமை, மேற்படிப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை, வேலை வாய்ப்பு தொடர்பான புரிதல் இல்லாத காரணத்தால் பெண்கள் அவர்களின் முழு திறனை வெளிக்கொணர முடியாமல் போகின்றது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாகவும் இருந்தது. வெற்றி பெறும் குழுக்களில் எல்லாம் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆகவே எங்கள் பயிற்சியில் அதிக பெண் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று எங்கள் பணியை நாங்கள் தொடர்ந்தோம்.

பல்வேறு நேர்காணல் யுக்திகளைப் பயன்படுத்தி முதல் வருடத்தில் நான்கு பெண்களை எங்கள் பயிற்சிக்கு நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஆனால் மேல் கூறிய பல்வேறு காரணங்களால் மூன்று மாணவிகளால் எங்களுடன் சேர முடியவில்லை. வெறும் ஒரு மாணவியுடன் எங்கள் முதல் வருட பயிற்சியை  நாங்கள் தொடங்கினோம்.

இந்த ஒரு மாணவியால் இருபத்து மூன்று மாணவர்களுடன் போட்டியிட முடியுமா என்று நாங்கள் தயங்கினோம். ஆனால் சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள் என்பதை அந்த மாணவி நிரூபித்துக் காட்டிவிட்டார். அவர்களோடு போட்டியிடுவது மட்டுமின்றி அவர்களுக்கு இணையாக இந்த மாணவியால் செயல்பட முடிந்தது. ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தற்போது வேலை பயிற்சியில் தன் பயணத்தை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறார்.

முதல் முறை செய்த முயற்சியை விட அடுத்த பயிற்சி வகுப்பு நேர்காணலுக்கு வேறு பல யுக்திகளை செயல் படுத்த தொடங்கினோம். எங்கள் திறன் மேம்பாட்டுத் பயிற்சி குறித்து  விழிப்புணர்வைப் பெண்களிடையே ஏற்படுத்தவும், தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளை பற்றி எடுத்துரைக்க நாங்கள் முயன்றோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு பெண்கள் டிப்ளமோ கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதிகம் ஆர்வம் காட்டும் கல்லூரிகளில் வளாக நேர்காணல் சென்று அங்கு இருக்கும் பெண் மாணவர்களுக்கு இந்த பயிற்சி குறித்து எடுத்துரைத்தோம். டிசிகாப் சமூகத்தின் வெற்றிகரமான பெண் தலைவர்களை பற்றிய வெற்றி கதைகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கையை வளர்க்கும் கருத்தரங்குகள், ஆதரவு அமைப்பு போன்ற பல யுக்திகளைப் பயன்படுத்தினோம்.

இந்த யுக்திகள் எங்களுக்கு மாபெரும் வெற்றியை அளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. வெறும் ஒரு பெண்மணியோடு ஆரம்பித்த இந்த பயிற்சியில் தற்போது பத்து மாணவிகள் பயில்கிறார்கள் என்று கூறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது இந்த வருட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் ஆகும்.

அன்னை தெரசா, கிரண் பேடி, இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு, கல்பனா சாவ்லா போன்ற வீர மங்கைகள் வாழ்ந்த நாடு நம் நாடு. நீங்களும் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களை, சாதாரண பெண் என்று எண்ணாமல் அவர்களை மேலும் மேலும் உயர உதவி செய்யுங்கள். நாங்கள் ஆரம்பித்த இந்த பயிற்சி வெறும் தொடக்கமே இதைப் போல் இன்னும் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Manikandan V

Author Manikandan V

Manikandan, an Engineer by day and a Wordsmith by night. Currently interning at DCKAP Palli where he assist mostly in writing and editing where he brings his passion and creativity to work.

More posts by Manikandan V

Leave a Reply