Skip to main content

என் வாழ்க்கை பயணத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் என்னவென்றால். எந்தவொரு முயற்சியிலும் தேர்ச்சி மற்றும் வெற்றிக்கான கதவைத் திறக்கும் திறவுகோல், ஆழமான புரிதல் ஆகும் என்பதுதான். என்னுடைய கதையில் இருந்து அதன் முக்கியத்துவத்தை நீங்களும் தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

என் பெயர் விக்னேஷ் செல்வராஜ். நான் சென்னையில் உள்ள மூலக்கடையைச் சேர்ந்தவன். நான் இயந்திர பொறியியலில் பாலிடெக்னிக் படிப்பை முடித்து இருக்கிறேன். டிசிகாப் பள்ளியில் ஒரு வருட பயிற்சியை முடித்து, இப்பொழுது வேலை பயிற்சியில் உள்ளேன்.

கல்லூரியும் டிசிகாப் பள்ளியும்:

நான் டிப்ளமோ மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்தவுடன், எந்த துறையில் வேலை செய்வதென்று தெரியாமல் இருந்தேன். ஏனென்றேல், அப்போது எனக்கு மெக்கானிக்கல் துறையில் பணிபுரிய விருப்பம் இல்லை. நான் 3 பரிமாண வடிவமைப்பாளராக மாற விரும்பினேன், அதனால் இணையத்தைப் பயன்படுத்தி சில 3 பரிமாண மென்பொருட்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது டிசிகாப் பள்ளி பற்றி எங்கள் கல்லூரி மூலம் தெரிந்து கொண்டேன். அப்போது இணைய மேம்பாடு துறையும் வருங்காலத்தில் பெரிதளவில் வளரும் என்பதை அறிந்து கொண்டேன். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொண்டு, அதில் தேர்ச்சியும் பெற்றேன்.

மென்பொருள் மேம்பாலராக ஆவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். டிசிகாப்பில் இணைந்தது என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்று என்பதை உணர்ந்தேன். முதல் நாள் நான் வகுப்பிற்கு செல்லும் போது மிகவும் உற்சாகமாக சென்றேன். அந்த நாள் என்னால் மறக்க முடியாது, ஏனெனில் அன்று அனைவரும் அவர்களை பற்றி பகிர்ந்துகொண்டார்கள். இதற்கு முன்பு நான் இதை போல் எங்கும் பேசியது கிடையாது. அந்த தருணம் பயமாக இருந்தாலும் அது எனக்கு உற்சாகத்தை தந்தது.

மேடையில் பேச முடியாது என்று நினைத்த என்னை, முடியும் என்று நம்ப வைத்தனர். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும் இங்கு நான் கற்றுக்கொண்டேன். புதிதாக பல புத்தகங்கள் படிக்க தொடங்கினேன். அதன் மூலம் பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

டிசிகாப்பும் கற்றலும்:

ஆரம்பத்தில் எச்.டி.எம்.எல்(HTML) மொழியை கற்று கொடுத்தார்கள். அது எனக்கு எளிதாக இருந்தது. இதை போல தான் எல்லா மொழிகளும் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அதன்பிறகு கற்றுகொடுத்த சி.எஸ்.எஸ் மொழி சற்று கடினமாக இருந்தது. முதல் கட்ட தேர்வில் என்னால் சரியாக விடையளிக்க முடியவில்லை. அப்போதுதான் நான் இருக்கும் நிலையை நான் அறிந்துகொண்டேன். என் நிலையை உயர்த்த வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அதன் பிறகு எச்.டி.எம்.எல் மற்றும்  சி.எஸ்.எஸ் மொழியை  நன்றாக கற்றுக்கொண்டேன். இந்த ஆர்வம் முன்னரே இருந்து இருந்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுத்து இருப்பேன். 

அடுத்ததாக கற்றுகொடுத்த தரவுத்தள மேலாண்மை அமைப்பு(DBMS) ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நன்றாக புரிந்தது. எனக்கு சுலபமாகவும் இருந்தது. இதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்ததாக ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்றுகொடுத்தார்கள். பயிற்சியாளர் அவர்கள் ஜாவாஸ்கிரிப்ட் மொழியை கற்றுகொடுக்கும் போது, புரிவது போன்று தான் தோன்றியது. ஆனால் அதைப் பயிற்சி செய்தபோது தான் பல சிரமங்களைச் சந்தித்தேன். அதற்கு என்ன தீர்வு என்று நான் குழப்பத்தில் இருந்த போது, எனக்கு என் நண்பர் எளிதாக புரியும்படி புரியவைத்தார். இருந்தாலும் ஜாவாஸ்கிரிப்ட்டை தனியாக பயிற்சி செய்வது எனக்கு கடினமாக இருந்தது. 

ஒரு மாதத்திற்குப் பிறகு ஜாவாஸ்கிரிப்டில் எங்கள் திறமையை சோதித்தனர். மதிப்பீட்டை முடிக்க ஒரு நாள் அவகாசம் கொடுத்தார்கள். ஆனால் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் ஜாவாஸ்கிரிப்ட்டை கற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். இணையத்தில் இதைப் பற்றி மேலும் அறிய எனது ஒருங்கிணைப்பாளர் எனக்கு அறிவுறுத்தினார். ஆனால் நான் எத்தனை முறை முயற்சித்தாலும் என்னால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஜாவாஸ்கிரிப்ட் தேர்வில் தேர்ச்சி பெற பள்ளியில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தார்கள். எனக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்தார்கள். இந்த பொன்னான தருணங்களை ஜாவாஸ்கிரிப்ட்டை கற்றுக்கொள்ள பயன்படுத்தினேன். இந்தச் சம்பவத்திலிருந்து எந்தத் துறையிலும் சிறந்து விளங்க சுயக் கற்றல் மிகவும் முக்கியமானது என்பதை நான் கண்டேன். எனது முந்தைய தேர்வில் நான் தோல்வியடைந்தேன். ஆனால் இனி அப்படி நடக்க விடமாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். நிரலாக்க மொழிகளைக் கற்கவும், பயிற்சி செய்ய பள்ளியிலும் வீட்டிலும் அதிக நேரம் செலவிட்டேன். இந்த நேரத்தில் பயிற்சியாளர்கள் எனக்கு உதவினார்கள். அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மீண்டும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்றேன்.

ஒரு விஷயத்தை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் பார்த்தால் புரிந்து கொள்ளலாம், என்ற என் மனநிலையை இது மாற்றிவிட்டது. நமக்கு ஒன்று வரவில்லை என்றால் அதை விட்டுவிட கூடாது, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டேன். இதனை புரியவைத்த எங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளியில் சேர்வதற்கு முன் நான் எந்த ஒரு செயல்பாடுகளிலும் அல்லது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தேன். ஆனால் இங்கு சேர்ந்த பிறகு நான் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்க ஆரம்பித்தேன். என் கூச்சமும் குறைந்துவிட்டது.

டிசிகாப் பள்ளிதான் நான் எனது திறமைகளை வெளிப்படுத்தும் முதல் இடம். இது என்னை தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாற்றியது. அதுமட்டுமல்ல, எல்லோரும் சமம் என்ற பள்ளியின் கொள்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின்னர் அவர்கள் எங்களுக்கு பின்தள மொழிகளைக் கற்றுக் கொடுத்தனர். எனக்கு பின்தள மொழிகளில் அதிக ஆர்வம் இருந்தது, அதனால் நான் எந்த சிரமத்தையும் உணரவில்லை. அதன் பிறகு நான் பல்வேறு திட்டங்களில் பங்கேற்றேன் மற்றும் உற்பத்தி மேலாண்மை திட்டத்தில் முன் இறுதியில் மேம்பாலராக வேலை செய்தேன். 

வேலை பயிற்சி:

ஒரு வருட பயிற்சிக்கு பிறகு, என்னை நேர்முகத்தேர்வு மூலம் கிளைசர்(Klizer) பிரிவில் முன்-இறுதி மேம்பாலராக நியமித்தனர். இங்கு வேலை பயிற்சியில் ஈடுபடும் போது, ஒரு வடிவமைப்பை பார்த்து அதில் இருக்கும் படி வடிவமைத்தால் போதும் என்று எண்ணினேன். ஆனால் அது தவறென்று எனக்கு புரியவைத்தார்கள். சரியான அளவீடுகளை எடுக்காமல் ஒரு வலைத்தளத்தை வடிவமைக்க கூடாது என்று கற்றுக்கொண்டேன்.

ஆரம்பத்தில், ஒரு வலைத்தளத்திற்கான பொருத்தமான எச்.டி.எம்.எல் கட்டமைப்பை வடிவமைப்பதில் எனக்கு சிரமம் இருந்தது. ஆனால் முழுமையாக செயல்படும் தளத்தை உருவாக்குவதில் அதன் இன்றியமையாத பங்கை நான் உணர்ந்து கொண்டேன். இதை நிவர்த்தி செய்ய, வலைத்தளத்தின் கட்டமைப்பிற்குள் எச்.டி.எம்.எல் கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு முன், கட்டமைப்பை வடிவமைக்க காகிதத்தைப் பயன்படுத்தினேன். அதன் பிறகு, சி.எஸ்.எஸ் மட்டுமின்றி, அதற்கு முன்செயலியான லீனர் ஸ்டைல் ஷீட்ஸ்(LESS) மேம்பட்டதையும் கற்றுக்கொண்டேன். எனது வேலைப் பயிற்சியின் போது, நமக்கு எது தேவையோ அதற்காக கடினமாக உழைத்தால் எதுவும் சாத்தியம் என்று நான் கற்றுக்கொண்டேன்.

ஒரு வருடகால பயிற்சி மற்றும் ஆறு மாத கால வேலைப் பயிற்சியின் போது, ​​நான் தொழில்நுட்ப நுணுக்கங்களில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை; பல மென் திறன்களைக் கற்றுக்கொண்டேன், ஒரு பணியிடத்தில் எப்படி நடந்துகொள்வது, பணிச்சூழலுக்கு என்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, சிக்கலைத் தீர்ப்பது, குழுப்பணி போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். பயிற்சியின் போது எனது திறன்கள் வளர்ச்சியடைவதையும், என் நம்பிக்கை உயர்வதையும், நான் கண்டேன். நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளில், ‘உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.’ எனது உலகத்தை மாற்ற இந்த சக்திவாய்ந்த ஆயுதத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி. எனக்கு இங்கு கிடைத்த வழிகாட்டிகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு இந்த அருமையான வாய்ப்பையும், அற்புதமான அனுபவத்தைம் கொடுத்த டிசிகாப் பள்ளிக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

Vignesh Selvaraj

Author Vignesh Selvaraj

Vignesh Selvaraj hails from Chennai who has successfully completed a Diploma in Mechanical Engineering. Vignesh's passion for technology has led him to complete one year of training with Palli and pursue an internship as a UI Front-End Developer at Klizer by DCKAP, where he has honed his web development skills.

More posts by Vignesh Selvaraj

Leave a Reply