Skip to main content

இனிமையான இளமைப்பருவம் :

என் பெயர் பாலமுருகன். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள் இருவரும் விவசாயம் செய்கிறார்கள். 2018ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினேன். அதில் 401 மதிப்பெண்கள் பெற்றேன். அந்த மதிப்பெண்ணை வைத்துச் சென்னை மாநகராட்சியின் தரமணியில் அமைந்துள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் (electrical and electronics engineering) பட்டயப்படிப்பை (diploma) 2021ம் ஆண்டு முடித்தேன். அதில் 80% சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான அனுபவங்களை இந்த வலைப்பதிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன்.  

உணவு உன்னைக் கொல்லும் :

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால், பட்டயப்படிப்பை முடித்தும் நான்கு மாதங்கள் வீட்டில் தான் இருந்தேன். நான்கு மாத இடைவெளிக்குப் பிறகுதான் வேலைக்குச் சென்றேன். முதன்முதலில் நான் ஒரு லிப்ட் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. மூன்று மாதங்கள் இந்த வேதனைத் தொடர்ந்தது. தொடர் வயிற்று வலிக்குக் காரணம் குடல்வாலில் ஏற்பட்ட அழற்சி (Appendix) என்றது மருத்துவ அறிக்கை. சிறுவயதில் நான் உணவை நேரத்துக்குச் சரியாகச் சாப்பிடமாட்டேன். அதன் பின்விளைவைத் தான் இப்போது சந்தித்திருந்தேன். குடல்வாலில் ஏற்பட்ட அழற்சியை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரைக் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் மருத்துவர்கள். மருத்துவர்கள் பேச்சை மீற முடியுமா என்ன? அவர்கள் சொன்னதுபோலவே ஆறுமாத காலங்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டேன். 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.             

– திருக்குறள் (அதிகாரம் – மருந்து, குறள் – 948)

இன்றியமையாத் தேவை – பணம்:

ஓய்வுக் காலத்திற்குப் பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் மேற்படிப்பு படிக்கலாம் என்ற யோசனை உதித்தது. ஆனால், என்னுடைய பெற்றோர்களிடம் மேற்படிப்பு படிக்கவைக்கப் போதுமான பணம் இல்லை. ஏழைகளிடம் கனவு இருக்கிறது. இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற உணர்ச்சி இருக்கிறது.  ஆனால், இதை மட்டும் வைத்துக்கொண்டு எந்த கல்லூரியிலும் சீட்டு வாங்கி விட முடியாதே! பணம் என்பது இன்றியமையாத் தேவை என்பதை இங்கு தான் ஒவ்வொரு ஏழை மாணவனும் உணர்கிறான். காசில்லாதக் காரணத்தினால் என் மேற்படிப்பிற்கு வீட்டில் தடை போடப்பட்டது. அதனால் நான் மேற்படிப்பைப் பற்றி யோசிப்பதை  நிறுத்திவிட்டேன். பட்டயப்படிப்பைத் தகுதியாக வைத்து மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன். 

வெற்றியை நோக்கிய எனது பயண வழிகாட்டி : டிசிகாப் பள்ளி

கணினியை அடிப்படையாகக் கொண்ட வேலைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பத்துறையில் (Information Technology) எனக்கு ஈடுபாடு அதிகம். பட்டயப்படிப்பை முடித்தவர்களுக்குரிய கணினி சார்ந்த வேலைகள் பற்றி ஆய்வு செய்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என்னுடைய கல்லூரிப் புலனக் குழுவில் டிசிகாப் பள்ளி விளம்பரத்தைப் பார்த்தேன். உடனடியாக அதில் பதிவு செய்தேன். டிசிகாப் பள்ளி பற்றியும் டிசிகாப் நிறுவனம் பற்றியும் ஆராய்ந்து பார்த்தேன். டிசிகாப் என்பது உலகின் முதன்மையான டிஜிட்டல் வர்த்தகத் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்று என்பது தெரிய வந்தது. படிப்பைத்தொடர முடியாமல் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த குறைந்த குடும்ப வருமானம் கொண்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க டிசிகாப் பள்ளியில் ஒரு வருடப் பயிற்சி வகுப்பும் (Training), ஆறுமாதப் பயிற்சியும் (Internship) வழங்குகிறது. டிசிகாப் பள்ளி என்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல வழிகாட்டியாக அமையப்போகிறது என்பதை உறுதியாக உணர்ந்தேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிசிகாப் பள்ளியின் நேர்முகத்தேர்விற்கான அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் சிறப்பாகப் பதிலளித்தேன். டிசிகாப் பள்ளியின் பயிற்சி வகுப்பிற்கு என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். இந்த செய்தியை அறிந்தவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் விரும்பிய மென்பொருள் தொழில்நுட்பத்தை என் குடும்பத்திற்கு எந்தவித செலவில்லாமல் படிக்கப் போகிறேன் என்பதே அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

நம்பிக்கையின் வித்து :

டிசிகாப் பள்ளிக்கு வந்த பிறகுதான் ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்று ஒரு நம்பிக்கை எனக்குள் வந்தது. முதல் நாள் வகுப்பில் ஜேம்ஸ் க்ளியர் எழுதிய Atomic Habits என்ற புத்தகத்தை மடிக்கணினி பையுடன் சேர்த்துத் தந்தார்கள். அந்த புத்தகம் நம்மிடம் உள்ள ஒரு தீயப் பழக்கத்தை ஒரு நல்ல பழக்கமாக எவ்வாறு மாற்றுவது எனத் தெளிவாக கூறுகிறது. இங்கு வந்த பிறகு எல்லாமே எனக்குப் புதிதாக  இருந்தது. ஏனென்றால் நான் பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ் வழியில் தான் பயின்றேன். எனக்கு ஆங்கிலம் ஓரளவு தான் தெரியும் அதுமட்டுமில்லாமல் முழுமையாகப் பேசத்தெரியாது. கல்லூரியில் நான் மின் மற்றும் மின்னணு பொறியியல் படித்ததால் எனக்குத் தொழில்நுட்பம் பற்றி ஓரளவு தான் தெரியும்.   டிசிகாப் பள்ளியில் ஆங்கிலத்தில் பேசுவதை புரிந்துக்கொள்வது, எழுதுவது மற்றும் மற்றவர்களுடன் உரையாடுவது போன்ற திறன்களைப் பற்றியும், பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் பற்றியும் அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுத்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. டிசிகாப் பள்ளியில் தான் நான் முதன்முறையாக மேடையில் பேசினேன். முதலில் பேசும்பொழுது மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது என்னால் நன்றாகப் பேச முடிகிறது. இதற்குக் காரணம் இங்கு யாரும் யாரையும் தாழ்வான எண்ணத்துடன் பார்ப்பதில்லை. டிசிகாப் பள்ளி கலாச்சாரம் எல்லோரையும் சமமாக நடத்துகிறது.

கற்கக் கற்கக் கற்கண்டானது கல்வி:

நான் ஒவ்வொரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாகக்  கற்றுக் கொண்டேன். மின்னஞ்சல், கூகுள் ஆவணம், கூகுள் நாட்காட்டி போன்ற பலவற்றையும் நான் இங்குதான் கற்றுக்கொண்டேன். டிசிகாப் பள்ளியில் முதலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை குறியீட்டு மொழிகள் (coding languages) பற்றி கற்றுக் கொடுத்தார்கள். முனையத்தில் (Terminal) ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க கொடுக்கப்படும் கட்டளைகள் பற்றிய Terminal Commands, மென்பொருள் உருவாக்கும் முறைகள், செயல்முறைகளைப் பற்றிய Design மற்றும் Marketing, Testing, Domain, Business, HTML, CSS, Basic Javascript, DBMS போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். இவையெல்லாம் ஆரம்பத்தில் எனக்கு புதியதாகவும் மற்றும் கற்றுக்கொள்வதற்கு கடினமாகவும் இருந்தது. ஆனால்  நாளுக்கு நாள் கற்றுக்கொள்ளும்போது இவை ஒவ்வொன்றும் எனக்கு எளிதாக  இருந்தது. கற்கக் கற்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. எனது கற்றல் செயல்பாடு ஆர்வமாக இருந்ததால் சற்று விரைவாகவும் கற்க முடிந்தது. டிசிகாப் பள்ளியில் வினாடி வினாத் திட்டத்தில் நான் இணைந்தேன். என்னோடு சில மாணவர்களும் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர். இதில் பணிபுரிந்ததன் மூலம் குழுவாக ஒரு வேலையை எப்படிச் செய்வது என அறிந்துகொண்டேன். நான் கற்றுக்கொண்ட அனைத்து நிரலாக்க மொழிகளையும் (programming languages) இதில் பயன்படுத்தியன் மூலம் எனக்கு இவை இன்னும் ஆழமாகப் புரிந்தது.

வகுப்புகளுக்கு அப்பாற்பட்ட கல்வி:

தொழிலுக்குத் தேவையான பாடம் வகுப்பறையில் போதிக்கப்படுகிறது. ஆனால், வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தை நாம் தான் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். டிசிகாப் பள்ளியில் நிலைமையே வேறு. ஆங்கிலம் பேசுவது, தொழில்நுட்ப திறன்கள் போன்றவை வகுப்பறைக்குள் அல்லாமல் பணியிடத்திலேயே கற்பிக்கப்பட்டால் எவ்வாறு இருக்குமோ அதுபோலவே இங்கும் கற்பிக்கப்படுகிறது. நேரத்தை எவ்வாறு சரியாக மேலாண்மை செய்வது, தலைமைத்துவத்தை எப்படி வளர்ப்பது, சக ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற வாழ்க்கைக்குத் தேவையான மென்திறன்களும் இங்கேயே கற்பிக்கப்படுகிறது. டிசிகாப் பள்ளியில் கற்றல் என்பது எப்போதும் சலிப்பு உடையதாகவே இருக்காது. நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்பொழுதும் உங்களை ஒருவர் ஊக்குவித்துப் பாராட்டிக் கொண்டே இருந்தால் அந்த வேலை உங்களுக்குக் கடினமானதாகத் தோன்றுமா என்ன? என் வாழ்க்கையிலேயே நான் அதிகமாகக் கற்றுக்கொண்டது இங்குதான். 

என் வாழ்க்கையின் நடத்துநர்கள்:

இந்த உலகிலேயே அதிகமாக ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது யார் தெரியுமா? பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்கள். அவர்கள் பின்னாடி நிற்பவர்களை, முன்னேறிச் செல்லுங்கள், இடையில் எங்கும் நிற்காதீர்கள் என்கிறார்கள். மேலும் அவர்கள் கீழே நிற்பவர்களை மேலே ஏறுங்கள், மேலே ஏறுங்கள் எப்போதும் கீழே நிற்காதீர்கள் என்கிறார்கள். எங்கிருந்து அறிவைப் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல, அது நமக்குத் தேவையானதா என்பதே முக்கியம். டிசிகாப் பள்ளியின் நிறுவனர் ஒரு சில சமயங்களில் எங்களுக்கு அறிவுரை வழங்குவார். அவர் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூட கேட்பவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். அவர் சிறிய அளவிலான செயல்களை ஒருவர் செய்தாலும் பாராட்டுவார். அவர் அடிக்கடிச் சொல்வார், ஒவ்வொருவரும் தலைவர்கள். அது சரிதான் அவரவர்கள் அவரவரின் வாழ்க்கையில் கதாநாயகர்கள்.  என் கற்றல் குட்டையைப் போலத் தேங்கி நிற்காமல், ஆறு போல் ஓடி மற்றவர்களுக்கும் பயனடைய வேண்டும் என்ற கற்றலை நான் எப்போதும் மறக்க மாட்டேன். வலைப்பதிவை நிதானமாகப் படித்தமைக்கு நன்றி, வணக்கம்.

Balamurugan Ramesh

Author Balamurugan Ramesh

Balamurugan, a trainee at DCKAP Palli, joined DCKAP after completing his Diploma in Electrical and Electronics Engineering. To chase his passion towards software engineering and Information Technology he joined Palli in 2022. He is currently getting trained on full stack web development course at Palli. Post his training he is looking to join DCKAP full time!

More posts by Balamurugan Ramesh

Join the discussion 2 Comments

Leave a Reply