Skip to main content

பள்ளி, டிப்ளமோ மற்றும் கல்லூரியை முடித்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் மாணவர்களுக்கு என்னுடைய கதை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன், பட்ட படிப்பை முடித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கும் என்று நம்பும் இந்த சமூகத்தில் பட்டத்தைக் காட்டிலும் திறன் மற்றும் ஆர்வம் இருந்தால் அனைவரும் சாதிக்கலாம் என்பதை என் கதை உணர்த்தும். சரி வாருங்கள் என்னுடைய கதையைப் பார்ப்போம்.

மென்பொருளும் நானும்:

என் பெயர் பிரசாந்த். சென்னையில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் (Central Polytechnic College) மின் மற்றும் மின்னணு துறையில் பட்டயப்படிப்பு (Electrical and Electronics) படித்தேன். கல்லூரியை முடிக்க போகும் தறுவாயில் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்த ஒரு அண்ணனிடம் அறிவுரையை கேட்டேன். அவர் டிப்ளோமா முடித்த பிறகு மேற்படிப்பை தொடர்ந்து படி என்று கூறினார். ஆனால் மேற்படிப்பை தொடருவதற்கு எனக்கு எண்ணம் இல்லை.

பட்டப்படிப்பு இன்றி மென்பொருள் நிறுவனத்தில் இணைவது கடினம் என்று அவர் கூறினார். சில நாட்களுக்கு பிறகு அவர் என்னை அழைத்து UI&UX படிப்பைப் பற்றி கூறினார். மேலும் அது எந்தப் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கப்படுகிறது என்பது பற்றியும் கூறினார். நான் மேலும் இந்த படிப்பை பற்றி ஆராய்ந்தேன். இதை என்னால் கற்றுக்கொள்ள முடியும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. பிறகு அவர் கூறிய பயிற்சி நிறுவனத்திற்கு சென்று ஆலோசனை செய்த போது இந்த பயிற்சியை முடிப்பதற்கு ரூபாய் 65,000 வரை ஆகும் என்று கூறினார்கள். என்னால் அவ்வளவு தொகை செலுத்த முடியாத காரணத்தால் நான் அதைத் தொடரவில்லை. ஆனாலும் என்னால் முடிந்தவரை அதைப்பற்றி மேலும் சுயமாக கற்றுக் கொண்டு இருந்தேன்.

சில நாட்களுக்கு பிறகு என்னுடைய கல்லூரி வேலைவாய்ப்பு புலனாய்வுக் குழு மூலம் டிசிகாப் பள்ளியை பற்றி அறிந்தேன். இங்கு தொழில் வல்லுனர்களிடம் இருந்து மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு திறன் பற்றிய நடைமுறை பயிற்சியையும், உதவித் தொகையையும் அளித்து பயிற்சி முடிந்த பிறகு டிசிகாப் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பது தெரிந்ததும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. டிசிகாப் பள்ளியில் விண்ணப்பித்தேன். எனது இரண்டு நண்பர்களும் இதற்காக விண்ணப்பித்து இருந்தார்கள். மூவரும் நேர்காணலுக்கு ஒன்றாக செல்வதென்று முடிவு செய்தோம்.

வாழ்வை மாற்றிய நாள்:

நேர்காணல் அன்று முதலில் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவர்கள் டிசிகாப் நிறுவனத்தைப் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் கூறிய பிறகு எனக்கு இருந்த சந்தேகங்களை அவரிடம் தைரியமாக கேட்டேன். அவர் நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதன் பிறகு கிளைசர் குழு தலைவர் அவர்கள் டிசிகாப்பின் தயாரிப்புகளை பற்றியும் அது அமெரிக்காவில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு வர்த்தகத்தை எளிமையாக்குவதற்கு பயன்படுகிறது என்றும் கூறினார். அதன் பிறகு நேர்காணல் செயல்முறை முடித்த பிறகு மாலை நேர்காணல் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் நான் மட்டும் இல்லாமல் என்னுடைய இரண்டு நண்பர்களும் தேர்வு ஆகிவிட்டோம். டிப்ளமோ முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி இருந்த எங்களுக்கு டிசிகாப் பள்ளியில் இடம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 

கற்ற அனுபவங்கள்:

முதல் நாள் அன்று கணினியை எப்படி கையாளவேண்டும் என்பதிலிருந்து தொடங்கி கடந்த ஒரு வருடத்தில் நான் கற்றுக் கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் டிசிகாப்பில் உள்ள பல்வேறு துறைகளை பற்றி தெரிந்துகொண்டேன். இணையதள சேவையையும் அது செயல்படும் முறையையும் கற்றுக்கொண்டேன். வலைதளத்தை பற்றியும், வலைத்தளச் சந்தைப்படுத்தல் (website marketing) முக்கியத்துவம் பற்றியும், மென்பொருள் சோதனை (software testing) பற்றியும் சோதனை செய்யும் முறைகளையும், மென் திறன்களும் (soft skill) கற்றுக்கொண்டேன். இதன் மூலம் நேர்மறை சிந்தனை, நேர மேலாண்மை, தொடர்பு திறன் (communication skills) இவற்றை பற்றி தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் செய்முறை மூலம் செயல்படுத்தி கற்றுத் தருகிறார்கள். 

பள்ளியிலும், கல்லூரியிலும் மென் திறன் பற்றிய பாடங்களை கற்று தருவது இல்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த திறன் அனைவரின் வாழ்க்கைக்கு முக்கியம் என்று புரிந்து கொண்டேன். அது மட்டுமின்றி ஆங்கிலத்தில் உரையாடல்களையும், நாடகங்களையும் நடத்தி ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியுமா என்ற தயக்கத்தை ஒடுக்கி ஆங்கிலத்தில் பேசுவது எளிது என்ற எண்ணத்தை அளித்திருக்கிறார்கள். 

புத்தகம் படிக்கும் பழக்கத்தை இவர்கள் ஆதரித்தார்கள். ‘சின்னஞ்சிறு பழக்கங்கள்’ என்னும் புத்தகத்தை படித்தது மட்டுமல்லாமல் அதில் உள்ள கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிர்வது மூலமாக அதை எளிதாக புரிந்து கொள்ள உதவின. இது என் நினைவாற்றலை அதிகரித்து என்னை ஒரு சிறந்த பணியாளராக மாற்றியது. 

புதிய முயற்சி – வெற்றிக்கான படி:

டிசிகாப் பள்ளியில் உள்ள பயிற்சியாளர்கள் நேரடியாக குறியீட்டு முறையை(coding) கற்றுக் கொடுப்பதற்கு முன்பு நிரலாக்க கருத்துக்களை (programming concepts) புரிந்து கொண்டால் எளிதாக கற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர். முன்-முனை வளர்ச்சி (Front End Development) நிரலாக்க மொழிகளைக் (programing language) கற்றுக்கொண்டேன். பயனர் இடைமுகம் (user interface) மற்றும் பயனர் அனுபவம் (user experience), ஃபிக்மா (figma) உடன் இணைந்து ஒரு முழு செயல்பாடு வலைதளத்தை உருவாக்க கற்றுக்கொண்டேன். என் ஆசை UI/UX வடிவமைப்பாளராக வேண்டும் என்பது தான் அதைப் பற்றி அறிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் UI/UX வடிவமைப்பாளராக வேண்டும் என்று தீர்மானித்ததற்குக் காரணம் பலரும் நிரலாக்க மொழியைக் கற்பது கடினம் என்று கூறினார்கள். அதனை நம்பி நிரலாக்க மொழியை விட்டுவிட்டு எப்படியாவது வலைதள வடிவமைப்பாளராக வேண்டும் என்று தீர்மானித்தேன். 

வெறும் கோட்பாடு(theory) வகுப்பை மட்டும் நடத்தாமல் அவ்வப்போது சிறு சிறு பணிகளும் கொடுக்கப்பட்டது அதில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார்கள், அவர்களிடம் இருந்து குறியீட்டு முறை மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில் அனுபவங்களையும் கற்றுக் கொண்டேன். முன்-முனையை முடித்து விட்டு எங்களுக்கு நேரடியாக பின்-முனை (back end) மேம்பாட்டுக்கு செல்லாமல், இது இரண்டையும் இணைக்கும் ஏபிஐ (API) பற்றி கற்றுக் கொடுத்து பின்னர் அதிலிருந்து பணிகளைக் கொடுத்தனர். இதைத் தெரிந்து கொண்டால் பின்-முனை-ஐ கற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று இதனைச் செய்தனர்.

இதனை கற்றுக் கொள்ளும் நேரத்தில் மற்றொரு பயிற்சியாளர் DBMS மற்றும் SQL-ஐ கற்றுக்கொடுத்தார், இதை பயன்படுத்தி LinkedIn பயன்பாடு, நூலக மேலாண்மை, மாணவர் மதிப்பெண் மேலாண்மை போன்ற பலவற்றை நான் வடிவமைத்தேன். மேலும் முன்-முனையில் கொடுக்கப்படும் தகவல்கள் பின்-முனையில் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டது மட்டும் இல்லாமல் அதை எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன் மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டேன்.

கற்றலோடு சேர்ந்து பல்வேறு செயல்பாடுகளை நடத்தி எங்களை ஊக்குவித்தார்கள், பத்திரிகை எழுதுதல் (journal writing) மூலம் நான் என்னுடைய அனுபவங்களை மற்றும் என்னுடைய மனநிலையை பற்றி எழுதினேன். அது எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது, இதனைப் பள்ளி குழுவினரிடம் பகிர்ந்து கொள்வேன். இதன் மூலம் அவர்கள் எங்கள் மனநிலையை அறிந்து எங்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கினர். இது என்னுடைய எண்ணம் சீராக இருக்க உதவியது. ஃபுல் ஸ்டேக் டெவலப்பராக (full stack developer) வேண்டும் என்று எங்கள் குறியிலிருந்து நாங்கள் வழி தவறாமல் இருக்க எங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டார்கள்.

மறக்க முடியாத தருணங்கள்:

நானும் என் குழுவினரும் இணைந்து ஐசனோவர் மேட்ரிக்ஸ் (Eisenhower matrix) கருத்தைப் பயன்படுத்தி ஒரு உற்பத்தி மேலாண்மை செயலியை உருவாக்கினோம். இது பயனரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து அவர்கள் முதலில் எந்த செயலை செய்ய வேண்டும் என்று வகைப்படுத்திக் கொடுக்கும். ஒரு குழுவாக எவ்வாறு பணியாற்ற வேண்டும், எல்லோரும் இணைந்து எவ்வாறு வேலை செய்ய வேண்டும், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு ஒற்று போவது போன்ற பலவற்றை நான் கற்றுக் கொண்டேன்.

இந்த ஒரு வருடம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது, ஒரு வருடத்தில் நடந்ததை நினைவு கொள்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது, ஆனால் இவர்கள் பழக்கிவிட்ட பத்திரிகை எழுதும் (journal writing) பழக்கம் நினைவுகளை ஞாபகம் வைக்க உதவியது. இதற்கும் டிசிகாப் பள்ளி குழுவினருக்கு என்னுடைய நன்றிகள். 

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறன்களையும் நான் இங்கு கற்று கொண்டிருக்கிறேன். என்னுடைய கனவை வெறும் கனவாக விடாமல் அதை நிறைவேற்றி கொடுத்த டிசிகாப் பள்ளி நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 

என்னைப் போன்ற மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று தான், சாதிக்க வயது, பணம், பட்டப்படிப்பு எதுவும் ஒரு தடை இல்லை, முயற்சி செய்தால் எல்லோரும் வெற்றி பெறலாம்.

Prasanth Nagaraj

Author Prasanth Nagaraj

Prasanth completed his Diploma in electrical and electronics engineering before joining Palli. He was passionate about UI and UX later found that he was more aligned towards full stack web development.

More posts by Prasanth Nagaraj

Leave a Reply