Skip to main content

அனைவருக்கும் வணக்கம். இந்த வலைப்பதிவில் மிகப்பெரிய கனவுகளைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைப் பற்றியும் அவன் வாழ்வில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கக் கூடிய முக்கியமான அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாறிய வாழ்க்கைப் பயணம்..

இவன் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்து அங்கேயே தனது பள்ளிப் படிப்பை முடித்தவன். இவன் தனது பள்ளிப்பருவத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் போதே அவனது மனதில் இந்த உலகத்தைச் சுற்ற வேண்டும் என்றும் அதன் வழியாக பலதரப்பட்ட மனிதர்களையும், மொழிகளையும், அவர்களுடைய வாழ்வியலையும் அறிய வேண்டும் என்றும் ஆசையை வளர்த்தவன். அவனுடைய இந்த கனவை நனவாக்கும் விதமாக கடல்சார் படிப்பினை மேற்கொள்ள இந்துஸ்தான் கடல்சார் நிறுவனத்தின் பயிற்சியில் (Hindustan Marine Training) இணைந்து வெற்றிகரமாக ஒரு மாதம் சென்று பயிற்சியை முடித்தான். மேலும், தன்னுடைய அறிவைப் பெருக்கும் விதமாக சி.பி.சி.எல் தொழில்நுட்ப கல்லூரியில் (CPCL Polytechnic College) இணைந்து இயந்திரவியல் துறையில் (Mechanical Engineering) இரண்டு ஆண்டுகள் படித்து ஒரு பட்டயப்படிப்பையும் (Diploma) பெற்றான். பிறகு அவனது கனவை நோக்கி மீண்டும் நகர ஆரம்பித்தான். ஒரு நிறுவனத்திற்குச் சென்று, தான் படித்த இரண்டு படிப்பினை வைத்துக் கடல்சார் வேலையை வேண்டிக் கேட்டான். ஆனால், அந்த வேலைக்கு அவர்கள் கேட்ட அளவிற்கு பணம் இல்லாததாலும் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தன்னுடைய கனவினைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். இந்த நிகழ்வு அவனுடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை யோசிக்க முடியாமலும், வேறு வேலைக்குச் செல்லவும் முடியாமலும் தயங்கி நின்றான். தன்னுடைய இந்த கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் தனி அறையில் அடைந்து இருளில் தனது கடினமான நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். இப்படியே ஒரு சில நாட்கள் சென்றன.

தன்னம்பிக்கையுடன் ஒரு நேர்காணல்..

அதன் பிறகு அவனுக்கு தான் படித்தக் கல்லூரியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதன் மூலமாக டிசிகாப் பள்ளியைப் பற்றி அவனுக்குத் தெரிய வந்தது. மனதில் பல குழப்பங்கள். தன்னுடைய கனவாக நினைத்த வேலைக்குச் செல்ல முடியாமல் வேறு வேலைக்குச் செல்வது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்குமா? என்ற கேள்வி அடிக்கடி அவன் உள்ளத்தில் எழுந்துக் கொண்டே இருந்தது. அப்போது தான் அவன் தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். தனக்காக இல்லை என்றாலும் தன்னுடைய குடும்பத்திற்காகவாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். எனவே, மனதை ஓரளவிற்கு திசைத் திருப்பிக்கொண்டு டிசிகாப் பள்ளி நேர்காணலுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். அரை மனதுடன் நேர்காணல் தினத்தன்று டிசிகாப் நிறுவனத்தை அடைந்தான். குடும்ப சூழல் அவன் கண்ணெதிரே வந்து வந்துச் சென்றது. எனவே, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து மிகவும் தன்னம்பிக்கையுடன் நேர்காணலை அணுகினான்.

கற்க பிறந்தது ஆர்வம்..

ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். அதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு வரப்போகிறது என்று நம்புங்கள். ஏனென்றால், இந்த கதையின் நாயகனுக்கும் அப்படித்தான் நடந்தது. ஆனால், அவனுக்கு அப்போது அது புரியவில்லை. மென்பொருள் துறை ஆரம்பத்தில் அவனுக்குக் கடினமானதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக அவர்களை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவனுடைய ஆர்வம் தினம் தினம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பள்ளிக்கு வர ஆரம்பித்தான்.

தோய்வில் இருந்து மீட்சி..

டிசிகாப் பள்ளியில் அவனுக்கு HTML, CSS, JAVASCRIPT, PHP போன்ற வலைதள மொழிகள் எடுக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதை படிக்கும்போது சிறிது கடினமாக உணர்ந்தான். டிசிகாப் பள்ளியில் சேர்வதற்கு முன்புவரை அவன் இயந்திரவியல் பற்றியே படித்திருந்ததால், அவன் மென்பொருள் துறையில் மேற்கொண்டு படிப்பதற்கு ஆரம்பத்தில் சிறிது கடினப்பட்டான். ஆனாலும் அவன் தனது வாழ்க்கை மற்றும் படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால், அவன் நம்பிக்கையை கைவிடவில்லை. டிசிகாப் பள்ளியில் தொழில் சார்ந்து மட்டுமல்லாமல் மென்திறன் (Soft Skills), நேர மேலாண்மை (Time management) போன்ற வகுப்புகளும் எடுக்கப்பட்டது. அதன் மூலமாக தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நேரத்தை முறையாகப் பிரித்து எவ்வாறு வேலையை கொடுத்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது பற்றியும் கற்றுக்கொண்டான். அது மேலும் அவனுக்கு இந்த வேலையின் மீதான நாட்டத்தை அதிகப்படுத்த காரணமாக அமைந்தது. அவன் சோர்ந்து போகும் போதெல்லாம் டிசிகாப் பள்ளியில் இருந்த பயிற்சியாளர்கள் பேச்சு அவனை மட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தியது. அது அவன் கொண்டிருந்த அனைத்துவிதச் சோர்விலிருந்தும் அவனை வெளிக்கொண்டு வந்தது. மேலும், அவனுடன் படித்த அனைவருக்கும் அவனை மிகவும் பிடித்துப் போனதால் அவர்கள் அனைவரும் அவனை ஊக்கப்படுத்தினர். இவை அனைத்தும் அவனுக்குத் தன் கனவினை விடவும் தற்போது செய்து கொண்டிருக்கக் கூடிய வேலையின் மீது நல்ல எண்ணம் தோன்ற காரணமாக அமைந்தது. அவனும் இந்த வேலையை நேசிக்க ஆரம்பித்து தற்போது இந்த வேலையை தன்னுடைய கனவாக மாற்றிக்கொண்டு சிறப்பாக வேலை செய்து கொண்டு வருகிறான். அவன் டிசிகாப் பள்ளியில் இணைந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களை வெற்றிகரமாக கடந்து இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் வேறு யாரும் இல்லை நான் தான். இந்த கதை என்னுடைய நிஜ வாழ்க்கை. நான் டிசிகாப் பள்ளி மாணவன் கிஷோர் குமார். டிசிகாப் பள்ளி என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தது. என் கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்து இன்னும் மேலே பறக்க வைத்தது. ஏட்டுக் கல்வியை மட்டுமல்லாமல் பயிற்சியுடன் பெற்ற கல்வி என் மனதில் அழியாமல் இடம் பெற்றது. என் வாழ்க்கையின் சிறந்த நண்பர்கள் இங்கு தான் கிடைத்தார்கள். ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் டிசி காப் பள்ளி என்னை புது மனிதனாக மாற்றியது. கடைசி வரை பொறுமையாக வாசித்தமைக்கு மிக்க நன்றி.

Kishore Kumar C

Author Kishore Kumar C

Kishore Kumar is an aspiring backend developer and has switched his career from Mechanical Engineering to Software. He joined DCKAP Palli an year back and as been a top performer ever since he joined Palli. He is working hard to get himself placed inside DCKAP.

More posts by Kishore Kumar C

Leave a Reply